

லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா அணியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் சாலாவுக்கும் பயிற்சியாளருக்கும் இடையே மாறுபட்ட கருத்துகள் இருந்ததை ஊடகங்களின் மூலமாக தெரிய வந்தன.
லிவர்பூல் தோல்வியும்... ஒதுக்கப்படும் சாலாவும்...
நடப்பு சாம்பியனான லிவர்பூல் அணி சமீபத்திய 7-8 போட்டிகளில் மிகவும் மோசமாக தோல்வியுற்றது. இதனைத் தொடர்ந்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா ஒதுக்கப்பட்டு வந்தார்.
லிவர்பூல் அணி வரலாற்றிலே மூன்றாவதாக அதிக கோல்கள் அடித்தவர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3-4 போட்டிகளில் சாலா அணியில் இடம்பெறவில்லை என்பது சர்ச்சையானது. இதனால், பொறுமை இழந்த அவர் பேட்டி ஒன்றில், “நான் அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளேன். காரணமே இல்லாமல் என்னை ஒதுக்குகிறார்கள். சிலர் நான் லிவர்பூல் அணியில் இருக்கக் கூடாதென விரும்புகிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
இந்தப் பேட்டி கால்பந்து உலகில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
பயிற்சியாளர் சொல்வதென்ன?
இந்நிலையில், பயிற்சியாளர் இது குறித்து பேசியதாவது:
இன்று காலை சாலாவுடன் பேசினேன். நாளை என்ன நடக்கும் என்பது குறித்து பேசினோம். அடுத்தமுறை நான் அவர் குறித்து பேசும்போது அவர் என்னுடன் இருப்பார்.
நீங்கள் எவ்வளவுதான் கேட்டாலும் இதற்கு மேல் பதில் சொல்ல முடியாது. அவருடைய பிரதிநிதிகளும் என்னுடைய பிரதிநிதிகளும் கடந்த வாரமே அதிகமாக பேசினோம். இன்று மீண்டும் பேசினோம்.
ஒரு கிளப்பாக நாங்கள் முடிவெடுக்கிறோம். அதில் நானும் ஒருவன் அவ்வளவே. இருந்தும் அணியில் யாரை விளையாட வைக்கலாம் என்பது என்னிடமே இருக்கிறது.
அவரை இருக்க வேண்டாம் என சொல்வதற்கு என்னிடம் காரணம் இல்லை. அநேகமாக இதிலே பதில் இருக்கிறது என்றார்.
முகமது சாலா வேறு அணிக்கு மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக லிவர்பூல் அணியில் ஒரு போட்டியாவது விளையாடுவாரா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.