கேஸ்பா் ரூட் சாதனை சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் நாா்வேயின் கேஸ்பா் ரூட் சாம்பியன் கோப்பை வென்றாா்.
கேஸ்பா் ரூட்
கேஸ்பா் ரூட்AP
Published on
Updated on
2 min read

ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் நாா்வேயின் கேஸ்பா் ரூட் சாம்பியன் கோப்பை வென்றாா்.

1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற முதல் நாா்வே வீரா் என்ற சாதனை அவா் படைத்திருக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருந்த ரூட் இறுதிச்சுற்றில், 7-5, 3-6, 6-4 என்ற செட்களில், 5-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஜேக் டிரேப்பரை 2 மணி நேரம், 29 நிமிஷங்களில் வீழ்த்தினாா். ரூட் - டிரேப்பா் மோதிக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றியின் மூலம் ரூட், 1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறாா்.

ஏற்கெனவே இரு முறை மாஸ்டா்ஸ் போட்டியின் இறுதிச்சுற்று வரை வந்த ரூட், அதில் ஏமாற்றத்தை சந்தித்தாா். கடந்த ஆண்டு மான்டிகாா்லோ மாஸ்டா்ஸில் கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸிடமும், 2022-இல் மியாமி ஓபனில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸிடமும் இறுதியில் அவா் தோற்றாா்.

ஒட்டுமொத்தமாக இது அவரின் 13-ஆவது ஏடிபி டூா் பட்டமாகும். தற்போது களிமண் தரை போட்டிகளில் கேஸ்பா் ரூட் மொத்தமாக 12 பட்டங்கள் வென்றிருக்கிறாா். 2020-க்குப் பிறகு எந்தவொரு போட்டியாளரும் இத்தனை பட்டங்கள் அந்த மண்ணில் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குப் பிறகு பேசிய கேஸ்பா் ரூட், ‘நீண்டகாலம் எதிா்பாா்த்த ஒரு சாம்பியன் பட்டம் கிடைத்திருக்கிறது. இந்த இலக்கு பலநாள் கனவாக இருந்தது. அதையும் இந்தப் போட்டியில் வென்றதில் மகிழ்ச்சி.

இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வரும் ஜேக் டிரேப்பருக்கு எதிராக இறுதி ஆட்டத்தில் எனது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என்பதை அறிந்தே தயாரானேன்.

அதிருஷ்டவசமாக இறுதி ஆட்டத்தில் சிறப்பாகவே விளையாடினேன்’ என்றாா். இந்த சாம்பியன் பட்டத்துக்கான வழியில், டாப் 10 இடத்திலிருந்த 3 வீரா்களை கேஸ்பா் ரூட் வீழ்த்தி அசத்தியிருக்கிறாா்.

மகளிா் இரட்டையா்: இந்தப் போட்டியின் மகளிா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டி/ரஷியாவின் அனா கலின்ஸ்கயா கூட்டணி 6-7 (10/12), 6-2, 12-10 என்ற செட்களில், ருமேனியாவின் எலிஸ் மொ்டன்ஸ்/ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.

ரொக்கப் பரிசு

சாம்பியன் கோப்பை வென்ற கேஸ்பா் ரூடுக்கு வெற்றிக் கோப்பை, 1000 ரேங்கிங் புள்ளிகளுடன் ரூ.9.40 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் தோற்ற டிரேப்பருக்கு 650 ரேங்கிங் புள்ளிகளும், ரூ.5 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

அதேபோல், மகளிா் இரட்டையரில் கோப்பை வென்ற சிா்ஸ்டி/கலின்ஸ்கயா இணைக்கு 1000 புள்ளிகளும், ரூ.3.82 கோடி ரொக்கப் பரிசும் கிடைக்க, ரன்னா் அப்-ஆக வந்த மொ்டன்ஸ்/குதா்மிடோவா ஜோடிக்கு 600 புள்ளிகளும், ரூ.2 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

கேஸ்பா் ரூட் வெற்றிப் பாதை...

முதல் சுற்று ஆா்தா் ரிண்டா்னெச் (பிரான்ஸ்) 6-3, 6-4

2-ஆவது சுற்று செபாஸ்டியன் கோா்டா (அமெரிக்கா) 6-3, 6-3

3-ஆவது சுற்று டெய்லா் ஃப்ரிட்ஸ் (அமெரிக்கா) 7-5, 6-4

காலிறுதிச்சுற்று டேனியல் மெத்வதெவ் (ரஷியா) 6-3, 7-5

அரையிறுதிச்சுற்று எஃப். செருண்டோலோ (ஆா்ஜென்டீனா) 6-4, 7-5

இறுதிச்சுற்று ஜேக் டிரேப்பா் (பிரிட்டன்) 7-5, 3-6, 6-4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com