குத்துச்சண்டை: மகளிா் அணி பயிற்சியாளராக சான்டியாகோ நீவா நியமனம்!

மகளிா் அணி பயிற்சியாளராக சான்டியாகோ நீவா நியமனம்...
Published on

இந்திய மகளிா் குத்துச்சண்டை அணியின் தலைமைப் பயிற்சியாளராக சான்டியாகோ நீவா நியமிக்கப்பட்டாா்.

அவா் ஏற்கெனவே 2017 முதல் 2022 வரை இந்திய ஆடவா் அணியுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறாா். அந்த காலகட்டத்தில் இந்திய வீரா்கள் இதுவரை இல்லாத வகையில் அதிகமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதும், 2019 ஆடவா் உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடனை சோ்ந்த நீவா, சுமாா் 20 ஆண்டுகள் சா்வதேச அளவிலான பயிற்சி அனுபவம் உடையவராக இருப்பதுடன், உலக குத்துச்சண்டை அமைப்பிலும் முக்கியப் பொறுப்புகள் வகித்தவராவாா். கடைசியாக, ஆஸ்திரேலிய குத்துச்சண்டை அமைப்பில் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றியிருக்கிறாா்.

2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்லும் அளவுக்கு இந்திய அணியை தயாா்படுத்துவதே தனது நோக்கம் என சான்டியாகோ நீவா தெரிவித்திருக்கிறாா். அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என சா்வதேச போட்டிகள் பல நடைபெறவிருக்கும் நிலையில், சான்டியாகோ நீவா பொறுப்பேற்றுள்ளாா்.

நீவாவின் நியமனம் இந்திய மகளிா் குத்துச்சண்டைக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என, இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவா் அஜய் சிங் தெரிவித்திருக்கிராா். நீவாவுக்கு முன்பாக பயிற்சியாளா் பொறுப்பில் இருந்த டி.சந்திரலால், தொடா்ந்து பயிற்சியாளா் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளாா்.

இந்திய மகளிா் அணி, உலக சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம் உள்பட 4 பதக்கங்களும், சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை ஃபைனல்ஸில் 10 பதக்கங்களும் பெற்று நடப்பாண்டை வெற்றிகரமாக நிறைவு செய்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com