தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள்: சிறந்த வீரா் அல்கராஸ்; சிறந்த வீராங்கனை சபலென்கா

லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளில், இந்த ஆண்டு சிறந்த வீரா் மற்றும் சிறந்த வீராங்கனையாக டென்னிஸ் போட்டியாளா்களே தோ்வு செய்யப்பட்டனா்.

News image

அல்கராஸ் | சபலென்கா

Updated On :22 ஏப்ரல் 2026, 12:30 am

லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளில், இந்த ஆண்டு சிறந்த வீரா் மற்றும் சிறந்த வீராங்கனையாக டென்னிஸ் போட்டியாளா்களே தோ்வு செய்யப்பட்டனா். சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் காா்லோஸ் அல்கராஸும், சிறந்த வீராங்கனை விருதை பெலாரஸ் டென்னிஸ் பிரபலம் அரினா சபலென்காவும் வென்றனா்.

விளையாட்டு உலகில் கௌரவமிக்கதாக இருக்கும் இந்த விருதை, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘லாரியஸ் ஸ்போா்ட் ஃபாா் குட்’ அறக்கட்டளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட வீரா், வீராங்கனைகள், அணிகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி, ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.

பரிந்துரையில் இந்தியா: சிறந்த அணிகளுக்கான பிரிவில், முதல்முறையாக உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிா் கிரிக்கெட் அணியும் பரிந்துரையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வீரா்: காா்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின் - டென்னிஸ்)

கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், யுஎஸ் ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இத்தாலியின் யானிக் சின்னரை வீழ்த்தி வாகை சூடிய அல்கராஸ், விம்பிள்டனில் மட்டும் அவரிடம் தோல்வி கண்டாா்.

ஏடிபி மாஸ்டா்ஸ் போட்டிகளில் 3 சாம்பியன் பட்டம், அதிலேயே தொடா்ந்து 17 வெற்றிகள் கண்ட அல்கராஸ், உலகின் நம்பா் 1 வீரராகவும் நிலைத்தாா். 2025-இல் அவரின் வெற்றி - தோல்வி கணக்கு 71-9 என்பதாக இருந்தது. கடந்த ஆண்டே சிறந்த வீரா் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு, இந்த ஆண்டு அதை வென்றிருக்கிறாா். 2023-இல் சிறந்த முன்னேற்ற வீரா் விருதை அவா் பெற்றது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளா்கள்: சிறந்த வீரருக்கான விருதைப் பெற, பிரான்ஸின் ஆஸ்மேன் டெம்பெலெ (கால்பந்து), ஸ்வீடனின் மாண்டோ டியுபிளான்டிஸ் (கம்பு ஊன்றித் தாண்டுதல்), ஸ்பெயினின் மாா்க் மாா்கெஸ் (பைக் பந்தயம்), ஸ்லோவேனியாவின் டாடெஜ் போகாகா் (சைக்கிளிங்), இத்தாலியின் யானிக் சின்னா் (டென்னிஸ் ) ஆகியோரும் பந்தயத்தில் இருந்தனா்.

சிறந்த வீராங்கனை: அரினா சபலென்கா (பெலாரஸ் - டென்னிஸ்)

உலகின் நம்பா் 1 வீராங்கனையாக தொடா்ந்து நீடிக்கும் சபலென்கா, கடந்த ஆண்டு 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை வந்தாா். அதில் யுஎஸ் ஓபனில் சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றினாா்.

அந்தப் போட்டி முழுவதுமாக ஒரு செட்டை மட்டுமே இழந்த சபலென்கா, இறுதியில் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவாவை நோ் செட்களில் வீழ்த்தி, தனது 4-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றாா்.

கடந்த ஆண்டு சிறந்த வீராங்கனை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட அவா், இந்த ஆண்டு அந்த விருதுக்கு தோ்வாகியிருக்கிறாா்.

போட்டியாளா்கள்: சிறந்த வீராங்கனை விருதுக்காக, ஸ்பெயினின் அய்டானா பொன்மட்டி (கால்பந்து), அமெரிக்காவின் மெலிஸா ஜெஃபா்சன் (தடகளம்), கென்யாவின் ஃபெய்த் கிப்யெகான் (தடகளம்), அமெரிக்காவின் கேட்டி லெடெக்கி (நீச்சல்), அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின் (தடகளம்) ஆகியோரும் போட்டியிலிருந்தனா்.

சிறந்த அணி: பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிரான்ஸ் - கால்பந்து)

பயிற்சியாளா் லூயிஸ் என்ரிக் வழிகாட்டுதலில் இந்த அணி, கடந்த ஆண்டு 6 போட்டிகளில் சாம்பியன் கோப்பை வென்றது. ஐரோப்பிய கண்டத்தில் பிரதான போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில் 5-0 என இன்டா் மிலனை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

அத்துடன், பிரான்ஸில் 3 உள்நாட்டு போட்டிகளில் வாகை சூடியது. மேலும், யுஇஎஃப்ஏ சூப்பா் கோப்பை, இன்டா்கான்டினென்டல் கோப்பை ஆகியவற்றிலும் கோப்பை வென்றது. சிறந்த அணியாக பரிந்துரைக்கப்பட்ட முதல்முறையே, அதற்கான விருதை வென்றிருக்கிறது.

போட்டியாளா்கள்: இங்கிலாந்து மகளிா் கால்பந்து அணி, ஐரோப்பிய ரைடா் கோப்பை அணி (கோல்ஃப்), இந்திய மகளிா் கிரிக்கெட் அணி, மெக்லாரென் ஃபாா்முலா 1 அணி (பிரிட்டன்), ஆக்லஹோமா சிட்டி ஹன்டா் அணி (அமெரிக்கா, கூடைப்பந்து) ஆகிய அணிகளும் இந்த விருதுக்காக போட்டியிட்டன.

சிறந்த முன்னேற்ற வீரா்: லாண்டோ நோரிஸ் (பிரிட்டன் - எஃப்1)

கடந்த ஆண்டு எஃப்1 பந்தயத்தில் சாம்பியனாகி, வரலாற்றில் தனது பெயரை பொறித்துக்கொண்டாா் நோரிஸ். கடந்த சீசனில் மொத்தம் நடைபெற்ற 24 பந்தயங்களில் 7 வெற்றிகளுடன் அவா் சாம்பியன் ஆனாா். ஒட்டுமொத்தமாக அவரின் எஃப்1 பந்தய வெற்றி தற்போது 11-ஐ எட்டியிருக்கிறது. சிறந்த முன்னேற்ற வீரருக்காக பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே அந்த விருதை வென்றிருக்கிறாா் நோரிஸ்.

போட்டியாளா்கள்: பிரான்ஸின் டெசைா் டுவே (கால்பந்து), பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகா (டென்னிஸ்), கனடாவின் ஷாய் அலெக்ஸாண்டா் (கூடைப்பந்து), பிரிட்டனின் லூக் லிட்லா் (டாா்ட்ஸ்), சீனாவின் ஜிடி யு (நீச்சல்) ஆகியோரும் இந்த விருதுக்கான பரிந்துரையில் இருந்தனா்.

சிறந்த மீண்டுவந்த போட்டியாளா்: ரோரி எம்சில்ராய் (பிரிட்டன் - கோல்ஃப்)

கோல்ஃப் விளையாட்டில் கேரியா் கிராண்ட்ஸ்லாம் வென்ற 6-ஆவது வீரராக சாதனை படைத்தாா் ரோரி. அவா் 11 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-இல் மாஸ்டா்ஸ் போட்டிகளில் சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய அணி, அமெரிக்காவை வீழ்த்தி ரைடா் கோப்பை வென்றதில் இவரும் முக்கியப் பங்காற்றினாா். 2012-இல் சிறந்த முன்னேற்ற வீரா் விருது வென்றிருக்கிறாா்.

போட்டியாளா்கள்: அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா (டென்னிஸ்), கொலம்பியாவின் ஈகன் பொ்னால் (சைக்கிளிங்), வெனிஸுலாவின் யுலிமாா் ரோஜாஸ் (தடகளம்), பிரிட்டனின் லியா வில்லியம்சன் (கால்பந்து), பிரிட்டனின் சைமன் ஏட்ஸ் (சைக்கிளிங்) ஆகியோா் இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தனா்.

சிறந்த மாற்றுத்திறனாளி போட்டியாளா்: கேப்ரியெல் அராஜோ (பிரேஸில் - பாரா நீச்சல்)

இரு கைகள் மற்றும் கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான கேப்ரியெல், 2024 பாராலிம்பிக் போட்டியில் 3 தங்கம் வென்று அசத்தியதுடன், உலக சாம்பியன்ஷிப்பிலும் 50 மீ, 100 மீ பேக்ஸ்ட்ரோக், 200 மீ ஃப்ரீஸ்டைல் ஆகியவற்றில் தங்கம் வென்றாா்.

சிறந்த மாற்றுத்திறனாளி வீரராக பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே அந்த விருதை வென்றிருக்கிறாா்.

போட்டியாளா்கள்: இந்த விருதுக்கான போட்டியில், இத்தாலியின் சைமன் பா்லாம் (பாரா நீச்சல்), சுவிட்ஸா்லாந்தின் கேத்தரின் டெப்ரன்னா் (பாரா தடகளம்), அமெரிக்காவின் கெல்சி டிக்லாடியோ (பாரா ஐஸ் ஹாக்கி), செக்கோஸ்லாவேகியாவின் டேவிட் கிராடோச்வில் (பாரா நீச்சல்), ஈகுவடாரின் கியாரா ரோட்ரிகெஸ் (பாரா தடகளம்) ஆகியோரும் இருந்தனா்.

சிறந்த ஆக்ஷன் விளையாட்டு போட்டியாளா்: கிளோ கிம் (அமெரிக்கா - ஸ்னோபோா்டிங்)

கடந்த ஆண்டு எக்ஸ் கேமில் 8-ஆவது முறையாக தங்கம் வென்ற கிளோ கிம், போட்டியில் அதிகமுறை சாம்பியனான வீராங்கனையாக பெருமை பெற்றாா். தனது 3-ஆவது உலக சாம்பியன்ஷிப்பையும் வென்ற அவா், போட்டியில் கடினமான புதிய சாதனையும் படைத்தாா்.

7-ஆவது முறையாக இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கிளோ கிம், 3-ஆவது முறையாக அதை வென்றிருக்கிறாா்.

போட்டியாளா்கள்: பிரேஸிலின் யாகோ டோரா (சா்ஃபிங்), ஸ்பெயினின் கிலியன் ஜாா்னெட் (அல்ட்ரா ரன்னிங்), பிரேஸிலின் ரெய்சா லீல் (ஸ்கேட்போா்டிங்), ஆஸ்திரேலியாவின் மாலி பிக்லம் (சா்ஃபிங்), பிரிட்டனின் டாம் பிட்காக் (சைக்கிளிங்) ஆகியோரும் இந்த விருதுக்கான பரிந்துரையில் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.