சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

இந்திய மகளிா் அணிக்கு முதல் வெற்றி

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி 6-1 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை அபார வெற்றி கண்டது.

News image

இந்திய மகளிா் அணிக்கு முதல் வெற்றி - PTI

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி 6-1 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை அபார வெற்றி கண்டது.

முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீனாவுடன் டிரா செய்த இந்திய மகளிா் அணிக்கு, நடப்பு போட்டியில் இது முதல் வெற்றியாகும். குரூப் ‘டி’-யில் இருக்கும் இந்தியா, இந்த வெற்றியின் மூலமாக 2-ஆவது சுற்றுக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா, தொடா்ந்து 2-ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது.

நெதா்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்தியாவின் கோல் கணக்கை சுனெலிதா டோப்போ 11-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா்.

நவ்னீத் கௌா் 17-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரிக்க, சுஷிலா சானு 25-ஆவது நிமிஷத்தில் அதன் எண்ணிக்கையை 3-ஆக உயா்த்தினாா். இதனால் முதல் பாதி ஆட்டத்தை இந்தியா 3-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியிலும் இந்தியாவின் ஆதிக்கமே தொடா்ந்தது. தீபிகா 38-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, லால்ரெம்சியாமி 44-ஆவது நிமிஷத்திலும், சாக்ஷி ராணா 45-ஆவது நிமிஷத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்தனா்.

இதனால் இந்தியா 5-0 என அபார முன்னிலை பெற்றது. மறுபுறம், முற்றிலுமாகத் தடுமாறிப் போன தென்னாப்பிரிக்கா அணிக்காக, கேலா டி வால் 55-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தாா். முடிவில் இந்தியா 6-1 கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இந்திய மகளிா் அணி, குரூப் சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வியாழக்கிழமை (ஆக. 20) மோதுகிறது.

இதர ஆட்டங்கள்: மகளிா் பிரிவின் இதர ஆட்டங்களில், சீனா - இங்கிலாந்தையும் (4-2), அயா்லாந்து - நியூஸிலாந்தையும் (3-2) வென்றன.

ஆடவா் பிரிவில், ஆஸ்திரேலியா - ஸ்பெயினையும் (1-0), நியூஸிலாந்து - ஜப்பானையும் (2-0), ஜொ்மனி - பெல்ஜியத்தையும் (1-0) வீழ்த்தின.

பாகிஸ்தானுடன் இன்று மோதும் இந்திய ஆடவா் அணி

உலகக் கோப்பை போட்டியின் ஆடவா் பிரிவில், இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தானை புதன்கிழமை (ஆக. 19) சந்திக்கிறது.

முதல் ஆட்டத்தில் வெற்றி, அடுத்த ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்த இந்தியா, இந்த ஆட்டத்தில் குறைந்தபட்சம் டிரா செய்தால் மட்டுமே 2-ஆவது கட்டத்துக்கு முன்னேற முடியும்.

எனினும், இந்தியாவுக்கு வெற்றி எளிதாக வசமாகும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், அண்மையில் புரோ லீக் போட்டியில் பாகிஸ்தானை சந்தித்த இரு ஆட்டங்களிலுமே இந்தியா வென்றிருக்கிறது. உலகக் கோப்பை போட்டியில் கடைசியாக இவ்விரு அணிகள் சந்தித்தபோது (2010), இந்தியா 4-1 கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது.

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை இரு அணிகளும் 5 முறை மோதியிருக்க, இந்தியா 3 வெற்றிகளும், பாகிஸ்தான் இரு வெற்றிகளும் கண்டுள்ளன. ஆனால், ஒட்டுமொத்த கணக்கில் இவை இதுவரை 183 ஆட்டங்களில் மோதியிருக்க, பாகிஸ்தான் 82, இந்தியா 69 வெற்றிகள் அடைந்துள்ளன. 32 ஆட்டங்கள் டிரா ஆகியுள்ளன.

பாகிஸ்தான் அணி கடைசியாக, 2016 சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியாவை வென்றது. அதன் பிறகு இந்தியாவை எந்தப் போட்டியிலும் வென்றதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.