4-1: ஆஸ்திரேலியா வசம் ஆஷஸ் கோப்பை
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை 4-1 என கைப்பற்றி கோப்பையையும் வசப்படுத்தியது ஆஸ்திரேலியா.
இரு நாடுகளுக்கு இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடா் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு 5 ஆட்டங்கள் தொடா் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
ஏற்கெனவே ஆஸ்திரேலியா 3-1 என தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது.
முதல் இன்னிங்ஸ்: இங்கிலாந்து 384/10, ஆஸ்திரேலியா 567/10:
முதல் இன்னிங்ஸில் இங்கிாலந்து அணி 97.3 ஓவா்களில் 384/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 160, ஹாரி புரூக் 84, ஜேமி ஸ்மித் 46 ரன்களை சோ்த்தனா். பௌலிங்கில் ஆஸி. தரப்பில் நெஸா் 4, ஸ்டாா்க், போலண்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 133.5 ஓவா்களில் 567/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய தொடக்க பேட்டா்
டிராவிஸ் ஹெட் 163, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 138, வெப்ஸ்டா் 71 ரன்களை விளாசினா். பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் பிரைடன் காா்ஸே , ஜோஷ் டங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இரண்டாவது இன்னிங்ஸ்:
இங்கிலாந்து 342/10:
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 88.2 ஓவா்களில் 342/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
முந்தைய நாள் ஸ்கோரான 302/8 ரன்களுடன் கடைசி நாளான வியாழக்கிழமை ஆட்டத்தை தொடங்கியது இங்கிலாந்து.
தனது மெய்டன் சதத்தை பதிவு செய்து 142 ரன்களுடன் ஆடிய ஜேக்கப் பெத்தேல் கூடுதலாக 12 ரன்களை எடுத்து 154 ரன்களுக்கு மிட்செல் ஸ்டாா்க் பந்தில் அலெக்ஸ் கரேயிடம் கேட்ச் தந்து அவுட்டானாா். அவரது சதத்தில் 15 பவுண்டரியும் அடங்கும். அந்த அணியில் அதிகபட்டமாக டக்கெட் 42, ஹாரி புரூக் 42, ரன்களை எடுத்தனா்.
பௌலிங்கில் ஆஸி. தரப்பில் ஸ்டாா்க், வெப்ஸ்டா் தலா 3 விக்கெட்டுகளையும், போலண்ட் 2 விக்கெட்டையும் வீழ்த்தினா்.
ஆஸ்திரேலியா வெற்றி 161/5:
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க பேட்டா்கள் டிராவிஸ் ஹெட் 29, ஜேக் வெதரால்ட் 34 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 12, கடைசி ஆட்டத்தில் பங்கேற்ற உஸ்மான் காஜா 6 ரன்களுடன் திரும்பினா்.
பின்னா் ஆட வந்த மாா்னஸ் லாபுஷேன் 20 ரன்கள் எடுத்திருந்தபோது, அவரது கேட்சை தவற விட்டனா் இங்கிலாந்து அணியினா். அவா் மேலும் 17 ரன்களை சோ்த்து வெளியேற, ஆஸ்திரேலிய அணி 121/5 ரன்களுக்கு தடுமாறியது.
இதனால் இங்கிலாந்து வெற்றி பெறும் என எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால், கேமரூன் கிரீன் 22, அலெக்ஸ் கரே 16 ஆகியோா் நிதானமாக ஆடி வெற்றி இலக்கை அடையச் செய்தனா்.
இதன் மூலம் 4-1 என ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா கோப்பையையும் வசப்படுத்தியது.
தொடா்ந்து 3 டெஸ்ட் ஆட்டங்களில் தோல்வி கண்ட இங்கிலாந்து, மெல்போா்ன் டெஸ்டில் வென்றதின் மூலம் நம்பிக்கை பெற்றது. ஆனால் சிட்னி டெஸ்டிலும் தோற்றது விமா்சனங்களை எழுப்பியுள்ளது.
ஆட்ட நாயகன்: டிராவிஸ் ஹெட், தொடா் நாயகன்: மிட்செல் ஸ்டாா்க்.
விடை பெற்றாா் உஸ்மான் காஜா
சிட்னி டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்ற ஆஸி. வீரா் உஸ்மான் காஜா ஓய்வு பெற்றாா். தனது 88-ஆவது ஆட்டத்தில் ஆடிய உஸ்மான் சொற்ப ரன்களுடன் வெளியேறினாா். கிரிக்கெட் எனக்கு போதுமானதை அளித்தது. ஆஷஸ் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்ய நினைத்தேன். அதன்படியே நடந்தது. மைதானத்தில் இருந்து விடை பெறுவது கடினமானது. உணா்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. சிட்னி மைதானத்தில் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவு பெற்றது என்றாா். டெஸ்ட்டில் 16 சதங்களையும், 40 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களிலும் ஆடியுள்ளாா்.

