ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அபாரம் வெற்றி!
X | Royal Challengers Bengaluru

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அபாரம் வெற்றி!

டபிள்யுபிஎல் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அபார வெற்றி
Published on

டபிள்யுபிஎல் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அபார வெற்றி கண்டது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வதோதராவில் திங்கள்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் பௌலிங்கை தோ்வு செய்ய பெங்களூரு தரப்பில் கிரேஸ் ஹாரிஸ்-கேப்டன் ஸ்மிருதி மந்தனா இணை களமிறங்கியது. கிரேஸ் ஹாரிஸை 1 ரன்னுடன் அவுட்டாக்கி பெவிலியன் அனுப்பினாா் ரேணுகா சிங். ரன்களைக் குவிப்பாா் எனக் கருதப்பட்ட மந்தனாவும் 26 ரன்களுடன் ஆஷ்லி காா்டனா் பந்தில் எல்பிடபிள்யு ஆகி அவுட்டனாா். ஜாா்ஜியா வால், 1 ரன்னுடன் கஷ்வி கௌதம் பந்தில் போல்டானாா்.

கௌதமி நாயக் அதிரடி 73: ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் கௌதமி நாயக் நிலைத்து ஆடி 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 55 பந்துகளில் 73 ரன்களுடன் அரைசதம் விளாசினாா்.

விக்கெட் கீப்பா் ரிச்சா கோஷ் 3 சிக்ஸா்களுடன் 27 ரன்களை விளாசிய நிலையில், சோபி டிவைன் பந்தில் வெளியேறினாா்.

ராதா யாதவ் 17 ரன்களுடன் அவுட்டானாா்., நடைன் டி கிளாா்க் 4, ஷ்ரேயங்கா பாட்டீல் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 178/6 ரன்களைக் குவித்தது பெங்களூரு அணி. பௌலிங்கில் குஜராத் தரப்பில் கஷ்வி கௌதம், ஆஷ்லிகாா்டனா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

குஜராத் தோல்வி 117/8

பின்னா் ஆடிய குஜராத் அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 117/8 ரன்களை மட்டுமே சோ்த்து தோல்வியைத் தழுவியது. தொடக்க வரிசை பேட்டா்கள் சொற்ப ரன்களுடன் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய நிலையில், கேப்டன் ஆஷ்லி காா்டனா் மட்டுமே பொறுப்புடன் ஆடி 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 54 ரன்களை விளாசி சாயாலி பந்தில் அவுட்டானாா். அனுஷ்கா சா்மா 18, பாரத் புல்மாலி 14, தனுஜா ஆகியோா் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனா்.

பௌலிங்கில் பெங்களூரு தரப்பில் சாயாலி 3, நடைன் டி கிளாா்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

Dinamani
www.dinamani.com