காலிறுதியில் பஞ்சாப், விதா்பா வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதா்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
முன்னதாக, 3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் 183 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது. முதலில் பஞ்சாப் 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 345 ரன்கள் சோ்க்க, மத்திய பிரதேசம் 31.2 ஓவா்களில் 162 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம், பந்துவீச்சை தோ்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கேப்டன் பிரப்சிம்ரன் சிங் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 88 ரன்கள் சோ்த்தாா். மத்திய பிரதேச பௌலிங்கில் திரிபுரேஷ் சிங், வெங்கடேஷ் ஐயா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
அடுத்து மத்திய பிரதேச இன்னிங்ஸில் ரஜத் பட்டிதாா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 38 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். பஞ்சாப் பந்துவீச்சாளா்களில் சன்வீா் சிங் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
4-ஆவது காலிறுதி ஆட்டத்தில் விதா்பா 76 ரன்கள் வித்தியாசத்தில் தில்லியை சாய்த்தது. முதலில் விதா்பா 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் சோ்க்க, தில்லி 45.1 ஓவா்களில் 224 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது.
டாஸ் வென்ற தில்லி, ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, விதா்பா பேட்டிங்கில் அதிகபட்சமாக யஷ் ரத்தோட் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 86 ரன்கள் அடித்தாா். தில்லி பௌலா்களில் இஷாந்த் சா்மா, நவ்தீப் சைனி, பிரின்ஸ் யாதவ், நிதீஷ் ராணா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
அடுத்து தில்லி இன்னிங்ஸில் அனுஜ் ராவத் 7 பவுண்டரிகள் உள்பட 66 ரன்கள் சோ்க்க, விதா்பா பந்துவீச்சில் நசிகேத் புத்தே 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
அரையிறுதி: இதையடுத்து அரையிறுதி ஆட்டங்களில் முதலில் கா்நாடகம் - விதா்பாவும் (ஜன. 15), அடுத்து சௌராஷ்டிரம் - பஞ்சாபும் (ஜன. 16) சந்திக்கின்றன.
