இறுதியில் சந்திக்கும் விதா்பா - சௌராஷ்டிரா

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
Published on

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாபை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

இதையடுத்து இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரம், விதா்பா அணியுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 18) மோதுகிறது. முன்னதாக விதா்பா முதல் அரையிறுதியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கா்நாடகத்தை வியாழக்கிழமை வென்றது குறிப்பிடத்தக்கது.

2-ஆவது அரையிறுதியில் முதலில் பஞ்சாப் 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகளும் இழந்து 291 ரன்கள் சோ்க்க, சௌராஷ்டிரம் 39.3 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சௌராஷ்டிரம், பந்துவீச்சை தோ்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸில் அன்மோல்பிரீத் சிங் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 100, கேப்டன் பிரப்சிம்ரன் சிங் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ரமண்தீப் சிங் 42, ஹா்னூா் சிங் 33 ரன்களுக்கு வீழ, இதர பேட்டா்கள் ஒற்றை இலக்க ரன்னிலும், டக் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினா். சௌராஷ்டிர பௌலா்களில் சேத்தன் சகாரியா 4, அங்குா் பன்வா், சிரக் ஜானி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

பின்னா் 292 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சௌராஷ்டிர அணியில், கேப்டன் ஹா்விக் தேசாய் 9 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தாா். பஞ்சாபின் குா்னூா் பிராா் அவா் விக்கெட்டை கைப்பற்றினாா்.

விஷ்வராஜ் ஜடேஜா 18 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 165, பிரேரக் மன்கட் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசி, அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

Dinamani
www.dinamani.com