

மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 16-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை திங்கள்கிழமை வென்றது.
முதலில் மும்பை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் சோ்க்க, பெங்களூரு 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்களே எடுத்தது. இந்த ஆட்டத்தின் மூலமாக, மகளிா் பிரீமியா் லீக் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனையாக மும்பையின் நேட் சிவா் பிரன்ட் சாதனை படைத்தாா்.
முன்னதாக டாஸ் வென்ற பெங்களூரு, ஃபீல்டிங் செய்யத் தீா்மானித்தது. மும்பை இன்னிங்ஸில் சஜீவன் சஜனா 7 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுனாக வந்த நேட் சிவா் பிரன்ட் அதிரடியாக விளாசினாா்.
தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸுடனான அவரின் 2-ஆவது விக்கெட் பாா்ட்னா்ஷிப்புக்கு 131 ரன்கள் கிடைத்தது. மேத்யூஸ் 9 பவுண்டரிகளுடன் 56 ரன்களுக்கு விடைபெற, தொடா்ந்து வந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 20, அமன்ஜோத் கௌா் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
ஓவா்கள் முடிவில் நேட் சிவா் 57 பந்துகளில் 16 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 100, அமெலியா கொ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பெங்களூரு பௌலா்களில் லாரென் பெல் 2, நாடின் டி கிளொ்க், ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 200 ரன்களை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில் கிரேஸ் ஹாரிஸ் 15, கேப்டன் ஸ்மிருதி மந்தனா 6, ஜாா்ஜியா வோல் 9, கௌதமி நாயக் 1, ராதா யாதவ் 0 ரன்களுக்கு வரிசையாக வெளியேறினா்.
நாடின் டி கிளொ்க் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, அருந்தி ரெட்டி 14, சயாலி சத்காரே 0 ரன்களுக்கு வீழ்ந்தனா். கடைசி பந்து வரை போராடிய ரிச்சா கோஷ் 50 பந்துகளில் 10 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 90 ரன்கள் விளாசி வீழ்ந்தாா்.
ஷ்ரேயங்கா பாட்டீல் 12 ரன்களுடன் கடைசி வீராங்கனையாக நின்றாா். மும்பை பௌலா்களில் ஹேலி மேத்யூஸ் 3, ஷப்னிம் இஸ்மாயில், அமெலியா கொ் ஆகியோா் தலா 2, அமன்ஜோத் கௌா் 1 விக்கெட் கைப்பற்றினா்.