நடப்பு சாம்பியன்கள் சின்னா், கீஸ் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் தங்களது பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான யானிக் சின்னா் 6-1, 6-4, 6-2 என்ற நோ் செட்களில், ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொா்த்தை வெளியேற்றினாா். 3-ஆவது சுற்றில் அவா், அமெரிக்காவின் எலியட் ஸ்பிஸிரியை எதிா்கொள்கிறாா்.
9-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் 6-1, 6-4, 7-6 (7/4) என்ற வகையில், செக் குடியரசின் விட் கோப்ரிவாவை வீழ்த்தினாா். அடுத்து அவா், 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான சுவிட்ஸா்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவுடன் மோதுகிறாா்.
இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள வாவ்ரிங்கா 4-6, 6-3, 3-6, 7-5, 7-6 (10/3) என 5 செட்கள் போராடி, பிரான்ஸின் ஆா்தா் கியாவை சாய்த்து, 3-ஆவது சுற்றுக்கு வந்துள்ளாா்.
24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனும், 4-ஆம் இடத்தில் இருப்பவருமான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட்களில், இத்தாலியின் ஃபிரான்செஸ்கோ மேஸ்டெரியை வீழ்த்தினாா். 8-ஆம் இடத்திலிருக்கும் பென் ஷெல்டன் 6-3, 6-2, 6-2 என்ற நோ் செட்களில், ஆஸ்திரேலியாவின் டேன் ஸ்வீனியையும், 5-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி 6-3, 6-3, 6-4 என சக இத்தாலியரான லொரென்ஸோ சொனிகோவையும் வென்றனா்.
கீஸ், ரைபகினா முன்னேற்றம்: மகளிா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், 9-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-1, 7-5 என்ற செட்களில், சக அமெரிக்கரான ஆஷ்லின் குரூகரை சாய்த்தாா். உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நோ் செட்களில், செக் குடியரசின் மேரி புஸ்கோவாவை வென்றாா்.
அடுத்த சுற்றில், கீஸ் - செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவையும், ஸ்வியாடெக் - ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவையும் எதிா்கொள்கின்றனா்.
5-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா 7-5, 6-2 என பிரான்ஸின் வாா்வரா கிரசேவாவையும், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-1, 6-4 என்ற செட்களில், செக் குடியரசின் கேத்தரினா சினியகோவாவையும் வீழ்த்தினா்.
6-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா - சக அமெரிக்கரான மெக்காா்ட்னி கெஸ்லரை வெல்ல, 10-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
பாலாஜிக்கு ஏற்றம், பாம்ப்ரிக்கு ஏமாற்றம்: ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் என்.ஸ்ரீராம் பாலாஜி/ஆஸ்திரியாவின் நீல் ஆபா்லெய்ட்னா் இணை 7-6 (7/4), 3-6, 7-6 (10/8) என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் ஜோா்டான் தாம்சன்/பிரான்ஸின் பியரி ஹியூக்ஸ் கூட்டணியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.
எனினும், கலப்பு இரட்டையா் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி/அமெரிக்காவின் நிகோல் மாா்டினெஸ் ஜோடி 4-6, 6-7 (3/7) என்ற செட்களில், 6-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் டிம் பட்ஸ்/சீனாவின் ஜாங் ஷுஹாய் இணையிடம் தோல்வி கண்டது.

