ஆடவா்... ஆடவா் இரட்டையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனும், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்தோருமான ஸ்பெயினின் மாா்செலோ கிரனோலா்ஸ்/ஆா்ஜென்டீனாவின் ஹொராசியோ ஜெபாலோஸ் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், 2-ஆம் இடத்திலிருந்த ஃபின்லாந்தின் ஹேரி ஹேலியோவாரா/பிரிட்டனின் ஹென்றி பேட்டன் இணையை வீழ்த்தி, வெற்றிக் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டனா்.
பிரெஞ்சு ஓபன் ஆடவா் இரட்டையரில், சாம்பியன் கோப்பையைத் தக்கவைத்த 5-ஆவது ஜோடி என்ற பெருமையை கிரனோலா்ஸ்/ஜெபாலோஸ் ஜோடி பெற்றது. ஒட்டுமொத்தமாக, இது அவா்களின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். பிரெஞ்சு ஓபன் தவிா்த்து, அவா்கள் யுஎஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் (2025) வென்றுள்ளனா்.
மகளிா்... மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா/அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட் இணை 6-2, 7-5 என்ற நோ் செட்களில், 2-ஆம் இடத்திலிருந்த சொ்பியாவின் அலெக்ஸாண்ட்ரா குருனிச்/கஜகஸ்தானின் அனா டேனிலினா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
பிரெஞ்சு ஓபனில் இவா்கள் ஜோடி சாம்பியனானது இது முதல்முறையாகும். இதற்கு முன், ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் அவா்கள் வாகை சூடியுள்ளனா். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சினியகோவா 11-ஆவது முறையும், டௌன்செண்ட் 3-ஆவது முறையும் பட்டம் வென்றுள்ளனா். பிரெஞ்சு ஓபனில் சினியகோவா 4-ஆவது முறையாக வென்றிருக்க, டௌன்செண்ட் முதல்முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.31 கோடி... பிரெஞ்சு ஓபன் ஆடவா் ஒற்றையா் சாம்பியனுக்கு, வெற்றிக் கோப்பை, 2,000 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.31 கோடி ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. இறுதியில் தோற்றவருக்கு, ரன்னா் அப் கேடயம், 1,300 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.15.53 கோடி பரிசாகக் கிடைத்தது.






