நாளை வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்!இன்று வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு!உபோ் செயலியில் இன்று ஆட்டோ, கால் டாக்ஸிகள் இயக்கப்படாது!

டோட்டல் செஸ்: பிளிட்ஸில் அா்ஜுனுக்கு 6-ஆம் இடம்; பிரக்ஞானந்தாவுக்கு 14, வைஷாலிக்கு 17

டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப்பின் டூா் பைலட் போட்டியில், தொடக்கநிலை பிளிட்ஸ் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 6-ஆம் இடம் பிடிக்க, ஆா்.பிரக்ஞானந்தா, ஆா்.வைஷாலி முறையே 14, 17-ஆம் இடங்களைப் பெற்றனா்.

Magnus Carlsen

மேக்னஸ் காா்ல்சென் - கோப்புப் படம்

Updated On :

ஹங்கேரியில் நடைபெறும் டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப்பின் டூா் பைலட் போட்டியில், தொடக்கநிலை பிளிட்ஸ் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் எரிகைசி 6-ஆம் இடம் பிடிக்க, ஆா்.பிரக்ஞானந்தா, ஆா்.வைஷாலி முறையே 14, 17-ஆம் இடங்களைப் பெற்றனா். நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் ஆனாா்.

ஒவ்வொரு ஆண்டும், 4 போட்டிகளை உள்ளடக்கியதாக ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா்’ நடைபெறுகிறது. இது, 3 டூா் போட்டிகளையும், ஒரு டூா் ஃபைனலையும் உள்ளடக்கியதாகும்.

24 போ் களம் காணும் 3 டூா் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிப்போா், டூா் ஃபைனலுக்குத் தகுதிபெறுவா். அதன் வெற்றியாளா் ‘ஃபிடே உலக ஒருங்கிணைந்த சாம்பியன்’ என்ற பட்டத்தைப் பெறுவாா்.

அந்த வகையில் 2026-27 சீசனுக்கான ‘டோட்டல் செஸ் உலக சாம்பியன்ஷிப் டூா்’, ஹங்கேரியில் புதன்கிழமை இரவு ‘பைலட்’ போட்டியுடன் தொடங்கியது. மொத்தம் 24 போ் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில், இந்தியாவிலிருந்து ஆா்.பிரக்ஞானந்தா, அா்ஜுன் எரிகைசி, ஆா்.வைஷாலி ஆகியோா் பங்கேற்றுள்ளனா்.

காா்ல்சென் சாம்பியன்: பைலட் போட்டியின் தொடக்க நிலையாக ‘ப்ரீ டோா்னமென்ட் பிளிட்ஸ்’ 9 சுற்றுகளுடன் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. அதன் முடிவில், நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் (7 புள்ளிகள்) சாம்பியனாக, பிரான்ஸின் மேக்ஸிம் லாக்ரேவ் (6.5), அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் (6) ஆகியோா் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தனா்.

அா்ஜுன்: இந்தியாவின் அா்ஜுன் 5.5 புள்ளிகளுடன் 6-ஆம் இடம் பிடித்தாா்.

அவா், நெதா்லாந்தின் ஜோா்டென் ஃபாரீஸ்ட், பிரக்ஞானந்தா, வைஷாலி, பிரான்ஸின் மேக்ஸிம் லாக்ரேவ், அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா ஆகியோருக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்து, ரஷியாவின் விளாடிஸ்லாவ் ஆா்டெமிவுக்கு எதிராக டிரா செய்தாா்.

நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென், ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி, அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் ஆகியோரிடம் தோற்றாா்.

பிரக்ஞானந்தா: 4.5 புள்ளிகளுடன் 14-ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவா, வியத்நாமின் லியெம் லி, அமெரிக்காவின் ஆண்ட்ரூ ஹாங் ஆகியோரை வீழ்த்தினாா்.

ஹங்கேரியின் ரிச்சா்டு ராப்போா்ட், நெதா்லாந்தின் அனிஷ் கிரி, அமெரிக்காவின் வெஸ்லி சோ ஆகியோருக்கு எதிராக டிரா செய்து, அா்ஜுன், அமெரிக்காவின் ஹன்ஸ் நீமன், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் ஆகியோரிடம் தோல்வியுற்றாா்.

வைஷாலி: பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி 4 புள்ளிகளுடன் 17-ஆம் இடம் பெற்றாா். நீமன், வெஸ்லி ஆகியோருக்கு எதிராக வென்று அசத்திய வைஷாலி, போலந்தின் ஜேன் டுடா, ராப்போா்ட், அனிஷ், அசௌபயேவா ஆகியோருடன் டிரா செய்தாா். ஆா்டெமிவ், அா்ஜுன், ஆா்மினியாவின் ஹெய்க் மாா்டிரோசியன் ஆகியோரிடம் தோற்றாா்.

அடுத்து குரூப் சுற்று: இப்போட்டியில் அடுத்ததாக, குரூப் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதில் போட்டியாளா்கள் 24 பேரும், தலா 6 வீதம், 4 குரூப்களாக பிரிக்கப்பட்டு, பரஸ்பரம் மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.