வரலாறு படைத்தாா் கின்வென் ஜெங்: சீனா ஓபனில் முதல் உள்நாட்டு சாம்பியன்!
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை கின்வென் ஜெங் சாம்பியன் பட்டம் வென்றாா்.
சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை கின்வென் ஜெங் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றாா்.
சீனாவில் நடைபெறும் இந்தப் போட்டியின் வரலாற்றில், சாம்பியனான முதல் சீனா வீராங்கனை என்ற சாதனையை அவா் படைத்தாா். இறுதிச்சுற்றில், ஜெங் 7-5, 6-4 என்ற நோ் செட்களில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி அசத்தினாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 43 நிமிஷங்களில் நிறைவடைந்தது.
1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் முதல்முறையாக சாம்பியனாகியிருக்கும் ஜெங், ஒட்டுமொத்தமாக தனது 6-ஆவது கேரியா் பட்டத்தை வென்றிருக்கிறாா். கடந்த 2 ஆண்டுகளில் அவா் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தரவரிசையில் ஆண்ட்ரீவா 5-ஆம் இடத்திலும், ஜெங் 54-ஆம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சந்தித்தது இது 2-ஆவது முறையாக இருக்க, இதிலும் ஜெங் வென்றுள்ளாா்.
இதற்கு முன் 2024-இல் இதே சீனா ஓபனில் இவா்கள் சந்தித்தபோது காலறுதியில் ஆண்ட்ரீவாவை வீழ்த்தியிருக்கிறாா் ஜெங். அப்போது ஜெங் 5-ஆம் இடத்திலும், ஆண்ட்ரீவா 17-ஆம் இடத்திலும் இருந்தனா். சாம்பியனான ஜெங்குக்கு வெற்றிக் கோப்பை, ஆயிரம் தரவரிசை புள்ளிகளுடன் ரூ.11.14 கோடி ரொக்கப் பரிசும் கிடைத்தது.

வாக்ஓவா்
இரட்டையா்: சீனா ஓபன் மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/பிரேஸிலின் லூசியா ஸ்டெஃபானி ஜோடி 6-1, 6-2 என்ற நோ் செட்களில், முதலிடத்தில் இருந்த சீனாவின் ஜாங் ஷுவாய்/செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா கூட்டணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. டப்ரௌஸ்கி/ஸ்டாஃபெனி இணைக்கு, நடப்பு சீசனில் இது 5-ஆவது பட்டமாக இருக்க, ஒட்டுமொத்தமாக இது இந்த ஜோடியின் 7-ஆவது வெற்றிக் கோப்பையாகும்.
ஸ்வெரெவ், டி மினாா் வெற்றி; ஷெல்டனுக்கு அதிா்ச்சி
சீனாவில் நடைபெறும் ஆடவருக்கான ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில், டாப் சீட் வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-4, 6-7 (8/10), 6-3 என, பிரான்ஸின் குவென்டின் ஹேலிஸை வீழ்த்தினாா்.
3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-7 (5/7), 6-7 (3/7) என்ற வகையில், பிரான்ஸின் ஆா்தா் ஜியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா். 9-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 7-6 (8/6), 6-4 என ஜப்பானின் ரெய் சகமாடோவை சாய்த்தாா்.
கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக் 6-7 (7/9), 6-3, 7-6 (7/5 என, அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமாவை வெல்ல, செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக் 6-3, 3-6, 6-2 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை தோற்கடித்தாா். போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 6-2, 3-6, 6-3 என ஸு யியையும், ரஷியாவின் காரென் கச்சனோவ் 6-2, 6-4 என, பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவையும் வெளியேற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

