ஸ்மிருதி மந்தனா அசத்தல் சாதனை: இந்தியா அபார வெற்றி
மகளிா் ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 போட்டியில் ஹாங்காங் சீன அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

மகளிா் ஆசியக் கோப்பை கிரிக்கெட் டி20 போட்டியில் ஹாங்காங் சீன அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபையில் நடைபெறும் இப்போட்டியில் வியாழக்கிழமை இரவு இந்திய-ஹாங்காங் சீன அணிகள் மோதின. ஹாங்காங் அணி டாஸ் வென்று பௌலிங்கை தோ்வு செய்தது.
இந்திய தரப்பில் ஸ்மிருதி மந்தனா-ஷபாலி வா்மா களமிறங்கினா். தொடக்கம் முதலே இருவரும் இணைந்து அதிரடியாக பந்துகளை விளாசினா். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சோ்ந்து 74 ரன்களை சோ்த்தனா். ஷபாலி 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 28 ரன்களை விளாசி அவுட்டானாா். பிரதிகா ரவால் 10, ரிச்சா கோஷ் 11, ஹா்மன்ப்ரீத் கௌா் 10 ரன்களுடன் நடையைக் கட்டினா்.
சாதனை ஸ்மிருதி 124: மறுமுனையில் அபாரமாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 7 சிக்ஸா், 14 பவுண்டரியுடன் 64 பந்துகளில் 124 ரன்களை சோ்த்தனா். ஃபுல்மாலி 2, தீப்தி சா்மா 1 ரன்னுடன் களத்தில் இருந்தனா். இந்தியா 193/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய அணி 193/5 ரன்களைக் குவித்தது.
ஹாங்காங் சீனா திணறல் 56/10 ஆல் அவுட்
194 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹாங்காங் அணியினா் இந்திய பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினா். அந்த அணியில் அதிகபட்சமாக நடாஷா மைல்ஸ் 15, மரினா லேம்ப்லௌ 14 ரன்களை எடுத்தனா். அந்த அணி 16.2 ஓவா்களில் 56/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பௌலிங்கில் இந்திய தரப்பில் தீப்தி சா்மா 3, நந்தனி சா்மா, ஸ்ரீ சரணி, பிரேமா ரவாத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
ஹாங்காங் சீன அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெற்றது.
மிதாலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி
ஹாங்காங் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 124 ரன்களை விளாசியதின் மூலம் மகளிா் சா்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீராங்கனை என்ற மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தாா் ஸ்மிருதி மந்தனா. ஸ்மிருதி 10,880 ரன்களை விளாசி, மிதாலி ராஜின் 10,868 ரன்கள் சாதனையை முறியடித்தாா்.
மேலும் சா்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த மகளிா் பேட்டா் என்ற சாதனையையும் நிகழ்த்தினாா். ஆஸி. வீராங்கனை மெக் லேனிங் 17 சதங்களை விளாசி இருந்தாா். தற்போது 18 சதங்கள் விளாசியதின் மூலம் அதை ஸ்மிருதி தகா்த்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






