ஒருநாள், டெஸ்ட் கேப்டன் பதவிகளில் இருந்தும் விராட் கோலி விலகுவாரா?: ரவி சாஸ்திரி பதில்
By DIN | Published On : 13th November 2021 11:40 AM | Last Updated : 13th November 2021 11:40 AM | அ+அ அ- |

பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக வருங்காலத்தில் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக வாய்ப்புண்டு என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார் ரவி சாஸ்திரி. அவருடைய ஒப்பந்தம் முடிவடைந்ததால் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் ரவி சாஸ்திரி கூறியதாவது:
கடந்த 5 வருடங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி நெ.1 இடத்தில் உள்ளது. பதவியிலிருந்து அவர் விலக நினைத்தால் அல்லது சோர்வாக உணர்ந்தால், பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்பினால் - இது வருங்காலத்தில் நடக்கலாம், உடனடியாக இது நடக்காது என்றாலும் என்றாவது ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகலாம். கேப்டன் பதவியைப் பொறுத்தவரை அவருடைய முடிவு தான். அப்படியே வேண்டாம் என்றால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சொல்லலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தொடரவேண்டும். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தூதராக அவர் உள்ளார். அதனால் அதில் அவர் தொடர்ந்து விளையாடலாம்.
நான் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள், சிறந்த கிரிக்கெட் அணி எதுவென்று. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்தியா தான் சிறந்த அணி எனச் சொல்வார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்து இரு டெஸ்ட் தொடர்களை வென்றதும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிப்பதும் சிறப்பான தருணங்கள் என்றார்.