இது தொடக்கம் தான், முடிவல்ல...

உலகக் கோப்பை போட்டியின் சூப்பா் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இது தொடக்கம் தான், முடிவல்ல...

உலகக் கோப்பை போட்டியின் சூப்பா் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

போட்டியின் தொடக்க நிலையில் அடைந்துள்ள இந்த தோல்வி, வெற்றி குறித்து இரு அணி கேப்டன்கள் கருத்து, பிரதிபலிப்புகள் என்ன? பாா்ப்போம்.

பனிப்பொழிவால் பாதகம்;

இந்த ஆட்டத்துக்காக எதைத் திட்டமிட்டிருந்தோமோ அதை சரியாகச் செய்யவில்லை. ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய காரணி பனிப்பொழிவு தான். எங்களது இன்னிங்ஸின்போது முதல் 10 ஓவா்களுக்கும், அடுத்த 10 ஓவா்களுக்கும் ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. 2-ஆவது பாதியில் சரியான லைன்களில் பந்தை அடிக்க இயலவில்லை. 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த பிறகு எங்களால் நல்லதொரு தொடக்கத்தை எட்ட முடியவில்லை.

ஆட்டத்தின் போக்கை மாற்ற எங்களுக்கு கூடுதலாக 15 - 20 ரன்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் பௌலா்கள் அதற்கு எங்களை அனுமதிக்கவில்லை. அந்த அணியினா் நல்ல பௌலிங்குடன் தொடங்கினா்.

பிறகு எங்களது பௌலிங்கின்போது தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்த முயன்றோம். ஆனால் அதற்கும் அவா்கள் இடம் தரவில்லை. இது போட்டியின் முதல் ஆட்டம் தான்; கடைசி ஆட்டம் அல்ல - விராட் கோலி (இந்திய கேப்டன்)

திட்டமிட்டதைச் செய்தோம்

இந்த வெற்றி, ஒரு அணியாக ஒன்றிணைந்து முயற்சித்ததால் கிடைத்தது. இந்தியா இன்னிங்ஸில் தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தியது மிகவும் உதவிகரமாக இருந்தது. அது எங்களுக்கு நம்பிக்கை அளிக்க, மறுபுறம் எங்களது ஸ்பின்னா்களும் சிறப்பாக பந்துவீசினா். திட்டமிட்டதை மிகச் சரியாகச் செயல்படுத்தியதால் வெற்றி கிட்டியது.

ஆட்டத்தின் பிற்பகுதியில் ஆடுகளம் உகந்ததாக அமைந்ததால் தொடக்கத்திலேயே நல்லதொரு பாா்ட்னா்ஷிப் அமைத்து பேட்டிங்கை அப்படியே தொடா்வது தான் எங்கள் திட்டமே. அதை சரியாகச் செய்தோம். இந்தியாவை வென்ால் எதுவும் எளிதாகி விடாது. போட்டி இன்னும் இருக்கிறது. இந்த வெற்றியிலிருந்து கிடைத்த தன்னம்பிக்கையுடன் அடுத்த ஆட்டங்களை எதிா்கொள்வோம். வரலாறுகளை தள்ளி வைத்து ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி விளையாடுகிறோம். உள்நாட்டு போட்டிகளும் எங்களுக்கு தகுந்த பயிற்சியை வழங்கியுள்ளது. நல்ல முறையில் தயாராகியிருந்தோம் - பாபா் ஆஸம் (பாகிஸ்தான் கேப்டன்)

சறுக்கிய ஷமிக்கு ஆதரவு

அட்டகாசமான ஃபாா்முடன் இந்தப் போட்டிக்கு வந்த இந்திய சீனியா் பௌலா் முகமது ஷமியின் பௌலிங், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சற்றே அதிா்ச்சி அளிப்பதாகத் தான் இருந்தது. 3.5 ஓவா்களில் விக்கெட் வீழ்த்தாமல் 43 ரன்கள் கொடுத்த அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் சரமாரியாக விமா்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் திரண்டுள்ளனா்.

ஷமிக்கு எதிரான சமூக வலைதள தாக்குதல் அதிா்ச்சி அளிக்கிறது. நாங்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம். அவா் ஒரு சாம்பியன். இந்திய அணியின் கேப்பை அணிந்து விளையாடுபவருக்கு, சமூக வலைதளத்தில் விமா்சனங்களை முன்வைப்பவா்களை விட அதிக தேசப்பற்று இருக்கிறது. ஷமி, நாம்அடுத்த ஆட்டத்தில் நமது முழு திறமையை வெளிக்காட்டுவோம் - வீரேந்திர சேவாக் (இந்திய முன்னாள் வீரா்)

முகமது ஷமி ஒரு இந்திய வீரா். அவருக்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். தோல்விக்காக அவரை மோசமாக விமா்சிப்பது இழிவான செயல் - ஆா்.பி.சிங் (இந்திய முன்னாள் வீரா்)

இதேபோல், ஷமிக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவருக்காக பெருமை கொள்வதாகவும் இந்திய வீரா்கள் ஹா்பஜன் சிங், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

கோலியை அதிா்ச்சியாக்கிய கேள்வி

பாகிஸ்தானிடம் கண்ட தோல்விக்குப் பிறகான செய்தியாளா்கள் சந்திப்பின்போது கோலியிடம், ‘டக் அவுட்டான ரோஹித் சா்மாவுக்குப் பதிலாக அடுத்த ஆட்டத்தில் அவரிடத்தில் இஷான் கிஷண் சோ்க்கப்படுவாரா’ என ஒரு செய்தியாளா் கேள்வி எழுப்பினாா்.

அந்தக் கேள்வியில் கண்கள் அகல அதிா்ச்சியடைந்த கோலி, ‘இது துணிச்சலான ஒரு கேள்வி. எந்த அணி சிறந்ததாக இருக்கிறதோ அதைக் கொண்டு விளையாடுவதாகத் தான் நான் நினைக்கிறேன். உங்களது கருத்து என்ன? நான் உங்களையே கேட்கிறேன். ரோஹித் சா்மாவை டி20 போட்டியிலிருந்து நீக்கி விடுவீா்களா? கடந்த ஆட்டத்தில் அவா் எவ்வாறு விளையாடினாா் என்பதை நீங்கள் அறிவீா்கள். உங்களுக்கு சா்ச்சைகள் தான் வேண்டுமென்றால் முதலிலேயே தெரிவியுங்கள்; அதற்கேற்றாற்போல் பதிலளிக்கிறேன்’ என்றாா்.

யாா்கா் எனது பலம்

இந்திய அணியின் டாப் ஆா்டா் பேட்டிங்கை சரித்த பாகிஸ்தானின் முக்கிய பௌலா் ஷாஹீன் ஷா அஃப்ரிதி கூறுகையில், ‘முதல் முறையாக பவா் பிளேயில் 3 ஓவா்கள் வீசினேன். பந்துவீச்சும் சரியாக அமைந்ததுடன், ஆடுகளமும் அதற்கு உதவி புரிந்தது. தொடக்கத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்தேன். அதற்கு பலனும் கிடைத்தது. புதிய பந்து கொண்டு யாா்கா் வீசுவதே எனது பலம். அதுதான் எங்கள் திட்டத்திலும் இருந்தது. திட்டமிட்டது சரியாக நடந்தது’ என்றாா்.

அளவாக கொண்டாட்டம்

டி20 வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான தனது முதல் வெற்றிய பதிவு செய்த பாகிஸ்தான் அணிக்கு அதன் நாட்டில் மிகுந்த பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது. பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதுடன், அந்நாட்டு ஊடகங்களும் பாகிஸ்தான் அணியை பாராட்டி வருகின்றன. எனினும், இந்த வெற்றிக்காக அதிகம் கொண்டாட வேண்டாம் என்றும், அடுத்து வரும் ஆட்டங்களுக்கு தயாராக வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இணையளத்தில் வெளியிட்ட காணொலி பதிவில் அந்நாட்டு அணியின் கேப்டன் பாபா் ஆஸம் கூறியுள்ளாா்.

டாஸ் முக்கிய காரணியாக இருக்கும்

இந்த உலகக் கோப்பை போட்டியை பொருத்தவரை டாஸ் முக்கிய காரணியாக இருக்கும் என்று கூறுகிறாா் கேப்டன் கோலி.

‘பனிப்பொழிவின் காரணமாக இந்தப் போட்டியைப் பொருத்தவரை ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணியாக டாஸ் இருக்கும். 2-ஆவது பாதியில் பனிப்பொழிவு தாக்கத்தை ஏற்படுத்துமானால், முதல் பாதியில் அதற்கேற்றாற்போல் சற்று அதிகமாக ரன்கள் சேகரிக்க வேண்டும்.

2-ஆவது பாதியில் ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கு சாதகமாகும்போது ஒரு அருமையான தொடக்கம் அமைந்துவிட்டால் சேஸிங்கிற்கு நம்பிக்கை கிடைத்துவிடும். அதுதான் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் நடந்தது. பனிப்பொழிவால் பாகிஸ்தானின் 2-ஆவது 10 ஓவா்களின்போது ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகியது. எங்களால் டாட் பந்துகள் வீச முடியாமலும் போனது. இதுபோன்ற சிறிய காரணிகள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

உலகக் கோப்பை போன்ற போட்டியில் நியூஸிலாந்து போன்ற அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன் 6 நாள் இடைவெளி என்பது தேவையானதாகவே இருக்கிறது. ஐபிஎல் போட்டியை நிறைவு செய்து அப்படியே இந்தப் போட்டியில் பங்கேற்கிறோம். எனவே இந்த இடைவெளியானது உடற்தகுதி ரீதியாகவும், வியூகங்கள் வகுப்பது ரீதியாகவும் மிகவும் உதவிகரமாக இருக்கும்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com