டி20 உலகக் கோப்பை: 7 பந்துகள் மட்டும் விளையாடி புதிய சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்
By DIN | Published On : 30th October 2021 11:26 AM | Last Updated : 30th October 2021 11:26 AM | அ+அ அ- |

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே இந்தியா, நியூஸி. அணிகளை வென்றுள்ள பாகிஸ்தான் தொடா்ந்து ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்கிற இக்கட்டான நிலைமையில் கரிம் ஜனத் வீசிய 19-வது ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து பாகிஸ்தான் அணிக்கு அற்புதமான வெற்றியை வழங்கினார் 30 வயது ஆசிப் அலி. 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த ஆசிப் அலி, ஆட்ட நாயகன் விருதைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் முழுமையாக நடைபெற்ற டி20 ஆட்டத்தில் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு ஆட்ட நாயகன் விருதை வென்ற வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார் ஆசிப் அலி. இதற்கு முன்பு இந்தியாவின் தினேஷ் கார்த்திக், நிடாஹஸ் கோப்பைப் போட்டி இறுதிச்சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராக 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். அவருடைய சாதனையை முறியடித்துள்ளார் ஆசிப் அலி.