
ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவாக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அந்த அணியை பாராட்டியுள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கயானாவில் உள்ள ப்ராவிடன்ஸ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் வலுவாக இருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அந்த அணியை பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களிடம் மிகச் சிறந்த பந்துவீச்சு வரிசை இருக்கிறது. டி20 லீக் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் அதிகம் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் தங்களது ஆட்டத்தை மேலும் மேம்படுத்திக்கொண்டு வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர்களுக்கு அதிக அளவிலான அனுபவம் அண்மைக் காலமாக கிடைத்து வருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதையும் நாம் பார்த்தோம். அவர்கள் மிகவும் திறன் வாய்ந்த அணி. உலகத் தரத்திலான பந்துவீச்சாளரான ரஷித் கான் ஆப்கானிஸ்தான் அணியில் இருக்கிறார். நவீன் உல் ஹக் மற்றும் ஃபஸல்ஹக் ஃபரூக்கி போன்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது மிகவும் சவாலானது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.