
டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தானின் தோல்வியை பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கருப்பு தினம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பையில் டல்லாஸின் கிராண்ட் பிரைரி மைதானத்தில் நேற்று (ஜூன் 6) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கிரிக்கெட்டில் பெரிய அளவில் அனுபவம் இல்லாத அமெரிக்க அணி, டி20 உலகக் கோப்பையின் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
கிரிக்கெட்டில் பெரிய அளவில் அனுபவமில்லாத அமெரிக்காவிடம் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததை, அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்த தினத்தை பாகிஸ்தான் கிரிக்கெட்டின் கருப்பு தினம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் முன்வைத்த விமர்சனங்கள் பின்வருமாறு:
யூனிஸ் கான்
அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி முக்கியமான தருணங்களில் பல தவறான முடிவுகளை எடுத்துவிட்டது. சூப்பர் ஓவரில் இடதுகை பந்துவீச்சாளருக்கு எதிராக ஃபகர் ஸமான் ஸ்டிரைக்கில் இருந்திருக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற மோசமான தோல்விகளில் இருந்துதான் கற்றுக் கொள்ள முடியும். இனிவரும் போட்டிகளை வாழ்வா? சாவா? போட்டியாக நினைத்து பாபர் அசாமும் மற்ற பாகிஸ்தான் வீரர்களும் விளையாடுவார்கள் என நம்புகிறேன்.
வாசிம் அக்ரம்
பாகிஸ்தான் அணியின் செயல்பாடு பரிதாபகரமாக இருந்தது. பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடிய அனுபவமில்லாத அமெரிக்க அணிக்கு எதிராக அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் அணி விளையாடியது போல தெரியவில்லை. சில வீரர்கள் மிகவும் மோசமாக ஃபீல்டிங் செய்தார்கள்.
மோஷின் கான்
அமெரிக்காவுக்கு எதிரானது வெறும் தோல்வி மட்டுமல்ல. பாகிஸ்தான் வீரர்களின் மனநிலை பார்ப்பதற்கு பரிதாபகரமாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் அமெரிக்க அணியை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக நினைக்கிறேன். சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.
ஓமைர் அலாவி
அமெரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்த தினம், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றின் கருப்பு தினம். கடைசி வரை வெற்றி பெறுவதற்காக போராடுவது பாகிஸ்தான் அணியின் சிறப்பு மற்றும் பெருமை.
ஜாவத் மியாண்டாட்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அமெரிக்க அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அனுபவம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை கிரிக்கெட்டில் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடிய அனுபவம் இல்லாத அமெரிக்க அணி வீழ்த்தியது மிகப் பெரிய விஷயம். அமெரிக்க வீரர்கள் சிறப்பாக ஃபீல்டிங் செய்தார்கள். அருமையாக கேட்ச் பிடித்தார்கள்.
நடாஷா (பாபர் அசாம் ரசிகை)
பாகிஸ்தானால் அமெரிக்க அணியையே வெற்றி பெற முடியாவிட்டால், அவர்களைக் காட்டிலும் பல மடங்கு பலம் வாய்ந்த இந்தியாவுக்கு எதிராக எப்படி வெற்றி பெறுவார்கள். பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதைப் பார்க்க முடியாது என நினைக்கிறேன். இந்த உலகக் கோப்பையும் பாகிஸ்தானுக்கு இல்லை என்பது பாகிஸ்தான் அணி வீரர்களின் முகத்தில் தெளிவாக தெரிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.