ஐபிஎல் தொடரில் விளையாடாதது சிறந்த முடிவு: ஆஸ்திரேலிய வீரர்
உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது தனது சிறந்த முடிவு என ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் பில் சால்ட் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் எடுத்து அபார தொடக்கத்தைத் தந்தனர்.
இருப்பினும், இவர்கள் இருவரது விக்கெட்டினையும் ஆடம் ஸாம்பா கைப்பற்றினார். இறுதியில், இங்கிலாந்து அணியால் 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டினை ஆடம் ஸாம்பா வீழ்த்தியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த நிலையில், உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியது தனது சிறந்த முடிவு என ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரைக் கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் விலகுவது சிறப்பானதான இருக்குமென நினைத்தேன். நான் சோர்வாக இருந்தேன். குடும்பத்துடன் நேரம் செலவிடம் வேண்டும் எனவும் நினைத்தேன். அதனால், அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அணியில் எனக்கான இடத்தினை உறுதிசெய்ய கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஆரோன் ஃபின்ச் போன்ற கேப்டன் கிடைத்தது எனது அதிர்ஷ்டம். அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் மார்ஷும் எனக்கு ஆதரவளித்தனர். அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஆடம் ஸாம்பா 28 ரன்கள் விட்டுக் கொடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரின் விக்கெட்டினையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.