
மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடவுள்ள போட்டிகளில் இந்திய அணியில் முகமது சிராஜுக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று (ஜூன் 12) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் வெறும் 9 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளில் விளையாடவுள்ள போட்டிகளில் இந்திய அணி இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை அணியில் சேர்க்குமானால், முகமது சிராஜ் தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்குக்கு அணியில் இடம் கிடைக்க வழிவிட வேண்டுமென அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசிய விதம் மற்றும் டி20 போட்டிகளில் அவர் பந்துவீசும் விதம் சிறப்பாக உள்ளது. அவரது சிறப்பான செயல்பாடுகள் அவரை முகமது சிராஜைக் காட்டிலும் முதல் தெரிவாக பார்க்க வைப்பதாக நினைக்கிறேன். ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவை தவிர்த்து இரண்டு வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெறும் பட்சத்தில், ஜஸ்பிரித் பும்ராவுடன் அர்ஷ்தீப் சிங் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.