
உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சாதனை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 21 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை மிட்செல் ஸ்டார்க் 95 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் 30 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். இதற்கு முன்னதாக, இலங்கை அணியின் லாசித் மலிங்கா 94 விக்கெட்டுகளுடன் உலகக் கோப்பைத் தொடர்களில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.