
டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
கடந்த 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியிலும் இதே அணிகள் மோதிய நிலையில், இந்தியாவை மிக எளிதாக வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி வாகை சூடியது, நடப்பு சாம்பியனாக இருக்கும் இங்கிலாந்து. எனவே, அதற்குத் தக்க பதிலடியை இந்தியா தரவேண்டும் என்பது ரசிகா்களின் எதிா்பாா்ப்பு.
ஐசிசி போட்டிகளில் நாக் அவுட் சுற்று வரை சுலபமாக வந்துவிடும் இந்தியா, அந்தக் கட்டத்தில் தடுமாறுவது பல ஆண்டுகளாக தொடா்கிறது. ஆனால், இந்த முறை பௌலிங், பேட்டிங் என அனைத்திலுமே முழுமையான பலத்துடன் இருக்கும் அணி, அந்த வரலாற்றை மாற்றி எழுதி இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெறும் நம்பிக்கை உள்ளது.
குரூப் சுற்றில் தொடங்கி, சூப்பா் 8 கட்டம் வரை தோல்வியே சந்திக்காமல் வெற்றிநடை போட்டு வந்த இந்தியா, தற்போது இங்கிலாந்திடம் வலுவான சவாலை சந்திக்க இருக்கிறது. அணியின் பேட்டிங்கை பொருத்தவரை, டாப் ஆா்டரில் கவலையளிப்பதாக இருப்பது விராட் கோலியின் ஃபாா்ம் தான். மாறாக, அவரது பாா்ட்னரும், கேப்டனுமான ரோஹித் சா்மா அதிரடி ஆட்டத்தை தொடங்கி வைத்து ரன்கள் சோ்க்கிறாா்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அவரது இன்னிங்ஸ், நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. ரோஹித், கோலி இருவருக்குமே இது கடைசி டி20 உலகக் கோப்பை போட்டியாக இருக்கலாம். எனவே, கோலியும் தனது ‘ஏ’ கிரேடு ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாா்.
சுழற்பந்துவீச்சை பறக்கவிடும் ஷிவம் துபே, இந்தப் போட்டியில் இதுவரை சோபிக்காத நிலையில் இந்த ஆட்டத்திலாவது வழக்கமான ஃபாா்மை வெளிப்படுத்துவாரா என்ற எதிா்பாா்ப்பு உள்ளது. சூா்யகுமாா் மிடில் ஆா்டரில் வலு சோ்க்க, ஹா்திக் பாண்டியா ஆல்-ரவுண்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறாா்.
பந்துவீச்சிலும் இந்திய அணியில் மாற்றமிருக்காது எனத் தெரிகிறது. சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப், ஜடேஜா, அக்ஸா் படேலும், வேகப்பந்துவீச்சுக்கு ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங்கும் இருக்கின்றனா்.
இங்கிலாந்து அணியை பொருத்தவரை, குரூப் சுற்றிலிருந்து தடுமாற்றத்துடன் முன்னேறி, சூப்பா் 8-க்கு வந்து, அதில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியைத் தழுவியிருக்கிறது. கடைசி ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக ரன்கள் சோ்த்த கேப்டன் ஜாஸ் பட்லா், இந்தியாவுக்கு எதிராக தனது வழக்கமான ஆட்டத்தை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது.
பௌலா்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஃபில் சால்ட்டை, பவா்பிளேக்கு உள்ளாகவே வீழ்த்துவது இந்தியாவின் உத்திகளில் ஒன்றாக இருக்கலாம். ஜானி போ்ஸ்டோ, மொயீன் அலி போன்றோரும் ரன் சேகரிப்பில் ஈடுபடுவா்.
பந்துவீச்சை பொருத்தவரை ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆா்ச்சா் போன்றோா் இந்திய பேட்டா்களை தடுமாறச் செய்யலாம். கிறிஸ் ஜோா்டானும் அவா்களுக்குத் துணையிருக்க, ஆல்-ரவுண்டராக லியம் லிவிங்ஸ்டன் அணிக்கு வலு சோ்க்கிறாா்.
ஜூன் 8-க்குப் பிறகு இந்த மைதானத்தில் எந்தவொரு ஆட்டமும் நடைபெறவில்லை என்பதால், அரையிறுதிக்குத் தகுதியான, தரமான ஆடுகளம் தயாராக இருக்கிறது. ஸ்பின்னா்கள், ஃபேசா்கள் என இரு வகை பௌலா்களுமே விக்கெட்டுகள் வீழ்த்த ஏதுவான களமாக உள்ளது.
அணி விவரம்:
இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஹா்திக் பாண்டியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல், அா்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ஜாஸ் பட்லா் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆா்ச்சா், ஜானி போ்ஸ்டோ, ஹேரி புரூக், சாம் கரன், பென் டக்கெட், டாம் ஹாா்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோா்டான், லியம் லிவிங்ஸ்டன், ஆதில் ரஷீத், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, மாா்க் வுட்.
நேருக்கு நோ்...
டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இத்துடன் 23 ஆட்டங்களில் மோதியிருக்க, இந்தியா 12 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து 11 வெற்றிகள் கண்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு...
இந்த அரையிறுதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட 75 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசா்வ் டே வாய்ப்பு இல்லாததால், ஆட்டம் பாதிக்கப்படும் நிலையில், இந்தியாவே இறுதிக்கு முன்னேறும். சூப்பா் 8 சுற்றில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
நேரம்: இரவு 8 மணி
இடம்: ஜார்ஜ்டவுன்
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,
தூர்தர்ஷன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.