யார் பெறுவார் அந்த அரியாசனம்?
உலகிலேயே மிக அதிகமான பேர் வாக்களித்து ஓர் அரசைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் அமைப்பு இந்தியாவின் தனித்துவம். நமது தேர்தல் முறையிலும், ஆட்சி அமைப்பிலும் ஆயிரம் குறைகள் இருக்கலாம். தேர்தல் நேரக் கலவரங்கள்,


உலகிலேயே மிக அதிகமான பேர் வாக்களித்து ஓர் அரசைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் அமைப்பு இந்தியாவின் தனித்துவம். நமது தேர்தல் முறையிலும், ஆட்சி அமைப்பிலும் ஆயிரம் குறைகள் இருக்கலாம். தேர்தல் நேரக் கலவரங்கள், தில்லுமுல்லுகள் இருக்கலாம். ஆனாலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் இன்னும் சில ஆசிய நாடுகளிலும் நடப்பது போல கண் துடைப்பு நாடகமாக நமது தேர்தல் நடைபெறுவதில்லை என்கிற வரையில் நாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சுதந்திரம் அடைந்த நாடுகள் ஏறத்தாழ 180. அதில் தொடர்ந்து பாராளுமன்ற ஜனநாயகம் நடைபெறும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். இத்தனைக்கும் பல்வேறு மொழிகள், மதங்கள், இனங்கள், ஜாதிப் பிரிவுகள், படித்தவர், பாமரர் என ஏற்றத் தாழ்வுகள் என்று இருந்தும் இந்தியா ஒரு நாடாக, ஒரே உணர்வுடன் தொடர்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் தொடர்ந்து 17 ஆண்டுகள் பண்டித ஜவகர்லால் நேரு என்கிற ஜனநாயகவாதி முதல் பிரதமராக இருந்ததுதான்!
அன்றைக்கு ஜவகர்லால் நேருவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு அத்தகையது. அவர் நினைத்திருந்தால் தன்னை ஒரு சர்வாதிகாரியாக்கிக் கொண்டிருக்கலாம். அதை விடுத்து, இந்தியாவின் மக்களாட்சித் தத்துவம் வேரூன்ற வேண்டும் என்பதில் ஜவகர் முனைப்புடன் செயல்பட்டார் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
ஏறத்தாழ 71.5 கோடி வாக்காளர்கள். அதில் சுமார் 37 கோடி பேர் ஆண்கள்; 34 கோடி பேர் பெண்கள். 8,28,804 வாக்குச் சாவடிகள். அடேயப்பா, பிரமிப்பான வாக்கெடுப்பல்லவா இது!
ஐந்து கட்ட வாக்கெடுப்பில் முதல் கட்டம் முடிந்து இரண்டாவது கட்டம் வாக்கெடுப்புக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. லட்சக் கணக்கான அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் போர்க்கால நடவடிக்கைபோல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அனல் பறக்கும் வெயிலில் வாக்காளர்களைச் சந்திக்க வேட்பாளர்கள் தெருத்தெருவாகச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்களோ, ஊருக்கு ஊர், தொகுதிக்குத் தொகுதி என்று பறந்து கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் நடுவில் திருவாளர் பொதுஜனம் கையில் வாக்குச் சீட்டுடன், நாளைய இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார். சிந்தித்து, சீர்தூக்கி வாக்களிப்பவர்கள், உணர்வுபூர்வமாக அந்த நேரத்தில் வாக்களிப்பவர்கள், தான் சார்ந்த, விரும்பும் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து வாக்களிப்பவர்கள், கணவர் சொன்னார், மகன் சொன்னார், பக்கத்து வீட்டு ஆயா சொன்னார் என்று வாக்களிப்பவர்கள், ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிப்பது என்று நினைப்பவர்கள், பணத்துக்கும், வேட்டி சேலைக்கும், பிரியாணி விருந்துக்கும் தங்களது பொன்னான வாக்குகளை பேரம் பேசுபவர்கள் - இந்த வாக்காளர்களில் தான் எத்தனை எத்தனை ரகம்!
கடந்த 13 மக்களவைத் தேர்தல்களிலும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன. 1957-ல் நடந்த 2-வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு தொகுதிகள் இந்த அளவுக்கு மறு சீரமைப்புக்கு உள்ளானதில்லை. 543 மக்களவைத் தொகுதிகளில் 499 தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவு எப்படி இருக்கப் போகிறது என்கிற பயம் பல வேட்பாளர்களையும், அரசியல் கட்சிகளையும் தூங்க விடாமல் செய்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கையே மீண்டும் தமது பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்துக் களம் இறங்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதில் வேடிக்கை என்னவென்றால், கட்சித் தலைவி சோனியா காந்தி மக்களவைத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் போட்டி போடவில்லை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நிலைமை தலைகீழாக இருப்பதுதான் வழக்கம்.
லால் கிஷன் அத்வானியைத் தனது பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி. துணைப் பிரதமராக இருந்தவர் என்பதும் எதிர்கட்சித் தலைவராக 14-வது மக்களவையில் இருந்தவர் என்பதும் அரசியல் அனுபவஸ்தர் என்பதும் இவரது சிறப்பம்சங்கள்.
அதிகமான இடங்களில் போட்டியிடும் கட்சிகள் காங்கிரஸýம், பாரதிய ஜனதா கட்சியும்தான். அப்படி இருந்தும், அடுத்த பிரதமர் மேலே குறிப்பிட்ட இரண்டு பேரில் ஒருவராகத்தான் இருப்பாரா என்று கேட்டால், அப்படி எல்லாம் சொல்லிவிட முடியாது. இவர்களுக்கு அதிக வாய்ப்பு என்று சொல்ல முடியுமே தவிர, அதற்கு மேல் சொல்வதற்கு இல்லை. காரணம், இந்த இரண்டு கட்சிகளுமே தங்களது சொந்த செல்வாக்கில் பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இப்பொழுதே இல்லை என்பதுதான்.
பாரதிய ஜனதா கட்சி, தனது தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒற்றுமையாக அணி பிரியாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. ஆனால், சற்றும் எதிர்பாராமல் ஒரிஸôவில் பிஜு ஜனதாதளம் ஆட்சிக்குக் கும்பிடு போட்டுப் பிரிந்ததும், ஆந்திராவில் தெலுங்கு தேசமும், தமிழ்நாட்டில் அண்ணா திமுகவும் கூட்டணிக்குத் தயாராக இல்லாததும் பாஜக எதிர்கொண்ட ஏமாற்றங்கள்.
காங்கிரஸ் கட்சி, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் சாதனைகளை முன் வைத்து போட்டி இடுவதால் தனது கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் என்று எதிர்பார்த்தால், நான் வேறு, நீங்கள் வேறு என்று தனித்தனியாகப் போட்டி இட முடிவெடுத்துவிட்டது. மாநிலத்தில் தனித்தனி, மத்தியில் கூட்டணி என்கிற முடிவு அதன் தோழமைக் கட்சிகளையே எதிர்த்துப் போட்டி போட வைத்திருக்கிறது.
ஓர் அணி, இரண்டணி என்பது போய் நான்கு அணிகளாகிவிட்டன. யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல, ஒத்த கருத்துடைய கட்சிகள் கைகோர்த்து ஆட்சி அமைவது கூட சாத்தியமல்ல என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
1984 தேர்தலுக்குப் பிறகு தனிக்கட்சி ஆட்சி என்பது கானல் நீராகிவிட்டது. கடந்த 25 ஆண்டுகளில் அநேகமாக எல்லா கட்சிகளும் மாநிலக்கட்சி, தேசியக்கட்சி என்கிற வித்தியாசம் இல்லாமல் மத்திய அரசில் பங்கு பெற்றுவிட்டன. அதுவே கூட பல மாநிலக் கட்சிகளுக்குப் பதவி ஆசையை அதிகரிக்கக் காரணமாக இருக்குமோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது.
மாநிலத்தில் தனியாகப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிக்க முடியாத மாநிலக் கட்சித் தலைவர்கள் கூட 10 அல்லது 20 மக்களவை உறுப்பினர்களுடன் பிரதமராகி விடலாம் என்கிற கனவில் மிதக்கத் தொடங்கிவிட்டார்கள். முடிந்தால் பிரதமர் பதவி, இல்லையென்றால் மத்திய அமைச்சர் பதவி என்று தேர்தலுக்கு முன்பே கனவு காண்பவர்களின் எண்ணிக்கை ஒரு டஜனுக்கும் மேலே!
யார் பிரதமர் என்கிற கேள்விக்கு முடிவுகள் தெரிந்து, அணிகள் உடைந்து, சேர்ந்து, பேரம் படிந்து அப்புறமல்லவா பதில் தேட வேண்டும். இப்போதைக்கு, 15-வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கக்கூடும்; எந்த அணி முன்னணியில் இருக்கிறது; என்னென்ன மாற்றங்கள் ஏற்படக் கூடும் என்பதைப் பற்றிச் சிந்திப்போம்.
(தொடரும்...)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...