யார் பெறுவார் இந்த அரியாசனம்-3 : கலைத்துக் கலைத்துச் சலித்து...
கடந்த 20 ஆண்டுகளாக வாக்காளர்கள் இடையில் இன்னொரு மனநிலையும்...


கடந்த 20 ஆண்டுகளாக வாக்காளர்கள் இடையில் இன்னொரு மனநிலையும் காணப்படுகிறது. தங்களால் ஆட்சி மாற்றம் செய்ய முடிந்தும் அடிப்படை நிர்வாகத்திலோ, கொள்கையிலோ, அரசமைப்பிலோ எந்தவிதக் காட்சி மாற்றமும் ஏற்படுத்த முடியவில்லை என்பதாலோ என்னவோ, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பலரையும் அடுத்த தேர்தலில் தோல்வியுறச் செய்து விடுகிறார்கள்.
முதல் பத்து வருடங்கள் ஆட்சி மாற்றம் செய்து பார்த்து, இப்போதெல்லாம் உறுப்பினர்களை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுப்பது என்கிற நிலைப்பாட்டை வாக்காளர்கள் எடுத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் மாறி வருவது சகஜமாகி விட்டிருக்கிறது.
உதாரணமாக 13-வது மக்களவையில் உறுப்பினர்களாக இருந்த 543 பேர்களில் 348 பேர் 14-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 1989-ல் வெற்றி பெற்ற 522 உறுப்பினர்களில் 306 பேர் அடுத்த தேர்தலில் மக்களவைக்குத் திரும்பவில்லை. 1991-ல் வெற்றி பெற்ற 521 பேரில் 349 பேர் 1996-ல் அமைந்த 11-வது மக்களவையில் இல்லை. இதே கதைதான் 1998-லும். 11-வது மக்களவையில் இருந்தவர்களில் 360 பேர் 12-வது அவையிலும், 12-வது அவையில் இருந்த 293 பேர் 1999-ல் அமைந்த 13-வது அவையிலும் வெற்றி பெற்று அமர முடியவில்லை. சீட்டுக்கட்டைக் கலைத்துக் கலைத்துப் போடுவதுபோல வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் வாக்காளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
இவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று நினைத்து அவர்கள் சார்ந்த கட்சிகளே அவர்களை மறுபடி போட்டியிட அனுமதிக்காததும் காரணமாக இருக்கலாம். ஆனால், 1989க்கு முன்பு இருந்ததுபோல அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது இப்போது குறைந்துவிட்டது.
அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. வாக்காளர்களால் மாற்றி மாற்றி கட்சிகளையோ கூட்டணிகளையோ ஆட்சியில் அமர்த்த முடிகிறதே தவிர, அடிப்படை நிர்வாகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதில்லை. அரசுகள் மாறுகின்றனவே தவிர கொள்கையில் மாற்றம் எதுவும் இல்லை. ஊழல், நிர்வாகச் சீர்கேடு, அதிகார துஷ்பிரயோகம் போன்றவை ஆட்சி மாற்றங்களால் முடிவுக்குக் கொண்டுவரப் படுவதில்லை.
நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசும், அதற்குப் பின் அமைந்த ஐக்கிய முன்னணி அரசும், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும், மன்மோகன் சிங்கின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் பொருளாதாரக் கொள்கையிலும், வெளிவிவகாரக் கொள்கையிலும், ஏறத்தாழ ஒரே நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடித்தன என்பதை நாம் உணர வேண்டும். ஆட்சிகள் மாறுகின்றனவே தவிர காட்சிகள் மாறவில்லை.
இந்த நிலையில் வாக்காளர் தீர்மானிக்க இருப்பது கழுதையா குதிரையா என்பதல்ல. பந்தய மைதானத்தில் இருப்பது அனைத்துமே கழுதைதான் எனும்போது, தனது ஜனநாயகக் கடமையில் தவறக்கூடாது என்று கருதி வாக்களிக்கும் வாக்காளர்களின் தேர்வு இதுவா, அதுவா என்பதுதான். வாக்காளர் மாற்றி மாற்றி வாக்களித்துப் பார்க்கிறார். ஆட்சியில் அமரும் கட்சிகளை மாற்ற முடியும். அவரால் மாறுபட்ட ஆட்சியைத் தருகின்ற கட்சியைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. அந்த தார்மீகக் கோபம் வேட்பாளர் மீது பாய்கிறது.
இது ஒரு முக்கியமான அம்சம் என்றால், மக்களவைத் தேர்தலின் அடிப்படை நோக்கத்திலும் மாறுபாடு காணப்படுவது இன்னொரு அம்சம். மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் ஒன்றாக நடந்து வந்த கால் நூற்றாண்டுக்கு முன்பிருந்த சூழ்நிலையில் கூட, வாக்காளர்கள் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையே உள்ள வேறுபாடை நன்றாக உணர்ந்து வாக்களித்து வந்தனர்.
1980-ல் மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அதேபோல, 1984 தேர்தலில் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட அன்றைய முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரன் பெற்ற வாக்குகளைவிட, அவரது அணியில் இருந்த மக்களவை வேட்பாளர் ஆண்டிப்பட்டி தொகுதியில் பெற்ற வாக்குகள் அதிகம். இப்படி மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் வெவ்வேறு நிலைப்பாடு எடுத்து வந்த வாக்காளர்கள் இப்போது மாறி இருக்கிறார்கள்.
குறிப்பாக சொல்வதாக இருந்தால், தேசியப் பிரச்னைகளை முன்னிறுத்தி மக்களவைத் தேர்தல்கள் நடத்தப்படுவதும் இல்லை. வாக்காளர்கள் வாக்களிப்பதும் இல்லை. வாக்காளர்களின் தீர்ப்பு மக்களவைக்கான தீர்ப்பாக இல்லாமல் மாநிலங்களை முன்னிறுத்தி வழங்கப்படும் தீர்ப்பாக இருக்கின்றன.
மாநிலத்துக்கு மாநிலம் அங்கே ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களிக்கப்படுவதால், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டுமல்ல, மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி அல்லது கூட்டணியின் செயல்பாடு பற்றிய கணிப்பாகவும் மக்களவைத் தேர்தல்கள் அமைவதில்லை.
நடக்க இருக்கும் தேர்தலையே எடுத்துக் கொள்வோம். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஐந்து வருட ஆட்சியின் மதிப்பீடாக இந்தத் தேர்தல் இருக்கப் போகிறதா என்றால் இல்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி, கேரளத்தில் இடதுசாரிகளின் செயல்பாடு, குஜராத்தில் நரேந்திர மோடி அரசின் சாதனை-வேதனைகள், ஒரிசாவில் நவீன் பட்நாயக் வேண்டுமா வேண்டாமா போன்ற பிரச்னைகள்தான் இந்த மக்களவைத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்குமே தவிர, மன்மோகன் சிங் அரசின் மீதான ஆதரவும் எதிர்ப்பும் அல்ல.
இப்போதும் பெருவாரியான அதிகாரங்கள் மத்திய அரசிடம்தான் குவிந்து கிடக்கின்றன. மாநில அரசுகள் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவியில் நடைபெறும் திட்டங்கள். அதுமட்டுமன்றி, தீவிரவாதத் தடுப்பு, இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் பாராமுகம், அணுசக்தி ஒப்பந்தம், வெளிவிவகாரக் கொள்கை, விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், இப்படி எத்தனை எத்தனையோ தேசியப் பிரச்னைகள் இந்தியாவை எதிர்நோக்கும் நேரம் இது.
மத்திய அரசின் செயல்பாட்டை நிர்ணயிக்க வேண்டிய, கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த மத்திய ஆட்சியின் குறை நிறைகளை சீர்தூக்கித் தீர்ப்பளிக்க வேண்டிய ஒரு தேர்தலில், தேசியப் பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மாநிலப் பிரச்னைகள் விவாதப் பொருளாகி இருப்பது வேதனைக்குரிய விஷயம். இதன் நேரடி விளைவு, தேசியக் கட்சிகள் தங்களது முக்கியத்துவத்தை இழப்பது என்பதுதான்.
மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டும், தேசிய அளவில் ஒன்றாகவும் மாநில அளவில் வேறு வேறாகவும் கட்சிகள் அணி சேர்ந்திருப்பது இந்தத் தேர்தலில் இன்னொரு வேடிக்கை. இந்த அணிச் சேர்க்கைகள் பற்றி விரிவாக விவாதித்தாக வேண்டும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...