சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக...

 முக்கியமான மூன்று அணியினருமே கூட்டணிக்குப் புதியவர்கள் அல்ல. கூட்டணி ஆட்சி நடத்திய அனுபவசாலிகள்தான். பதவியில் இருக்கும்வரை கூட்டணிக் கட்சிகள் கைகோர்த்து நின்றுவிட்டு, பதவிக்கான போட்டி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:45 am

விக்கிரமசிங்கன்

 முக்கியமான மூன்று அணியினருமே கூட்டணிக்குப் புதியவர்கள் அல்ல. கூட்டணி ஆட்சி நடத்திய அனுபவசாலிகள்தான். பதவியில் இருக்கும்வரை கூட்டணிக் கட்சிகள் கைகோர்த்து நின்றுவிட்டு, பதவிக்கான போட்டி வரும்போது பிரிந்து விடுகின்றனவே, அது ஏன்?

 இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா போன்ற பெரிய கட்சிகள் இந்திய ஜனநாயகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாதது முதல் காரணம். அதனால், மாநிலக் கட்சிகளையும், கூட்டணிக் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு அவர்களுக்கு உரிய பங்கைத் தர இந்தக் கட்சிகள் இரண்டுமே தயங்குகின்றன. இரண்டாவது காரணம், தங்களது வலிமையை அளவுக்கதிகமாகக் கற்பனை செய்து கொண்ட மாநிலக் கட்சிகளின் பேராசை.

 இப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இந்திய அரசியல் சிதறுண்டு போனதற்கு அடிப்படைக் குற்றவாளி காங்கிரஸ் கட்சிதான். ஜவஹர்லால் நேரு இருந்தவரை இருந்த உள்கட்சி ஜனநாயகம், காங்கிரஸ் கட்சியில் 1969-க்குப் பிறகு கொஞ்சம்கூட இல்லாமல் போனதன் விளைவைத்தான் இந்தியா இப்போது அனுபவித்து வருகிறது.

 அடிப்படையில் இந்தியா என்பதே பல்வேறு மத, இன, மொழிகளை உள்ளடக்கிய கூட்டணி என்பதை மகாத்மா காந்தி நன்றாகவே உணர்ந்திருந்ததால்தான், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்பது ஒரு மாநிலங்களின் கூட்டணியாக அமைய வேண்டும் என்று அவர் விரும்பினார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே, ஏன் சுதந்திரத்திற்கு முன்பே பிரதேசக் காங்கிரஸ் கமிட்டிகள் அமைக்கப்பட்டுவிட்டன.

 இந்தப் பிரதேசக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் செல்வாக்கு படைத்தவர்களாகவும், அவர்களது கருத்துக்கள் காங்கிரஸ் தலைமையால் மதிக்கப்படுவதாகவும் இருந்த காலம் அது. முழுமையான உள்கட்சி ஜனநாயகம் காங்கிரஸ் கட்சியில் இருந்ததற்கு அடையாளம்தான் மகாத்மா காந்தியின் வேட்பாளர் என்று கருதப்பட்ட பட்டாபி சீதாராமய்யாவை சுபாஷ் சந்திரபோஸ் தோற்கடித்து அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானது.

 சுதந்திரத்திற்குப் பிறகு ஜவஹர்லால் நேருவும் பிரதேசக் காங்கிரஸýக்கு முக்கியத்துவம் அளித்தது மட்டுமல்லாமல், எல்லா பிரிவினரும் காங்கிரஸ் கட்சியில் பிரதிநிதித்துவம் பெறும்படியும் பார்த்துக் கொண்டார்.

 ஏழை பணக்காரன், இந்து முஸ்லிம், பிராமணன் ஹரிஜன், முதலாளி தொழிலாளி, விவசாயி விவசாயக் கூலித் தொழிலாளி என்று அனைத்துத் தரப்பினரும், கேரளாவிலிருந்து காஷ்மீர் வரை, குஜராத்திலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வரை எல்லா பகுதிகளும் காங்கிரஸ் கட்சியில் பிரதிநிதித்துவம் வகித்தன. இப்படி அனைத்துத் தரப்பினரையும் அந்தக் கட்சியால் அரவணைத்துச் செல்ல முடிந்ததால்தான் அது ஒரு தேசியக் கட்சியாக இருக்க முடிந்தது.

 காங்கிரஸ் கட்சியில் நிலவிய உள்கட்சி ஜனநாயகம் எல்லா தரப்பினரின் உணர்வுகளையும் வெளிப்படுத்த வழிவகுத்தது என்பதைவிட, அந்தக் கட்சியே பல பிரிவினரின், உணர்வுகளின் கூட்டணியாக செயல்பட்டது என்று சொல்ல வேண்டும்.

 1969-ல் ஏற்பட்ட காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு இந்திரா காந்தியின் தலைமையில், பிரதேசக் காங்கிரஸ் கமிட்டிகள் மட்டுமல்ல, உள்கட்சி ஜனநாயகமும் அந்தக் கட்சியில் இல்லாமல் போய்விட்டது. அமைச்சர்களும், மாநில முதல்வர்களும், மாநிலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களும் கட்சித் தலைமையின் கைப்பாவைகளாக மட்டும் இருந்தனர்.

 இந்திரா காந்தி உயிருடன் இருந்தவரை, எல்லா தரப்பினருக்கும் முறையான அங்கீகாரமும், பிரதிநிதித்துவமும் அவரால் வழங்கப்பட்டது. அனைத்துத் தரப்பினரின் உணர்வுகளையும் அவர் ஓரளவுக்குப் புரிந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்குப் பிறகு வந்த ராஜீவ் காந்தியும் மற்றவர்களும் இந்திரா காந்தியின் ஆற்றலையும் பெற்றிருக்கவில்லை. ஜவஹர்லால் நேருவிடம் இருந்த ஜனநாயகக் கண்ணோட்டத்துடன் செயல்படவும் இல்லை. அதுதான் இன்றைய கூட்டணிக் குழப்பங்களின் அடிப்படைக் காரணம்.

 இந்த விஷயத்தில் பாரதிய ஜனதாக் கட்சியும் பெரிய அளவில் வேறுபட்டதாக இல்லை. இரண்டு கட்சிகளிலுமே, வலிமையான மாநிலத் தலைமையும், அடிப்படையில் இந்தியா என்பதே ஒரு கூட்டணிதான் என்கிற உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இல்லை என்பதுதான் நிஜம்.

 பாரதிய ஜனதாவுக்குக் கர்நாடகம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என்று எங்கெல்லாம் வலிமையான மாநிலத் தலைமை அமைகிறதோ அங்கெல்லாம் கட்சியும் பலம் பெறுகிறது என்பதுதான் யதார்த்த நிலைமை. உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங் வலிமையாக இருந்ததுவரை பாரதிய ஜனதா கட்சி வலிமையாக இருந்தது. உள்கட்சிப் பூசலில் அவர் பின்னுக்குத் தள்ளப்பட்ட பின், பாஜகவும் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது.

 காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவால் அனைத்துத் தரப்பினரின் உணர்வுகளையும், பிரதிபலிக்க முடியாமல் போனதால்தான் ஆங்காங்கே மாநிலக் கட்சிகள் பலமடைந்தன. ஜாதிக் கட்சிகள் தலைதூக்க முடிந்தது. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக, தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது.

 இனிமேல் உள்கட்சி ஜனநாயகம் ஏற்படுத்தி நேரு காலத்தில் இருந்தது போல ஒரு வலிமையான காங்கிரûஸயோ, அல்லது அதைப் போன்ற அமைப்பாக பாரதிய ஜனதாவையோ உருவாக்க நினைப்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும் கதைதான்.

 தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளை அரவணைத்துக் கூட்டணி அமைக்காத வரையில் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாது என்பது மட்டுமல்ல, காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இடதுசாரிகள் என எல்லா தேசிய சக்திகளும் ஒன்றுபட்டாலும்கூட மக்களவையில் சுமார் 300 இடங்களுக்கு மேல் பெறுவது மிகவும் கடினம்.

 மாநிலக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது மற்றும் தேர்தலுக்கு முன்பும் பின்பும் கூட்டணி அமைத்துக் கொள்வது என்பது பாரதிய ஜனதாக் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் சுலபம். அந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இவர்கள் அளவுக்கு சுலபமாகக் கூட்டணி அமைத்துவிட முடியாது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

 (தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.