ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

"தினமணி' செய்தி எதிரொலி'': சௌதியிலிருந்து தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஆட்சியர்

சௌதியில் கொத்தடிமைகளாக உள்ள தமிழர்கள் உள்பட 800 இந்தியர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று...

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:00 am

எஸ்.வி.எஸ்.ஜெக​ஜோதி.

ராமநாதபுரம், ஆக. 4:   சௌதியில் கொத்தடிமைகளாக உள்ள தமிழர்கள் உள்பட 800 இந்தியர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த 350 தமிழர்கள் சௌதியில் கொத்தடிமைகளாக இருப்பதையும், அவர்கள் விலைக்கு விற்கப்பட்டதையும் "தினமணி' செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.

இதைப் பார்த்த தமிழக அரசின் உயர் அதிகாரிகள் ராமநாதபுரம் ஆட்சியரைத் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு சென்னையிலிருந்து கேட்டிருந்தனர்.

சௌதியில் கொத்தடிமையாக இருக்கும் கே. சேதுராஜாவின் சகோதரர்கள் விஜயகுமார், உதயகாந்த் ஆகியோரிடம் ஆட்சியர் த.ந. ஹரிஹரன் விசாரணை நடத்தினார்.

அவர்கள் ஆட்சியரிடம் கூறியதாவது:

"ராமநாதபுரம் தனபால் மற்றும் மதுரை மேலூர் அருகே தனியாமங்கலத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குமார் ஆகிய இரு முகவர்கள் மூலமாக மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு அனுப்பி, அங்கிருந்து சௌதிக்கு தம்பியை வேலைக்கு அனுப்பி வைத்தோம். ரூ.70 ஆயிரம் செலுத்தி வேலைக்குச் சென்ற அனைவரையும் விலைக்கு விற்றதுடன், கொத்தடிமைகளாகவும் நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம், மதுரை முகவர்கள் இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்டால் பேசுவதில்லை. மும்பையில் உள்ள நிறுவனத்துக்கே நேரில் தொடர்பு கொண்டால், "உங்கள் முகவரிடம் பேசிக் கொள்ளுங்கள், நாங்கள் உங்களை வேலைக்குத் தேர்வு செய்யவில்லை' என்று கூறி தப்பித்துக் கொள்கின்றனர்.

சௌதியில் இதுபோன்று பலர் கொத்தடிமைகளாக இருக்கின்றனர். எங்கள் தம்பிக்கு எந்த பாதிப்பும் வந்து விடாமல் அனைவரையும் மீட்டுத் தாருங்கள்' என்று ஆட்சியரை இருவரும் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து ஆட்சியரின் உதவியாளர், சௌதியில் உள்ள கே. சேதுராஜாவிடம் செல்போனில் பேசினார். அப்போது சேதுராஜா கூறியதாவது:

"சித்திரவதை தாங்க முடியாமல் 12 பேர் மட்டும் தப்பித்து வேறு கம்பெனியில் மறைமுகமாக வேலை பார்த்து வருகிறோம். எங்கள் பாஸ்போர்ட்டை அந்த நிறுவனத்தினர் வைத்துக் கொண்டு கொடுக்க மறுக்கின்றனர். இங்கு தமிழர்கள் சுமார் 100 பேர் உள்பட 800 இந்தியர்கள் கொத்தடிமைகளாக உள்ளனர்.

சௌதி ரியாத்தில் தமாம் சாலையில் உள்ள அல்கர்ஜி ராணுவ முகாம் அருகில் உள்ள நிறுவனத்தில்தான் அனைவரும் கொத்தடிமைகளாக இருக்கிறோம்' என்று தெரிவித்தார்.

"கொத்தடிமைகளாக உள்ள அனைவரையும் உடனே மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவோர் என்ன சம்பளத்தில், என்ன வேலைக்கு, எந்த நாட்டுக்கு அனுப்புகின்றனர் என்ற விவரத்தை அரசுக்குத் தெரிவித்த பிறகு, மாவட்ட எஸ்.பி.யுடன் பேசி அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும். இதனால் போலி முகவர்களிடம் ஏமாறுவது தடுக்கப்படும்' என்றார் ஆட்சியர் த.ந. ஹரிஹரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.