தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சர்க்கரை விலை உயர அதிகாரிகளே காரணம்

சென்னை, ஆக. 4: தமிழகத்தில் கூட்டுறவு ஆலைகளில் உற்பத்தியான சர்க்கரையை விற்க சர்க்கரை ஆணைய அதிகாரிகள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததால், அந்த ஆலைகளைச் சார்ந்த கரும்பு விவசாயிகளுக்கு ரூ.44.6 கோடி வரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:01 am

மு.சந்திரசேகரன்

சென்னை, ஆக. 4: தமிழகத்தில் கூட்டுறவு ஆலைகளில் உற்பத்தியான சர்க்கரையை விற்க சர்க்கரை ஆணைய அதிகாரிகள் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததால், அந்த ஆலைகளைச் சார்ந்த கரும்பு விவசாயிகளுக்கு ரூ.44.6 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

4.46 லட்சம் மூட்டை சர்க்கரை இவ்வாறு "லெவி'க்கு மாறியதால்தான், வெளிச் சந்தையில் சர்க்கரை விலை ரூ.28 வரை உயர்ந்தது என அத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

19 ஆலைகளுக்கு ஏறத்தாழ தலா ரூ.2.3 கோடி கூடுதலாகக் கிடைத்திருந்தால் அந்த விவசாயிகள் பயன் பெற்றிருப்பார்கள். அந்த வாய்ப்பு பறிபோய்விட்டது.

சர்க்கரை ஆலைகளின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்தை அரசின் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம், குடும்ப அட்டைகளுக்கு வழங்குவதற்காக குறைந்த விலையில் (லெவி) தர வேண்டும். மீதியை வெளிச் சந்தையில் விற்றுக்கொள்ளலாம்.

வெளிச்சந்தை விற்பனை மூலம்தான் சர்க்கரை ஆலைகள் லாபம் சம்பாதிக்க முடியும்.

கூட்டுறவு ஆலைகளில் உற்பத்தியாகும் சர்க்கரையை முகவர்களுக்கு விற்க "டெண்டர்' முறையை மாநில சர்க்கரை ஆணையம் பின்பற்றுகிறது. டெண்டரில் பங்கேற்கும் முகவர்களின் பிரதிநிதிகள் கோரும் விலை, இந்த ஆணையம் நிர்ணயித்துள்ள விலையைவிடக் குறைவாக இருந்தால் சர்க்கரையை விற்க முன்வருவதில்லை.

விலை வித்தியாசம் ரூ.50-க்குள் இருந்தாலும் கூட, சமரசம் பேசி விற்க முயற்சிப்பதில்லை.

ஆனால், தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், முகவர்களுடன் நேரடியாகப் பேசி, ஆணையத்தின் டெண்டரில் கேட்ட விலைக்கும், ஆலை நிர்வாகம் கூறிய விலைக்கும் நடுவில் ஒரு விலையை நிர்ணயித்து சர்க்கரையை விற்றுவிடுகின்றன.

வெளிச் சந்தையில் விற்க விடுவிக்கப்பட்ட சர்க்கரையை, அவ்வாறு விற்க முடியாமல் போனால், அரசின் பொது விநியோகத் திட்டத்துக்கு (லெவி) அதை விற்றாக வேண்டும். அதற்கு ஒரு மூட்டைக்கு ரூ.1,335 மட்டும்தான் கிடைக்கும்.

டெண்டரில் ரூ.2,350 வரை கேட்ட போதும் விற்காமல் நிறுத்தி வைத்த சர்க்கரை மூட்டைகளை, "லெவி' சர்க்கரையாக ரூ.1,000 வரை குறைத்து விற்க வேண்டியது ஏற்படும்.

இவ்வாறு கடந்த ஏப்ரலுக்கு முந்தைய 8 மாதங்களில் மட்டும் தமிழகக் கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் இருந்து 4.46 லட்சம் மூட்டை சர்க்கரை, "லெவி' சர்க்கரையாக அனுமதி மாற்றி விற்கப்பட்டுள்ளது என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது ரூ.44.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உரிய காலத்தில் வெளிச்சந்தையில் சர்க்கரையை விற்றிருந்தால், கூட்டுறவு ஆலைகள் மூலமாக இந்தப் பணம் கரும்பு விவசாயிகளுக்குக் கூடுதலாகக் கிடைத்திருக்கும்.

தனியார் ஆலைகள் வெளிச்சந்தைக்கு என்று ஒதுக்கப்பட்ட சர்க்கரையை முழுமையாக விற்றுவிட்டன. கூட்டுறவு ஆலைகளைவிட அதிகமாகவே இந்த ஆலைகள் விற்றுள்ளன. அதாவது, இந்த ஆலைகளுக்கு கூட்டுறவு ஆலைகளைவிட, ரூ.44 கோடிக்கும் அதிகமான வருவாய் இந்த 8 மாதங்களில் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, சந்தையில் கூட்டுறவு ஆலைகளின் சர்க்கரை இல்லாததால், தனியார் ஆலைகளின் சர்க்கரைக்கு கிராக்கி ஏற்பட்டு, நல்ல விலையும் கிடைத்துள்ளது. இதுவே, வெளிச்சந்தையில் விலை உயர்ந்ததற்குக் காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரூ.44.6 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக யார் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாதது குறித்து இத் துறை வல்லுநர்கள் வியப்பு தெரிவிக்கின்றனர்.

  எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடி நடக்காமல் இருக்க அரசு, உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.