தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடனை அடைக்க கூட்டுறவு சொத்தை விற்க ஏற்பாடு

சென்னை, டிச. 21 : சென்னை டி.யு.சி.எஸ். உள்பட 6 கூட்டுறவு பண்டகசாலைகளின் அசையா சொத்துகள் சிலவற்றை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடன்களை அடைப்பதற்கு என்று கூறி, சொத்துகளை விற்கும் போக்கு தொடர்ந்தால

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:41 am

மு.சந்திரசேகரன்

சென்னை, டிச. 21 : சென்னை டி.யு.சி.எஸ். உள்பட 6 கூட்டுறவு பண்டகசாலைகளின் அசையா சொத்துகள் சிலவற்றை விற்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடன்களை அடைப்பதற்கு என்று கூறி, சொத்துகளை விற்கும் போக்கு தொடர்ந்தால் படிப்படியாக எல்லா சங்கங்களும் மூடப்படும் நிலை உருவாகும் என கூட்டுறவு ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கோவை சிந்தாமணி, கடலூர் சரவணபவ, திருச்சி சிந்தாமணி, திருச்சி அமராவதி, மதுரை பாண்டியன், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு (டி.யு.சி.எஸ்.) ஆகிய ஆறு நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளின் அசையா சொத்துகளை விற்கவும், அதில் கிடைக்கும் தொகையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவையைச் செலுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், இவற்றை விற்பதற்காக அதிகாரிகள் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

விற்பனை செய்யப்பட உள்ள சொத்துகளின் வெளிச்சந்தை மதிப்பை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் மற்றும் வருவாய் அலுவலர்களின் அறிக்கை பெற்று, வெளிச்சந்தை நிலவரத்தின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட மண்டல கூட்டுறவு அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களுக்கு இந்த இடம் தேவையில்லாதபட்சத்தில், பிற அரசுத் துறைகளுக்கோ அல்லது மத்திய, மாநில அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கோ வெளிச் சந்தை விலையில் விற்க இக் குழுவுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

சென்னையில் டி.யு.சி.எஸ். 1904-ல் தொடங்கப்பட்டதாகும். 1942-ல் இரண்டாவது உலகப் போரின்போது ரூ.310 பங்கு மூலதனத்தில் தொடங்கப்பட்ட இச் சங்கத்தில் இப்போது 1.04 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ரூ.1.04 கோடி பங்கு மூலதனம் உள்ளது. இதில் தமிழக அரசுக்கு ரூ.79 லட்சமும், மத்திய அரசுக்கு ரூ.15 லட்சமும் உள்ளது.

டி.யு.சி.எஸ். நடத்தும் காமதேனு அங்காடிகள் சென்னை மக்களிடையே மிகவும் பிரபலம். இப்போதுள்ள பெரிய நிறுவனங்களின் அங்காடிகளுக்கு முன்பு, காமதேனு அங்காடிகள்தான் குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கும் இடமாக இருந்தது. இப்போதும் விலை குறைவுதான் என்றாலும், விளம்பரம் செய்ய முடியாத காரணத்தால் தனியார் அங்காடிகளுடன் போட்டியிட முடியவில்லை.

காமதேனு அங்காடியில் லாபம் குறைவாகவே நிர்ணயிக்கப்படுவதால், சங்கத்தின் செயல்பாடுகளுக்குப் போதிய பணம் கிடைப்பதில்லை.

மேலும் பொது விநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளுக்குப் பொருள் விநியோகம் செய்வதில் தங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுவதாக டி.யு.சி.எஸ். அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரேஷன் பொருள் விநியோகத் திட்டத்தால் கூட்டுறவு சங்கங்கள் நலிவடைந்துவிடக் கூடாது என்பதற்காக 2003-ல் இருந்து அரசே மானியம் தரும் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த வகையில் 2003 முதல் 2008 வரையில் டி.யு.சி.எஸ்.-க்கு மட்டும் அரசு ரூ.8 கோடி மானியம் கொடுத்துள்ளது.

2008-09-ம் ஆண்டுக்கு ரூ.4 கோடி மானியம் தர வேண்டும் என்று அரசுக்கு இச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தத் தொகையைக் கொடுத்தால் நிலுவை உள்ள தொகைகளைச் செலுத்துவது எளிதாகிவிடும் என்று சங்கத்தினர் கூறுகின்றனர்.

ஆனால், சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளாள தெருவில் உள்ள கட்டடத்தையும், மயிலாப்பூர் சித்திரகுளத்தில் உள்ள கட்டடத்தையும் விற்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இரண்டு இடங்களுமே விலை மதிப்புமிக்க பகுதிகளில் உள்ளன.

அசையா சொத்துகளை விற்று கடனை அடைப்பது இது முதல் முறையல்ல. 2003-ல் மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் பகுதியிலும், தம்புசெட்டி தெருவிலும், ராயபுரம் மன்னார்சாமி கோவில் தெருவிலும், பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலும் இருந்த 4 சொத்துகள் ரூ.4.25 கோடிக்கு விற்கப்பட்டன. அப்போது கடன்கள் அடைக்கப்பட்டன.

அதன்பிறகு மீண்டும் ரூ.5 கோடி அளவுக்கு கடன்கள் வந்துவிட்டது. இதைக் காரணம் காட்டி மேலும் இரு சொத்துகளை விற்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

புதிய கடன் ஏற்படும் அளவுக்கு வருவாய் குறைவதற்கு காரணமான நிர்வாகக் கோளாறுகளைச் செய்த அதிகாரிகள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அவ்வப்போது ஒவ்வொரு சொத்தாக விற்றுக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் சங்கத்துக்கே இடம் இல்லாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என ஊழியர்களும், சங்க உறுப்பினர்களும் கூறுகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தால் ஏற்படும் இழப்புக்கு மானியம் தரும் திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி, தொகையை மாநில அரசு கொடுத்தாலே கடன், நஷ்டம் ஏதும் இல்லாமல் சங்கங்கள் லாபம் ஈட்ட முடியும் என்கின்றனர்.

தனியார் சங்கிலித் தொடர் அங்காடிகளுக்குப் போட்டியாக உள்ள கூட்டுறவு அங்காடிகளை மூடுவதற்கு இது மறைமுக சதியாக இருக்கும் என்றும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு இருக்கிற சொத்துகளை விற்காமல், நஷ்டத்தை ஈடுகட்ட அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும், அரசின் திட்டங்களை செயல்படுத்துவதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட வேண்டும் என தொழிலாளர்களும், சங்க உறுப்பினர்களும் கோருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.