ரயில்வே பட்ஜெட்: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்?
சென்னை, ஜூலை 5: 2009-10-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால


சென்னை, ஜூலை 5: 2009-10-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 5 புதிய ரயில்கள் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் பிலாஸ்பூர்-திருநெல்வேலி (வாராந்திர) எக்ஸ்பிரஸ் ரயில், இப்போதைய ரயில்வே பட்ஜெட்டிலும் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் மட்டுமன்றி ஹபா-திருநெல்வேலி (வாரம் இருமுறை) இடையே அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு ரயில்களும் திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படுவதால், தமிழகத்தில் நெல்லையில் இருந்து மார்த்தாண்டம் வரை சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் வரை மட்டுமே செல்லும்.
தமிழக மக்கள் கேரளம் வழியாக வடஇந்திய நகரங்களுக்குச் செல்வதில்லை. இதனால், தேசிய அளவில் 57 ரயில்கள் அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்துக்கு கிடைத்தது வெறும் 3 ரயில்கள் மட்டுமே.
மாதிரி ரயில் நிலையங்கள்: நாடு முழுவதும் 375 மாதிரி ரயில் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட சென்னை குரோம்பேட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட பெரும்பாலான ரயில் நிலையங்களில் பயணிகள் வரத்தும், நிற்கும் ரயில்களும் மிகக் குறைவாகும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்தும் திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளும் மந்தகதியில் நடைபெறுகின்றன.
"சால்ட் கோட்டர்ஸ்' 2-வது டெர்மினல் ரயில் நிலையம்: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்களின் சேவையும், நெரிசலும் அதிகரித்துள்ளது.
இதனால், 50 ஏக்கர் இடவசதியுள்ள "சால்ட்கோட்டர்ஸ் சரக்கு ரயில் நிலையத்தை, 2-வது டெர்மினல் ரயில்நிலையமாக ரூ. 200 கோடியில் மேம்படுத்தும் திட்டம் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவும், இப்போது "குளத்தில் போட்ட கல்லாக' மாறிவிட்டது.
நெரிசல் மிகுந்த மின்ரயில்கள்: சென்னை புறநகர் வழித்தடங்களில் பல ஆண்டுகளாக குறைவான மின் ரயில்களே இயக்கப்படுகின்றன. எப்போதும், நெரிசலால் திணறும் மக்களுக்கு கூடுதல் புறநகர் மின் ரயில் சேவை குறித்து எவ்வித தகவலும் இல்லை.
பரங்கிமலையில் இருந்து மேம்பால ரயில் சேவையை விரிவாக்கம் செய்யும் திட்டம் குறித்தும் அறிவிப்பு ஏதும் இல்லை.
இரண்டாவது, 3-வது அகலப் பாதை திட்டங்கள்: தமிழகத்தில் ரயில் போக்குவரத்தின் "முதுகெலும்பு' வழித்தடமாக சென்னை எழும்பூர் -நாகர்கோவில் -கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி இடையே நெரிசலைக் குறைக்க 2-வது அகலப் பாதை திட்டங்களை பகுதி பகுதியாக நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இதன் மூலம் இவ்வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இருமார்க்கத்திலும் இயக்க முடியும்.
இதன்படி விழுப்புரத்தில் இருந்து மதுரை வரையிலான 2-வது அகலப் பாதை திட்டத்துக்கு ரூ. 820 கோடி ஒதுக்கப்பட்டது.
இதில் இதுவரை மதுரை -கொடைரோடு -திண்டுக்கல் இடையே மட்டும் 2-வது அகலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் -மதுரை -கன்னியாகுமரி 2-வது அகலப் பாதை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், பயணிகளுக்கான சேவை மட்டுமன்றி தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் "திறவு கோலாக' அமையும்.
ஆனால், இத் திட்டம் குறித்தும் ரயில்வே பட்ஜெட்டில் "மெüனம் காக்க'ப்பட்டுள்ளது.
அகலப் பாதை மின்மயமாக்கல்: இதே வழித்தடத்தில் விழுப்புரம்-திருச்சி தவிர அகலப் பாதை மின்மயமாக்கும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
கொருக்குப்பேட்டை -அத்திப்பட்டு 3, 4-வது பாதை; கடற்கரை -கொருக்குப்பேட்டை 3-வது பாதை, திருவள்ளூர் -அரக்கோணம் 4-வது பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்படவில்லை.
கரூர்-சேலம், திண்டிவனம்-நகரி, ஈரோடு-பழனி மற்றும் துறைமுக இணைப்பு அகலப்பாதை உள்ளிட்ட 15 புதிய அகலப் பாதைத் திட்டங்களும் "நித்திரையில்' உள்ளன.
தமிழகத்துக்கு நிதி குறைந்ததால் ரயில்வே திட்டங்கள் முடங்கும் அபாயம்
ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு குறைந்ததால், ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்குமாறு தெற்கு ரயில்வே கோரியது. ஆனால், ரூ. 750 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
இதன்பின் இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட்டில் மேலும் ரூ. 750 கோடிக்கான திட்ட வரைவுகள் அனுப்பப்பட்டன.
எனினும், ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் "பிங்க்' புத்தகத்தில் விரிவாகத் தெரிவிக்கப்படும்.
இதன் விவரம் ஓரிரு நாள்களில் தெரியவரும்.
தமிழகத்தில் ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் மற்றும் ரகசிய கேமராக்களை நிறுவுதல், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு ஏற்கெனவே தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும், அகலப் பாதை திட்டங்கள், புதிய பாதைகள் மற்றும் மின்மயமாக்கல் திட்டங்களுக்கு ரயில்வே பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்கீடு அனுமதிக்கப்படாவிட்டால் திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...