கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்

கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட அரசு முடிவு செய்துள்ளது. கல்விக் கட்டணத்தை...
கல்விக் கட்டணம்: தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம்
Updated on
2 min read

சேலம், ஜூன் 19:   கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட அரசு முடிவு செய்துள்ளது.

கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்த நடப்பு பேரவைக் கூட்டத் தொடரில் புதிய சட்டம் இயற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் அதிக அளவில் கட்டணம், நன்கொடை வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தனியார் பள்ளிகளை மாநில அரசு ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்த முடியும் என்பதால், இப்பிரச்னையில் இதுவரை அரசு எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

1976-ம் ஆண்டு வரை தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் தான் இருந்தன.

1975-ல் தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் இயற்றப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளே தங்களுக்கு என்று விதிகளை வகுத்துக் கொண்டன.

அச்சட்டம் 1976-ல் நடைமுறைக்கு வந்த பின் தனியார் பள்ளிகள் இஷ்டம் போல செயல்படத் தொடங்கின.

கட்டுப்படுத்த முடியாத நிலை:  இந்தச் சட்டத்துக்குப் பிறகு பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் நியமனம் மற்றும் ஊதியம், மாணவர் சேர்க்கை போன்ற எந்த விஷயத்திலும் தனியார் பள்ளிகளை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வரும் நிலையில், தனியார் பள்ளிகளுக்கு கணக்குத் தணிக்கை என்பதே இல்லை என்ற நிலை உருவானது. இதனால் "வல்லான் வகுத்ததே விதி' என்பதற்கேற்ப, விரும்பிய பாடத் திட்டம், புத்தகங்கள், கட்டணம், நன்கொடை என்று தனியார் பள்ளிகள் தனி ராஜ்ஜியம் நடத்தத் தொடங்கின.

சிட்டிபாபு குழு:  இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த வே. சிட்டிபாபு தலைமையில் மெட்ரிக் பள்ளிகள் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனியார் பள்ளிகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் அரசுக்கு பரிந்துரைத்தது.

ஆனால் இதனை எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்குத் தொடுத்ததால் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை 3,700 பள்ளிகளின் நிர்வாகிகள், கல்விக் கட்டணம் என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் நிர்ணயம் செய்து வந்ததைத் தொடர்ந்து இப் பிரச்னையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர், கல்வியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

புதிய சட்டம்:   பிரச்னை விசுவரூபம் எடுத்ததைத் தொடர்ந்து 5.9.07-ல் மாவட்ட வாரியாக கல்விக்குழு அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இருப்பினும் இந்தக் குழுவால் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இப்பிரச்னை பூதாகரமாக வளர்ந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கடந்த ஏப்ரல் 5-ம் தேதி அறிவித்தது.

கல்விக் கட்டணம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு வெறுமனே அரசாணை மட்டும் பிறப்பித்தால் அவற்றால் பலன் இல்லை என்ற நிலையில், இதற்காக தனியாக சட்டம் இயற்ற அரசு இப்போது பரிசீலித்து வருகிறது.

பொறியியல் கல்லூரி போல்...  நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஜூலை 15-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை வைக்கப்படுகிறது. அன்றைய தினம் தனியார் பள்ளிகளை மாநில அரசு கட்டுப்படுத்தும் வகையில் சட்ட முன்வரைவு கொண்டு வரப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அரசே கட்டணம் நிர்ணயித்துள்ளதைப் போல் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

புதிய கல்விச் சட்டம்:  இருப்பினும் பிற மாநிலங்களில் உள்ளதைப் போன்று சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளையும் மாநில அரசே கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தக் கூடிய புதிய கல்விச் சட்டமே இன்றைய தேவை என்றும் கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com