சென்னை, அக். 27: அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 1 லட்சம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 1.4.2003-க்குப் பின் பணியில் சேரும் எந்த ஊழியருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு உத்தரவிட்டது.
எனினும் கடந்த 31.3.2003 நிலவரப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட சுமார் 1 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் என கண்டறியப்பட்டது.
இவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் நிர்வாகம் தனது பங்காக செலுத்தும் தொகையை (ஊழியர்களின் ஊதியத்தில் 12 சதவீதம் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படி தொகைக்கு இணையாக) கொண்டு ஓய்வூதியம் வழங்கும் வகையில் தன்னாட்சி பெற்ற அமைப்பை அரசு உருவாக்கியது.
ரூ. 2,232 கோடியுடன் ஓய்வூதிய அறக்கட்டளை... "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி' என்ற இந்த அமைப்பு ஓய்வூதிய அறக்கட்டளையாக ரூ. 2,232 கோடி நிதியுடன் இப்போதும் இயங்கி வருகிறது.
இப்போதைய நிலையில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதிய பயன்கள் பிரச்னை ஏதுமின்றி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், ஓய்வூதிய அறக்கட்டளையின் வசம் உள்ள இருப்பு நிதியான ரூ. 2,232 கோடியை வைத்துக் கொண்டு, வரும் 2019-2020-ம் ஆண்டு வரை மட்டுமே ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், நிதி பற்றாக்குறை காரணமாக இதற்குப் பின் சுமார் 1 லட்சம் ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பயன்களை வழங்க முடியாமல் போகும் அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவர்.
இந்த நிலையைத் தவிர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வதற்காக "ஓய்வூதிய ஓழுங்குமுறை குழுவை' அரசு அமைத்துள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் தலைமையில் இதர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பேரவை செயலாளர்கள் உள்ளிட்ட 18 பேர் கொண்ட இக் குழுவின் கூட்டம் இதுவரை இருமுறை நடத்தப்பட்டன.
இதில் முன்னதாக, போக்குவரத்துக் கழக நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு செலுத்தப்படும் பங்குத் தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.
கடைசியாக கடந்த 24.6.09-ல் நடைபெற்ற இக் குழு கூடட்டத்தில் சில பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டன.
இதன்படி மின்வாரியம் போல, போக்குவரத்து கழக நிர்வாகங்களின் சார்பில் செலுத்தப்படும் அனைத்து நிதியையும், அரசு கருவூலத்துக்கு நேரில் செலுத்த வேண்டும்.
அல்லது ஓய்வூதிய அறக்கட்டளையை களைத்துவிட வேண்டும் என அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக ஊழியர்களின் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், அரசு இதுகுறித்து இதுவரை "மெüனம் காத்து' வருகிறது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ. 115 கோடி பணப்பயன்: இந்நிலையில், ஓய்வு பெற்ற சுமார் 6,000 ஊழியர்களுக்கு, நிலுவையில் இருந்த ரூ. 115 கோடி அளவில் பணப்பயன் (கம்ப்யூட்டேஷன்) தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் புதன்கிழமை (28-ம் தேதி) நடைபெறும் விழாவில் வழங்க உள்ளார்.
இதில் ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து "இன்ப அதிர்ச்சி' தரும் அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே வலுத்துள்ளது.