திருச்சி, அக். 30: அடுத்த கல்வி ஆண்டுக்கான (2010-2011) தமிழ்நாடு அரசின் பள்ளிப் பாடநூல்கள், இதுவரை அச்சில் ஏறவே இல்லை. இதனால், காலத்தில் பாடநூல் மாணவர்களைச் சென்றடைவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
பாட நூல்கள் அச்சடிப்பவர்களின் நீண்டகாலக் கோரிக்கையான அச்சுக் கூலி உயர்வு தொடர்பான பேச்சு, இறுதி வடிவத்தை எட்டாததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் புத்தகங்களை சிவகாசி, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலுள்ள ஏறத்தாழ 168 அச்சகங்கள் ஒப்பந்தப்புள்ளிகள் அளித்து பணிகளைப் பெற்று, அச்சிட்டு வழங்கி வருகின்றன.
ஒரு பாரம் என்ற அளவில் (1*8 அளவில் 32 பக்கங்கள், ஏ4 அளவில் 16 பக்கங்கள்) ஆயிரம் பிரதிகள் அச்சிட கறுப்பு- வெள்ளைக்கு ரூ. 33-ம், பல வண்ணங்களில் அட்டைகளை அச்சிட ரூ. 60-ம், பைண்டிங் செய்ய ரூ. 19-ம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளாக இதே கூலிதான்.
இதில் பல வண்ணப் பணிகள், பைண்டிங் பணிகளை பெரும்பாலான அச்சகங்கள் வெளியே கொடுத்து- கூடுதலாகச் செலவிட்டு, இதுவரை அச்சிட்டு வழங்கி வந்துள்ளன.
இதற்கிடையே, அச்சிடும் மை விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதுதவிர, பொதுவான வாழ்வாதாரப் பொருள்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளதால், கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்த வேண்டிய நிலைக்கு பாடநூல் அச்சடிப்பவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு அச்சுக் கூலியை கறுப்பு- வெள்ளைக்கு ரூ. 43 என்பது உள்ளிட்ட கூலி உயர்வு கோரும் பட்டியல் அண்மையில் பாடநூல் கழகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த பாடநூல் கழகம், கடந்த ஆண்டு பெற்ற கூலியைவிட ஒரு ரூபாய் உயர்த்தி (!) ரூ. 34-ஆகப் பெற்றுக் கொள்ளக் கூறியதாகத் தெரிகிறது.
மற்ற பல வண்ணங்கள், பைண்டிங் உள்ளிட்ட வேறெந்த கோரிக்கையும் பரிசீலிக்கப்படவும் இல்லையாம். என்றபோதும் பாடநூல் அச்சடிப்பவர்கள் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.
இதையறிந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த சில நாள்களுக்கு முன் அச்சடிப்பாளர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசியுள்ளார். இதுதொடர்பான பேச்சு சென்னையில் சனிக்கிழமையும் (அக். 31) நடைபெறவுள்ளது.
இதனால், வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே தொடங்கிவிடக் கூடிய பாடநூல்கள் அச்சிடும் பணி அக்டோபர் மாதம் நிறைவடைந்தும் இன்று வரை தொடங்கப்படவே இல்லை.
வழக்கமாக இப்பணி ஏப்ரலில் முடிந்து, மே மாத விடுமுறைக் காலத்தில் பள்ளிகளுக்கு பிரித்தளிக்கும் பணி நடைபெறும். அப்போதெல்லாம் காலாண்டுத் தேர்வு தொடங்கியும், மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்காத நிலை சில நகர்ப் பகுதிகளிலும், பெரும்பாலான கிராமப் பகுதிகளிலும் காணப்பட்டு வந்தது.
பாடநூல்களைப் பிரித்தளிக்கும் பணியில் இருந்த இதுபோன்ற குறைபாடுகளைக் களைய கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன.
குறிப்பாக, கடந்த ஆண்டு அனைத்துப் புத்தகங்களையும் விடுமுறைக்கு முன்னதாகவே- பிப்ரவரி இறுதியிலேயே- அனைத்துப் பள்ளிகளுக்கும் பிரித்தளித்துள்ளது பாடநூல் கழகம்.
இந்த முறையும் இதுபோலவே, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைப் பட்டியலைப் பெற்று ஒழுங்குபடுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மிகப் பிரதானமான அச்சிடும் பணி மட்டும் தொடங்கவில்லை.
மாநிலம் முழுவதும் அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து, ஏறத்தாழ 800 "பிரிண்ட் ஆர்டர்கள்' மூலம், சுமார் 14.5 கோடி பிரதிகள் அச்சிட வேண்டும்.
கூலி, கட்டண உயர்வுகளை அறிவித்து வரும் தமிழக முதல்வர், நியாயமான இந்தக் கோரிக்கையையும் பரிசீலித்து அவசர உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என பாடநூல் அச்சடிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூலி உயர்வு கிட்டினாலும், கால அவகாசம் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, இரவு- பகல் கூடுதல் பணி மேற்கொள்ளவும் உரிய வகையில் தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.
சமச்சீர் கல்வி அறிமுகத்தால் தாமதமா?
தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்புக்கும், 6-ம் வகுப்புக்கும் மட்டும் அடுத்த கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதற்கான பாடத் திட்டம் தயாரிக்கும் பணியில் ஏற்படும் தாமதம்தான், பாடநூல் அச்சிடுவதிலும் தாமதத்தை ஏற்படுத்துகிறது என்ற ஒரு கருத்தும் உள்ளது. ஆனால், இதை கல்வித் துறை அலுவலர்கள் மறுக்கின்றனர்.
ஒன்றாம் வகுப்புக்கும், 6-ம் வகுப்புக்குமான புதிய சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டத்துக்கான கருத்து கேட்பு அனைத்து மாவட்டங்களிலும் சில நாள்களுக்கு முன்புதான் நடைபெற்றுள்ளது.
மேலும், இணையதளத்தின் வழியாகவும் கருத்து கேட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டங்களில் இருந்து கருத்துகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும் கல்வித் துறை அதிகாரிகள், தொடங்கிவிட்டால் மிகச்சில நாள்களிலேயே புதிய பாடத்திட்டம் தயாரிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

