பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

32 ஆண்டுகளுக்கு முன் ரத்தான உத்தரவு இப்போதும்...அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்

சென்னை, செப். 21:  32 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட உத்தரவு, இப்போது அரசு ஊழியர்களுக்கான விண்ணப்பப் படிவத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளது.   இது தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:56 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, செப். 21:  32 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட உத்தரவு, இப்போது அரசு ஊழியர்களுக்கான விண்ணப்பப் படிவத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளது.

  இது தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை உடனடியாக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  தமிழகத்தில் அரசு ஊழியர்கள், அவர்கள் வாங்கும் ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஏ, பி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களாகப் பிரிக்கப்படுகின்றனர். இந்த நடைமுறை 1977 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.

  எம்.ஜி.ஆர். ரத்து செய்த உத்தரவு...     1977-க்கு முன்பு, அரசு ஊழியர்கள் இரு பிரிவினராகக் கருதப்பட்டனர். அரசிதழில் பதிவுபெற்ற ஊழியர்கள், அரசிதழில் பதிவு பெறாத ஊழியர்கள் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தனர்.

  இந்தப் பாகுபாட்டைப் போக்கும் வகையில், அரசு உத்தரவு ஒன்றை 1977-ம் ஆண்டு வெளியிட்டார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

  அந்த உத்தரவுப்படி, அரசு ஊழியர்கள் வாங்கும் ஊதிய விகிதத்தின் அடிப்படையில் ஏ, பி, சி மற்றும் டி பிரிவு ஊழியர்களாகப் பிரிக்கப்பட்டனர்.

  சம்பளம் எவ்வளவு?  அரசு ஊழியர்களின் ஊதிய விகிதம் ரூ. 10 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் இருந்தால் அவர்கள் "ஏ' பிரிவு ஊழியர்களாகவும், ரூ. 5,500 அல்லது அதற்கு அதிகமாக (ரூ. 10 ஆயிரத்துக்கு குறைவாக) ஊதிய விகிதம் கொண்ட ஊழியர்கள் "பி' பிரிவாகவும், ரூ. 2,610 மற்றும் அதற்கு மேல் (ரூ. 5,500க்கு குறைவாக) ஊதிய விகிதத்தைக் கொண்டவர்கள் "சி' பிரிவாகவும், ஊதிய விகிதம் ரூ. 2,610-க்கு குறைவாகப் பெறும் ஊழியர்கள் "டி' பிரிவு ஊழியர்களாகவும் கருதப்படுகின்றனர்.

  நன்னடத்தை விதிகளில்...  தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கென நன்னடத்தை விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இது, "தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதிகள் 1973' என்ற பெயரில் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் உள்ள கடமைகள், பொறுப்புகள் என்னென்ன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.

  விண்ணப்பத்தில் அதிர்ச்சி தகவல்...     இணையதளத்தில் 38 பக்கங்களைக் கொண்ட நன்னடத்தை விதிகளில், அரசு ஊழியர்கள் பயன்படுத்துவதற்கான விண்ணப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

  அதில், 27-வது பக்கத்தில் அரசு ஊழியர்கள் தங்களிடம் உள்ள சொத்துகள் பற்றிய தகவலைப் பூர்த்தி செய்து அளிக்கும் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு தங்களது சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும் என்ற விவரம் தெரிவதில்லை எனத் தெரிகிறது.

  ""சொத்து விவரங்கள் பற்றிய தகவலைப் பதிவு செய்யும் விண்ணப்பத்தில், அரசு ஊழியர்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதில், "அரசிதழில் பதிவு பெற்றோர், பதிவு பெறாதோர்' என பிரித்துள்ளனர். இது, 1977-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைக்கு எதிராக உள்ளது.

  நன்னடத்தை விதிகள் 1973-ம் ஆண்டு வெளியிடப்பட்டு இருந்தாலும், அது 2009 ஏப்ரல் 3-ம் தேதி வரை திருத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சொத்து விவரங்களை தாக்கல் செய்யும் விண்ணப்பத்தில் மட்டும் திருத்தம் இல்லை'' என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.