இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் செல்வாக்கை நிலைநாட்டிய வாசன் அணியினர்

திருச்சி, ஏப். 12: மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலில் தங்களது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளனர் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அணியினர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியையும், மொத
இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் செல்வாக்கை நிலைநாட்டிய வாசன் அணியினர்
Updated on
2 min read

திருச்சி, ஏப். 12: மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தலில் தங்களது செல்வாக்கை நிலைநாட்டியுள்ளனர் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அணியினர்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியையும், மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தலைவர் தேர்தலில் 23 தொகுதிகளையும் வாசன் அணியினர் கைப்பற்றியுள்ளனர்.

ஊராட்சி அளவில் நடைபெற்ற தேர்தலில் பலர் வெற்றி பெற்றிருந்தாலும், அனைவரும் கவனம் செலுத்தியது சட்டப்பேரவைத் தொகுதித் தலைவர் தேர்தலில்தான். இதற்குக் காரணம், இத் தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படுவர்கள்தான் மக்களவைத் தொகுதித் தலைவர் தேர்தலிலும், மாநிலத் தலைவர் தேர்தலிலும் வாக்களிக்க முடியும்.

அந்த வகையில், சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலிலும் வெற்றி பெற்று, தமிழகத்தில் தனது தந்தைக்கும், தனக்கும் உள்ள செல்வாக்கை வாசன் நிலைநாட்டியுள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு அணிகள் இருந்தாலும், இத் தேர்தலில் ஜி.கே. வாசன் அணிக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுத்தது ப. சிதம்பரம் அணிதான் (கார்த்தி சிதம்பரத்தால் வழி நடத்தப்படும் அணி).

ஜி.கே. வாசன் அணிக்கும், ப. சிதம்பரம் அணிக்கும் இடையே இருந்த தேர்தல் உச்சகட்ட பரபரப்பை திருச்சியில் வாக்குப்பதிவு நடந்த பள்ளிக்கு வெளியே காண முடிந்தது.

அதுபோல, ஞாயிற்றுக்கிழமை இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மற்றும் மக்களவைத் தொகுதித் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன், மாநிலத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்களுக்கு தலா 3 நிமிஷங்கள் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது வாசன் அணியைச் சேர்ந்தவர்கள் அவரது பெயரைக் குறிப்பிட்டு பேசவும் தவறவில்லை. இதற்கு மற்றவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க, தேர்தல் பார்வையாளர்கள் பின்னர் கடுமையாக எச்சரிக்கையையும் விடுத்தனர். ஆனாலும், ஜி.கே. வாசனின் பெயரை உச்சரித்த போது மிகுந்த கரவொலி எழுந்து கொண்டே இருந்தது.

மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திருவள்ளூர், வேலூர், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, கோவை, பெரம்பலூர், கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 23-ஐ வாசன் அணியும், சிவகங்கை உள்பட 6 தொகுதிகளை ப. சிதம்பரம் அணியும், 2 தொகுதிகளை ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அணியும், 2 தொகுதிகளை தங்கபாலு அணியும், தலா ஒரு தொகுதியை கிருஷ்ணசாமி, பிரபு அணியும் கைப்பற்றின.

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி:மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்ட போது, மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை, காமராஜர் ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவோம்; அதற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம்' என்பதை வலியுறுத்தினர்.

சிலர் பேசிய போது, அதிமுக, திமுகவுக்கு நாம் காவடி தூக்கிய காலம் போய், அவர்கள் நமக்காக காவடி தூக்கும் காலம் தற்போது வந்துவிட்டது என்றும் கூறினர்.

"தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை1967-ல் இழந்தோம். அதன் பின்னர் நம்மால் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாததற்கு நம்மிடம் உள்ள ஒற்றுமையின்மை தான் காரணம், அணி அணியாகப் பிரிந்திருப்பதுதான் மற்றவர்களுக்கு பயனாகிவிடுகிறது.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யார் வந்தாலும், தேர்தலுக்குப் பிறகு நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் ஏற்படுத்துவோம்' என்றும் பேசினர்.

இந்த நிலையில், கூட்டத்தில் பேசிய சிலர் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிடுவதைக் காட்டிலும், தனித்துப் போட்டியிடுவோம் என்று வலியுறுத்தினர்.

மாநிலத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்களின் பேச்சை போலவே, அகில இந்திய காங்கிரஸ் செயலர் ஜித்தேந்தரா சிங்கின் பேச்சும் இருந்தது.

"தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸôருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வர விரும்புகிறோம். காமராஜர் ராஜ்ஜியத்தை மீண்டும் ஏற்படுத்துவோம்' என்றும் அவர் பேசினார்.

தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு, வருங்காலத்தைத் திட்டமிட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை படிப்படியாக செய்யத் தயாராகி வருகிறது காங்கிரஸ் கட்சி. அதில் தற்போது நடத்தி முடிக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முதல்படிதான். மற்றவற்றை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர் கட்சியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com