ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நீண்ட நாள் கனவு நனவாகிறது: விழுப்புரம் மயிலாடுதுறை இடையே இன்று முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம்

சிதம்பரம், ஏப். 22: விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில்பாதையில் உயர் நீதிமன்ற கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைவதால், ஏப்ரல் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:38 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், ஏப். 22: விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில்பாதையில் உயர் நீதிமன்ற கெடு வியாழக்கிழமையுடன் முடிவடைவதால், ஏப்ரல் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. கடலூர், விழுப்புரம், நாகை மாவட்ட மக்களின் கடந்த மூன்றரை ஆண்டு கனவு இன்று நனவாகிறது.

விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தூரத்தில் ரூ.270 கோடி செலவில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதையொட்டி விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மீட்டர் கேஜ் பாதையில் ஓடிக் கொண்டிருந்த பயணிகள் ரயில்கள் 2006 டிசம்பர் 1-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

ரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்ட பின்னர் இரும்பு மற்றும் தளவாட பாகங்களின் விலை உயர்வினால் ரயில்வே பணி டெண்டர் எடுத்தவர்கள் பணியை விட்டு விட்டு சென்று விட்டனர். அதன் பின்னர் ரயில்வே பாதை அமைக்கும் பணியை ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் பொறுபேற்று டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் இணைந்து பணியை தொடங்கியது. ரயில்வே பாதை அமைக்கும் கூடுதலாக நிதியும் ஒதுக்கப்பட்டது.

கெடிலம், பெண்ணையாறு, வெள்ளாறு, கொள்ளிடம் ஆகிய 4 பெரிய ஆறுகளின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியில் பாதை அமைக்கும் பணி தாமதமானது.

விழுப்புரம் அருகே பெண்ணையாற்றில் 700 அடி நீள பாலமும், கெடிலம் ஆற்றில் 1600 அடி நீள பாலமும், பரங்கிப்பேட்டை அருகே வெள்ளாற்றின் குறுக்கே 800 அடி நீள பாலமும், சிதம்பரம் அருகே கொள்ளிடத்தில் 2100 அடி நீள பாலமும் கட்டப்பட்டுள்ளன. மேலும் 128 சிறிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளன.

ஆமை வேகத்தின் நடைபெற்று வந்த ரயில்வே பாதை அமைக்கும் பணியினால் ஓராண்டுக்குள் பணி முடிக்க இயலாமல் போனது.

முதல் கட்டமாக சீர்காழி - மயிலாடுதுறை இடையே 22 கி.மீ. தொலைவில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

2-வது கட்டமாக விழுப்புரம் - கடலூர் இடையே 48 கி.மீ. வரை பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்த கடந்த மே மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பின்னர் 3-வது கட்டமாக கடலூர் - சீர்காழி வரை 52 கி.மீ. பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததும் ஜூலை 31-ல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ரயில்வே பாதை அமைக்கும் பணி முடிந்தாலும் சிக்னல், பிளாட்பாரம், ரயில் நிலையக் கட்டடங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படாததால் ரயில்கள் இயக்குவது தாமதம் ஏற்பட்டது.

குறிப்பாக சிதம்பரம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகள், பயணிகள் பாதையை கடந்து செல்லும் மேம்பாலம் மற்றும் நடைமேடை, கழிப்பறை அமைக்கும் பணி ஆகியவை இன்னும் முற்றுப் பெறாமல் உள்ளது.

இதுபோன்று 15 ரயில் நிலைய கட்டடங்களில் இன்னும் 30 சதவீத பணிகள் முடிவு பெறாமல் உள்ளது.

புதிய அகல ரயில்வே பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் 4 மாதங்கள் கழித்து தற்போது மயிலாடுதுறையைச் சேர்ந்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான கே.ராஜேந்திரன் உடனடியாக பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்சில் மார்ச் 5-ம் தேதி முதல் விசாரணைக்கு வந்தது.

விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே மூன்றரை ஆண்டுகள் பாதை அமைக்கப்படும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.

எனவே மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்க வேண்டும் என வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் கோரினார்.

இந்நிலையில் மீண்டும் மார்ச் 15-ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் பயணிகள் ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்பதை இறுதிகட்டமாக நீதிமன்றத்தில் ரயில்வே நிர்வாகம் தெரிவிக்க உத்தரவு பிறப்பித்தது.

அதையடுத்து ரயில்வே நிர்வாகம் மார்ச் 23-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 வார கெடுவுக்குள் பயணிகள் ரயில்களை இயக்குவதாக தெரிவித்தது. ரயில்வே துறை அளித்த உறுதிமொழிபடி அதிகாரிகள் செயல்படுவார்கள் என நம்புகிறோம் என நீதிபதி தெரிவித்தனர்.

இந்நிலையில் காலக்கெடு தேதி நெருங்கியும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படவில்லை. எனவே ரயில்வே நிர்வாகம் மீது நஷ்டஈடு கோரப்படும் என வழக்கறிஞர் கே.ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால் இந்த காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதால் அவசர, அவசரமாக விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே பயணிகள் ரயிலை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23) முதல் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.