திருவாரூர் : காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் நஷ்டத்தை சிறிதளவும் ஈடு செய்யாது. மேலும், பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்கின்றனர் விவசாயிகள்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் தொடங்கி, டிசம்பர் மாதத்தில் முதல் வாரம் வரை ஏறத்தாழ 15 தினங்களுக்கு தொடர்ந்து பெய்த பலத்த மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஏறத்தாழ 4.10 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன.
ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் 30,000 ஹெக்டேர், திருவாரூர் மாவட்டத்தில் 68,000 ஹெக்டேர், நாகை மாவட்டத்தில் 77,000 ஹெக்டேரில் முழுவதும் பயிர்கள் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மற்றவை 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மூழ்கியுள்ளதாகவும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, இடுபொருள்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சாகுபடிச் செலவுகள் பெருமளவில் உயர்ந்துவிட்டன.
நிகழாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெல் பயிர்களுக்கு ஏக்கருக்கு 12,000 - 14,000 வரை செலவு செய்துள்ளதாகக் கூறுகின்றனர் விவசாயிகள். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு இழப்பீடாக குறைந்தபட்சம் ஏக்கருக்கு 12,000 வழங்க வேண்டும் என்பதும் அவர்களது வாதம்.
ஆனால், செவ்வாய்க்கிழமை கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 8,000 இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது எவ்விதத்திலும் பொருத்தமற்றது என்றார் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் ஆறுபாதி கல்யாணம்.
அவர் மேலும் கூறியது:
நிகழாண்டில் சம்பா சாகுபடி ஏறத்தாழ 30 சதம் மட்டுமே உரிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றவை அனைத்தும் பருவம் தவறி செய்யப்பட்டவை. இதில், பயிர்கள் தற்போது சூல் கட்டும் பருவம், பஞ்சு பருவம், பூ பருவம், கதிர் வரும் பருவம், பால் கட்டும் பருவம் எனப் பல்வேறு நிலைகளில் உள்ளன. இவை அனைத்துமே இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
பயிர்கள் முழுமையாக மூழ்கியதை மட்டுமே மாவட்ட நிர்வாகங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு, பாதிப்பு எனப் புள்ளி விவரத்தை அளித்துள்ளன. ஆனால், வெவ்வேறு பருவத்தில் இருந்த பயிர்கள் தற்போது பசுமையாக இருக்கும். ஆனால், இந்தப் பயிர்களுக்கு பல வகைகளிலும் ஊட்டம் அளித்தாலும், மகசூல் இழப்பு ஏறத்தாழ 75 முதல் 80 சதம் வரை ஏற்படும்.
இதனால், விவசாயிகள் தாங்கள் செய்த செலவைக்கூட திரும்பப் பெறும் வகையில் மகசூல் கிடைக்காது. மேலும், பயிர்க் காப்பீடு கணக்கெடுப்பில் காணப்படும் குளறுபடிகளால், விவசாயிகளின் பொருளாதார இழப்பை, காப்பீடு நிறுவனம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையால் முழுமையாகவும் ஈடு செய்ய இயலாது.
பயிர்கள் பாதிப்புக்கு ஹெக்டேருக்கு 37,500 இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரி வந்த நிலையில், அரசு 8,000 இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது விவசாயிகளின் இழப்புகளை எவ்விதத்திலும் ஈடு செய்யாது. அதேபோல, பாதிக்கப்பட்ட பயிர்களின் பரப்பளவை அரசு குறைத்து மதிப்பிடக் கூடாது என்றார் அவர்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 2,500 மானியமாக வழங்கலாம் என்றிருந்த போது, 2008-ம் ஆண்டில் அதை இரு மடங்கு உயர்த்தி, ஹெக்டேருக்கு 7,500 இழப்பீடாக வழங்கப்பட்டது. இதை விவசாயிகள் அப்போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது மானியமாக 4,000 வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், தமிழக அரசு தற்போது ஹெக்டேருக்கு 8,000 மட்டுமே வழங்குவதாக அறிவித்துள்ளது.
முன்பு வழங்கப்பட்டதைப் போல, நிவாரணம் வழங்க முடிவு செய்தாலும், அரசு தற்போது ஹெக்டேருக்கு 12,000 வழங்கியிருக்க வேண்டும் என்பதும் விவசாயிகளின் கருத்தாக உள்ளது.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பொருத்தவரையில் அரசு பாதிப்புகளைக் குறைத்து மதிப்பிடுவது, இழப்பீடு வழங்கும் போது விவசாயிகள் மத்தியில் பெரும் பிரச்னையை உருவாக்கும். இது அரசுக்கு பெரும் சிக்கலையும், சங்கடத்தையும் உருவாக்கும்.
மேலும், சாகுபடிச் செலவுக்கு ஏற்ற வகையிலும், விவசாயிகளின் பொருளாதார இழப்புகளை ஈடு செய்யும் வகையிலும் அரசின் இழப்பீடு அமைய வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் நலனுக்கு எதிரான அதிமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும்: கனிமொழி எம்.பி.

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

ஊதியூா் அருகே பள்ளத்தில் இறங்கிய தனியாா் பேருந்து
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


