விழுப்புரம் மாவட்டத்தில் கனவாகிப்போன பருத்தி விளைச்சல்

விழுப்புரம், பிப். 4: தமிழகத்தின் பருத்தி உற்பத்தியில் பெரும் பங்கு வகித்த விழுப்புரம் மாவட்டம் தற்போது அடியோடு குறைந்து விவசாயிகளின் கனவுப் பயிராக மாறிவிட்டது. விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்
விழுப்புரம் மாவட்டத்தில் கனவாகிப்போன பருத்தி விளைச்சல்

விழுப்புரம், பிப். 4: தமிழகத்தின் பருத்தி உற்பத்தியில் பெரும் பங்கு வகித்த விழுப்புரம் மாவட்டம் தற்போது அடியோடு குறைந்து விவசாயிகளின் கனவுப் பயிராக மாறிவிட்டது.

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை முன்பு பருத்தி மார்க்கெட் என்று தான் அழைப்பார்கள். விளைச்சல் காலத்தில் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு, ஒரு கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டிகள் வரிசைகட்டி நிற்கும் காலத்தை விவசாயிகள் நினைவு கூறுகின்றனர்.

புதுவை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், தஞ்சை, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் இங்கு விற்பனைக்கு கொண்டுவரும் நிலை இருந்தது. ஆனால், தற்போது அதன் கிடங்குகள் காலியாகி பருத்தி வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கு 2000-01-ல் 7,166 டன், 2001-02-ல் 6,386 டன், 2002-03-ல் 6,600, 2003-04-ல் 5,232, 2004-05-ல் 7,638, 2005-06-ல் 6383, 2006-07-ல் 3,415, 2007-08-ல் 2,416, 2008-09-ல் 2,579 டன் என்ற வகையில் படிப்படியாக பருத்தி வரவு குறைந்து விட்டது.அண்ணா கிராமத்தில் 1983-ல் எல்.ஆர்.ஏ. 51-66 ரக பருத்தி பயிரிடப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் விதைப்புழு காரணமாக பி.டி. பருத்திக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். இருப்பினும் பருத்தியின் விளைச்சல் கால அளவு 6 மாதத்துக்கும் மேல் ஆவதாலும், தொழிலாளர் பிரச்னை அதிகரித்து விட்டதாலும், உற்பத்தி பரப்பு குறைந்து விட்டது.

நெல் அறுவடை இயந்திரங்கள் வந்துவிட்டதால் தொழிலாளர் பிரச்னையை சமாளிக்க நெற்பயிருக்கு விவசாயிகள் மாறினர். இதனால் பருத்தி உற்பத்தி பாதிக்கப்பட்டது என்று ஒழுங்குமுறை விற்பனைக் கூட செயலர் எஸ். சண்முகம் தெரிவித்தார்.பருத்தி குவிண்டாலுக்கு அதிகபட்ச விலை ரூ.3,370, குறைந்தபட்ச விலை ரூ.2,719, சராசரி விலை ரூ.3,250 என சந்தை விலை உள்ளது. ஆனால் பருத்தி வரத்துதான் இல்லை என்று விற்பனைக் கூட கண்காணிப்பாளர் வீ.சத்தியமூர்த்தி கூறுகிறார்.

பருத்தி விளைச்சல் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் கே.ராமலிங்கம் கூறுகையில், ""10 முதல் 15 ஆயிரம் ஹெக்டர் வரை பயிரிடப்பட்ட பருத்தி தற்போது 6 ஆயிரம் ஹெக்டரில் பயிரிடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக பருத்தி பூக்கும் நேரத்தில் மழை பெய்வதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் அவர்கள் மணிலா, கம்பு, நெல் என்று மாறியது மட்டுமல்லாமல், மலைப் பகுதிகளில் பயிரிடப்பட வேண்டிய கோஸ், கேரட் ஆகிய பயிர்களுக்கு மாறி வருகின்றனர்.

பருத்திக்காக உற்பத்தி என்ற நிலைமாறி, தற்போது பி.டி. காட்டன் என்ற பருத்தி வகையை விதைக்காக மட்டும் விவசாயிகள் பயிரிடுகின்றனர். இதனால் சந்தைக்கு பருத்தி வருவதில்லை. அரசு சார்பில் பருத்தி உற்பத்தி பரப்பை அதிகரிக்க செயல் விளக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மருந்து தெளிப்பான்கள், உயிரியல் பூச்சி கொல்லிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. உழவர் வயல்வெளிப் பள்ளிகள் மூலம் நன்மை பயக்கும் பூச்சிகள், தீமைபயக்கும் பூச்சிகளை இனங்காணுதல் குறித்து பயிற்சி அளித்து வருகிறோம்'' என்றார்.

நவீன விவசாயத்துக்கு மாறினாலும், தனியார் நிறுவனங்கள் உரிய காலங்களில் பருத்தி விதைகளை வாங்க சுணக்கம் காட்டியதாலும் அப் பயிரிலிருந்து விவசாயிகள் விலகிவரக் காரணமாக அமைந்துவிட்டது. இனிவரும் காலங்களிலாவது பணப் பயிர்களை அறிமுகப்படுத்தும்போது, விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உத்தரவாதம் இருக்கும் வகையில் அரசு தமது கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com