பி.டி. கத்தரி: தமிழகத்தின் குரல் ஒலிக்குமா?
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை, வணிக நோக்கில் விளைவித்து விற்பதற்கு அனுமதி தருவது பற்றி...


சென்னை, ஜன. 5: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை, வணிக நோக்கில் விளைவித்து விற்பதற்கு அனுமதி தருவது பற்றி மத்திய அரசு நடத்தும் கருத்து கேட்பு கூட்டங்களில் தமிழக விவசாயிகளின் குரல் ஒலிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை (பி.டி. கத்தரிக்காய்) வணிக நோக்கில் விளைவித்து, உணவுப் பொருளாக விற்கலாம் என மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் உயிரி-தொழில்நுட்ப கண்காணிப்புக் குழு அறிவித்தது.
இதற்கு இயற்கை விவசாயிகள், சுகாதார வல்லுநர்கள், இந்திய முறை மருத்துவம் செய்வோர் ஆகியோரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. வேறெந்த நாட்டிலும் இல்லாத நிலையில், இந்தியாவில் இதை சோதனை செய்து பார்க்க வேண்டிய அவசியம் என்ன? என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார்.
தமிழக முதல்வர் கருணாநிதியும் மக்களின் கருத்துகளை அறியாமல் இதை செயல்படுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். இந்தச் சூழ்நிலையில், பி.டி. கத்தரிக்காய் வணிக ரீதியில் பயிரிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
மக்கள் கருத்து கேட்பு இந்த மாதம் நடக்கவுள்ளது. ஜனவரி 13-ல் கோல்கத்தா, 16-ல் புவனேஸ்வரம், 19-ல் ஆமதாபாத், 22-ல் ஹைதராபாத், 23-ல் பெங்களூர், 27-ல் நாகபுரி, 30-ல் சண்டீகரில் இக் கூட்டங்கள் நடக்கவுள்ளன.
இந்தக் கூட்டங்கள் நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி மாலை 3.30-க்கு முடிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கூட்டத்திலும் அதிகபட்சம் 10 பேர் மட்டுமே கருத்துகளைப் பதிவு செய்ய முடியும்.
மொத்தம் 18 மணி நேரம் மட்டுமே மக்கள் கருத்து கேட்புக்கு ஒதுக்கப்பட்டிருப்பது சரியான அணுகுமுறை அல்ல என்று பாரம்பரிய முறை விவசாயப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கூட்டம் என்ற அளவுக்குக் கூட இல்லாமல், மொத்தமே ஐந்து கூட்டங்கள்தான் நடத்தப்படும் என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் விவசாயிகள், இயற்கை வேளாண் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் இயற்கை முறை விவசாயத்தின் மூலம் அதிக விளைச்சலை ஈட்டி, அதிக லாபம் ஈட்ட முடியும் என விவசாயிகள் நிரூபித்து வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் இதற்கான கூட்டம் எதையும் மத்திய அரசு நடத்தப் போவதில்லை என்று தெரிகிறது.
பி.டி. கத்தரிக்காயின் தன்மை பற்றி எல்லோரின் கருத்துகளையும் அறிய வேண்டும் என்ற நிலையை தமிழக அரசும் எடுத்துள்ளதால், மாநிலத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...