பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

மத்திய அரசின் 10 கிலோ திட்டத்தால் தமிழகத்தில் ரேஷன் அரிசி அளவில் மாற்றம் இருக்காது

சென்னை, ஜன.22: குடும்பத்துக்கு மாதத்துக்கு 10 கிலோ அரிசி, கோதுமை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தால், தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி அளவில் மாற்றம் இருக்காது. ஆனாலும், மார்ச் மாதத்துக்குள் மத்திய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:55 am

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, ஜன.22: குடும்பத்துக்கு மாதத்துக்கு 10 கிலோ அரிசி, கோதுமை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தால், தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி அளவில் மாற்றம் இருக்காது.

ஆனாலும், மார்ச் மாதத்துக்குள் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் 2.5 லட்சம் டன் அரிசியை தமிழகம் பெற்றுக் கொள்ளும் என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் கிலோ அரிசி ரூ.1}க்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தில் ஒரு மாத அரிசித் தேவையின் அளவு 3.2 லட்சம் டன்னாக உள்ளது. ஆனால், அந்த்யோதயா அன்னபோஜனா திட்டம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் மற்றும் மேல் உள்ளவர்களுக்கு என மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யும் ஒரு மாத அரிசியின் அளவு 2.96 லட்சம் டன்னாகும். இது, மாநிலத்தின் தேவையை விட 25 ஆயிரம் மெட்ரிக் டன் குறைவாகும்.

இதில், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு என மாதந்தோறும் 1.25 லட்சம் மெட்ரிக் டன் அடங்கும். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதத்துக்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

அண்டை மாநிலங்களில்... பற்றாக்குறையாக உள்ள அரிசித் தேவையின் அளவைப் பூர்த்தி செய்ய கடந்த காலங்களில் வெளிச் சந்தை விலைக்கு மத்திய அரசிடம் இருந்து அரிசி வாங்கப்பட்டது.

""ஒரு கிலோ ரூ.16 என்ற அளவில் மத்திய அரசு கொடுத்த அரிசி வாங்கப்பட்டு தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. தமிழகத்தைத் தவிர்த்து மற்ற தென் மாநிலங்கள், வெளிச் சந்தை விலைக்கு மத்திய அரசு கொடுக்கும் அரிசியை விரும்புவதில்லை. தேவையைப் பூர்த்தி செய்ய மட்டுமே மத்திய அரசு அளிக்கும் அரிசி வாங்கப்படுகிறது. இப்போது ஆந்திரத்தில் நெல் விளைச்சல் அதிகமாக உள்ளது. எனவே, அங்கிருந்து 1 லட்சம் டன் அளவுக்கு அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. இது, மத்திய அரசின் வெளிச் சந்தை விலையை விட கிலோவுக்கு சுமார் ரூ.2 அதிகம்'' என தமிழக உணவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் திட்டம்...  விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்காக மாதத்துக்கு 10 கிலோ அரிசி மற்றும் கோதுமையை, கிலோ ரூ.15.37 மற்றும் 10.80 விலையில் மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மார்ச்சுக்குள் குடும்பத்துக்கு 35 கிலோ அரிசி மற்றும் கோதுமையை வழங்கும் வகையில் அவற்றை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ""மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பு வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆகும். மற்ற மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாதத்துக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இப்போதைய அறிவிப்பின்படி, கூடுதலாக 10 கிலோ அரிசியை வழங்க வேண்டும்.

ஆனால், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ், மேல் எனப் பிரிக்கப்படவில்லை. அனைத்துத் தரப்பினருக்கும் அரிசி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இப்போதைய திட்டம் ஏற்கெனவே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக, மத்திய அரசு தரும் அரிசி அளவை வேண்டாம் என ஒதுக்கி விட முடியாது. குடும்பத்துக்கு மாதத்துக்கு 10 கிலோ அரிசித் திட்டத்துக்காக இந்தியா முழுவதும் 10.64 லட்சம் டன் அரிசியும், 25.43 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் இவற்றைப் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மார்ச்சுக்குள் 2.5 லட்சம் டன் அரிசியும், 13,200 மெட்ரிக் டன் கோதுமையும் மத்திய அரசிடம் இருந்து பெறப்படும். இதனால், ஆந்திரத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் அரிசியின் அளவு படிப்படியாக குறைக்கப்படும். பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அரிசி பயன்படுத்தப்படும்'' என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.