மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

வாழ்ந்து காட்டுவோம் திட்டம்: அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படுமா?

ஆலங்குடி: அனைத்து ஊராட்சியிலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை மேம்படுத்திச் செயல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். உலக வங்கியின் நிதியில் ஜப்பான் சமூக மாநில மேம்பாட்டுத் திட்டமானது

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:24 am

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி: அனைத்து ஊராட்சியிலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை மேம்படுத்திச் செயல்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலக வங்கியின் நிதியில் ஜப்பான் சமூக மாநில மேம்பாட்டுத் திட்டமானது இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் இந்தத் திட்டம், கிராம மக்கள் இயக்கம்,வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு 2005-06 முதல் செயல்படுத்தப்படுகிறது.

கிராம மக்கள் இயக்கம் திட்டத்தில், கிராமப் பகுதிகளில் எளிய மக்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவர். புதுக்கோட்டை மாவட்டத்தில்  ஓர் ஊராட்சியிலும், பிற மாவட்டங்களின் பெரும்பாலான ஊராட்சிகளிலும் இது செயல்படுத்தப்படுகிறது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது தமிழ்நாட்டில் புதுக்கோட்டை  மேலாத்தூர், கடலூர் - கீரப்பாளையம், திருச்சி-ஆராய்ச்சி மற்றும் வேலூர் - துத்திப்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் செயல்படுத்தப் படுகிறது.

இதில் அந்தந்த ஊராட்சிகளின் தலைவர்களே திட்டத்தின் தலைவராக இருப்பர். ஊராட்சிகளில் எளிய குடும்பம், மாற்றுத் திறனாளிகள், மிகவும் பின்தங்கியோர் என இன அடைப்படையின்றிக் குழு அமைத்து, அதன் பயனாளிகளைக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்தின் நோக்கம், எளிய குடும்பங்களைச் சேர்ந்த தனி நபரையும் தனித் திறமையால் மேம்படுத்த வேண்டும் என்பதே.

இத் திட்டத்தைச் செயல்படுத்த, மூன்று தவணைகளாக ரூ. 17 லட்சம் நிதி அளிக்கப்படுகிறது. இதைக் கொண்டு மக்களை முழுமையாகச் சென்றடையும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

மேலும், குளம் தூர்வாருதல், சாலை அமைத்தல், ஆபத்தான  நிலையில் உள்ள பள்ளங்களைச் சீரமைத்தல், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், தையல், மின் பணி, பொக்லைன் இயந்திரம் இயக்குதல், கயிறு உற்பத்தி, ஓட்டுநர் உரிமம் குறித்த பயிற்சிகள் இலவசமாகவும், பிற நிறுவனங்களுடன் இணைந்து சலுகைக் கட்டணத்திலும் அளிக்கப்படுகின்றன.

இதுபோன்ற திட்டங்களை முழுமையாக விரைந்து செயல்படுத்தினால், அதற்கான தவணைத் தொகை அடுத்தடுத்து வழங்கப்படும்.  மேலும், இத் திட்டத்தை முழுமையாக உரிய காலத்தில் செயல்படுத்தினால், அமுதசுரபி என்னும் திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சம் வழங்கப்படும்.   உதாரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே மேலாத்தூர் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முதலில் இத் திட்டம் குறித்து கிராம மக்களின் விழிப்புணர்வுக்காக ரூ. 1 லட்சத்தில் பதாகைகள் வைத்தல், சுவரில் விளம்பரங்கள் எழுதுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர், இத் திட்டத்தின் விதிகளின் படி உரிய பயனாளிகளைத் தேர்வு செய்து பணிகளும் நடைபெறுகின்றன. அதன்படி இரு தவணைகளாக ரூ. 14 ஆயிரம் பெற்று குடிநீர், சாலை, குளம் மேம்படுத்துதல், தையல், கயிறு தயாரித்தல் உள்ளிட்ட பயிற்திகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் பலர் பயிற்சியும் பெற்றனராம்.

ஆனால், இதுபோன்ற பயிற்சிகள் பெயரளவிலேயே உள்ளதாகவும். அதன் செயல்பாடுகளில் பின்னடைவு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இதை மேம்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் இத் திட்டத்தை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும் என்பதுடன் கூடுதலாக நிதியுதவி செய்து, இங்கேயே பயிற்சிக்கேற்ற தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது.

ஊராட்சியின் ஒத்துழைப்புடன் மிகவும் எளிய குடும்பத்தினர் சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக, முன்மாதிரியாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த இரு திட்டங்களையும் முழுமையாக அனைத்து ஊராட்சிகளிலும் அமல்படுத்த வேண்டும்.  அதற்குமுன்னதாக, இத் திட்டத்தில் பயிற்சியாளர்கள், அலுவலர்களை அரசே நியமிக்க வேண்டும்.

இவ்வளவு தொகையில் இதைச் செய்தோம் என்று அறிக்கையின் வாயிலாகக் கூறுவதாக அமைந்துள்ள இத் திட்டத்தை, செயல்பாடுகளின் மூலம் தீர்மானிக்கும் அளவுக்கு மேம்படுத்த வேண்டும். அதற்குக் கூடுதல் நிதியும், அலுவர்களின் கண்காணிப்பும் அவசியம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.