பராமரிப்பு இல்லாமல் சிதிலமடையும் பழைமையான கோயில்

திருவெறும்பூர்:   திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள அருள்மிகு நறுங்குழல் நாயகி உடனுறை அருள்மிகு திருஎறும்பீசுவரர் கோயிலைப் பராமரிக்காமல் இந்து சமய அற நிலையத் துறையும், தொல்லியல் துறையும் புறக்க
பராமரிப்பு இல்லாமல் சிதிலமடையும் பழைமையான கோயில்
Updated on
2 min read

திருவெறும்பூர்:   திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள அருள்மிகு நறுங்குழல் நாயகி உடனுறை அருள்மிகு திருஎறும்பீசுவரர் கோயிலைப் பராமரிக்காமல் இந்து சமய அற நிலையத் துறையும், தொல்லியல் துறையும் புறக்கணித்து வருகின்றன.

தென்னாட்டில் சிவபெருமான் உறையும் தலங்களில்

சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற 276 தலங்கள் உள்ளன. அவற்றுள் திருவெறும்பியூர் (திரு-எறும்பியூர்) என்னும் திருஎறும்பீசுவரர் கோயிலும் ஒன்று.

இத் தலம் தென் கைலாயம் எனவும், மேரு மலையின் ஒரு துண்டு எனவும் கூறப்படுகிறது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இறைவன் அருள்மிகு திருஎறும்பீசுவரர் என்றும், இறைவி அருள்மிகு நறுங்குழல் நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். 1360 ஆண்டுகள் பழைமையானது என்ற பெருமையும் இந்தக் கோயிலுக்கு உண்டு.

இக் கோயில் நிர்வாகம் 1946-ம் ஆண்டுக்கு முன்னர் தேவஸ்தான கமிட்டியின் மேற்பார்வையில் இருந்து வந்தது. பின்னர், தமிழக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.

அதன்படி, நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரி கோயில் பணிகளைக் கவனித்து வருகிறார். மேலும், பழைமை வாய்ந்த இந்தக் கோயில் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வு தேரோட்டம் ஆகும். ஆனால், இக் கோயில்  தேர் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகியும், இந்து சமய அறநிலையத் துறையும், கோயில் நிர்வாகமும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, எறும்பீசுவரர் நற்பணி மன்றத்தின் முயற்சியால் தேர் திருப்பணி கமிட்டி தலைமையில், நன்கொடை வசூல் செய்து வழிபாட்டு மன்றம் மூலம் புதிய தேர்  செய்யப்பட்டு, தேர் வெள்ளோட்டம் 31.5.2004 அன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது சிறப்பான முறையில் திருவிழா நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த மன்றத்தின் மூலம் தெப்ப உத்சவமும் நடைபெறுகிறது. நுழைவு வாயில் கட்டடமும் கட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் கோயில் தெப்பக் குளத்தின் சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்தது. தடுப்புச் சுவர் இல்லாததால், தெப்போத்சவம் நடைபெற்ற போது சிலர் குளத்தில் விழுந்தனர்.

இதையடுத்து, குளத்தின் சுற்றுச் சுவரைக் கட்ட சிவனடியார்கள், திருஎறும்பீசுவரர் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், மலைக்கோட்டை உதவி ஆணையர்களைச் சந்தித்து, குளத்துக்கு சுற்றுச்சுவர் கட்டித் தர கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை மாவட்ட நிர்வாகமோ, இந்து சமய அறநிலையத் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இக் கோயிலின் மலை மேல் உள்ள சுற்றுச் சுவர்களில் செடி முளைத்து சுவர் இடியும் நிலையில் உள்ளது. மேலும், கோயிலைச் சுற்றிலும் முள் புதர்கள் மண்டியுள்ளன. மலையைச் சுற்றியுள்ள பகுதிகளை சிலர் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதால், இப் பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.  மேலும், கோயிலுக்குச் சொந்தமான பகுதியில் சிலர் ஆக்கிரமித்து வீடுகளைக் கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவனடியார்கள், பொதுமக்கள் கூறியது:

இக் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், கோயிலைப் பராமரிக்க அரசுத் துறைகள் முனைப்புக் காட்டவில்லை. கோயில் தேர் சீரமைப்பு, கோயில் குளத்தைத் தூர் வாரியது என அனைத்துப் பணிகளும் வழிபாட்டு மன்றத்தின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோயிலைச் சுற்றி முள் புதர்கள் மண்டியுள்ளன. கோயிலின் வசந்த மண்டபமும் இடிந்துள்ளது. கோயிலின் சுற்றுச் சுவர்களில் செடி முளைத்துள்ளது. இதனால் கோயில் சுவர் இடியும் நிலையில் உள்ளது. இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர் அவர்கள்.

இதுகுறித்து திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் செயல் அலுவலர் (பொறுப்பு) ராமநாதன் கூறியது:

திருக்குளத்தின் சுற்றுச் சுவர் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. குளத்தில் தண்ணீர் வற்றிய பின்னர், குளத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பும் பணிகள் தொடங்கும். கோயிலை  தொல்லியல் துறைதான் பராமரித்து வருகிறது.  ஒரு கல்லை எடுத்தாலும், தொல்லியல் துறையை அனுமதித்தால்தான் அதை எடுக்க முடியும்.

கோயிலின் மேற்குப் பகுதியில் உள்ள சுற்றுச் சுவரில் மரம் முளைத்துள்ளது, சுற்றிலும் முள் புதர்கள் சூழந்துள்ளதும் உண்மைதான். இதை அகற்றக்கோரி முன்பு இருந்த செயல் அலுவலர்களும், தற்போது நானும் தொல்லியல் துறைக்கு புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com