திண்டுக்கல்: திருவள்ளுவர் சிலை உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் அதை நிறுவுவதற்கு இடம் ஒதுக்காததால் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சிலை முடக்கப்பட்டுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன் தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள் திருவள்ளுவர் இலக்கியப் பேரவையைத் தொடங்கினர். இதன் தலைவராகப் புலவர் துரை முருகைய்யா இருந்து வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திருவள்ளுவருக்கு எங்குமே சிலை இல்லை. இதனால் நகரில் திருவள்ளுவர் சிலை அமைக்கத் தீர்மானித்து அரசு அலுவலர்கள், வணிகர்கள், அஞ்சலக ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினர்களிடம் நன்கொடையாகப் பணம் வசூல் செய்யப்பட்டது.
இதன் மூலம் கிடைத்த ரூ.2 லட்சத்தைக் கொண்டு மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பி ராஜேந்திரன் மூலம் 5 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலை கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதனிடையே, திண்டுக்கல் நகரில் சிலை அமைக்க இடம் கேட்டு இரண்டாயிரமாவது ஆண்டில் தமிழக அரசுக்கு சிலை அமைப்புக் குழுச் செயலர் இரா.கணேசன் விண்ணப்பித்தார்.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல்-திருச்சி-பழனி சாலைகள் சந்திப்பில் அரசுக்குச் சொந்தமான காலிஇடத்தில் சிலைக்கு பீடம் அமைத்தும், பூங்கா உருவாக்கிக் கொள்ளவும் நெடுஞ்சாலைத் துறை அனுமதி வழங்கியது. பின்னாளில் சாலையை அகலப்படுத்தி, செம்மைப்படுத்தும் நிலை உருவானால் அப்போது சிலை அமைப்புக் குழுவின் செலவிலேயே சிலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்குள்பட்டு அனுமதி கிடைத்தது. திண்டுக்கல் மாவட்டக் காவல் துறையும், நகராட்சியும் கூட தடையில்லா சான்று வழங்கியது. 30.3.2001-ல் இவ்விடத்தில் சிலையை அமைத்துக் கொள்ளலாம் என ஆட்சியர் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார்.
இதன் அடிப்படையில் 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் சிலைக்கான பீடம் அமைக்க கால்கோள் விழா நடத்தப்பட்டது.
இதனிடையே, சிலைக்கான பீடம் அமைப்பதற்கு முன்னரே இப்பகுதியில் சிலை அமைத்தால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் எனக்கூறி சிலை அமைக்க காவல் துறை தடை விதித்தது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து 1.8.2008-ல் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும் திண்டுக்கல்லில் சிலை அமைக்க அனுமதி கிடைக்காததால் 2.11.2009-ல் முதல்வர் கருணாநிதிக்கு விண்ணப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து 25.5.2010-ம் தேதி சென்னை நினைவகத் துணை இயக்குநர் அளித்துள்ள பதிலில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான காலி இடத்தில் பூங்கா அமைத்து அங்கு சிலை அமைக்க ஏற்கெனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நெடுஞ்சாலைத் துறையினரை அணுகி சிலை அமைத்துக் கொள்ள ஆவன செய்து கொள்ளுமாறு விழா குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டது.
அண்மையில் சென்னை நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளரை விழாக் குழுவினர் சந்தித்து அரசாணை குறித்து கேட்டபோது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து சிலை அமைப்புக் குழுச் செயலாளர் இரா.கணேசன் கூறுகையில், சிலையை உருவாக்கி பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. பீடம் அமைப்பதற்கான இடம் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. இதனால் எங்களது திருவள்ளுவர் தொடக்கப் பள்ளியில் சிலையைப் பூட்டி வைத்துள்ளோம். இப்பள்ளியில் சிலைக்கான பீடம் அமைத்து அதை நிறுவ வசதி உள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சிலை உருவாக்கப்பட்டுள்ளதால், பொது இடத்தில் அமைய வேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாகப் போராடி வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


