பாழாகி வரும் மாநகராட்சி தங்கும் விடுதி

திருச்சி, மே.3: பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் இந்தக் காட்சியைக் காண முடியும். பேருந்து நிலையத்தைச் சுற்றி பெரிய பெரிய ஹோட்டல்கள், விழிபிதுங்க வைக்கும் கட்டணங்களுடன். அதே ஊரில் குறிப்பிட்ட தொலைவுக்குள்
பாழாகி வரும் மாநகராட்சி தங்கும் விடுதி
Updated on
2 min read

திருச்சி, மே.3: பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் இந்தக் காட்சியைக் காண முடியும். பேருந்து நிலையத்தைச் சுற்றி பெரிய பெரிய ஹோட்டல்கள், விழிபிதுங்க வைக்கும் கட்டணங்களுடன்.

அதே ஊரில் குறிப்பிட்ட தொலைவுக்குள்ளேயே இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கட்டிவிடப்பட்ட தங்கும் விடுதிகள், குறைந்த கட்டணத்தில். ஆனால், உள்ளே செல்ல முடியாத அளவுக்கு மோசமான பராமரிப்புடன்.

அதெப்படி எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரியாக இப்படி? இருக்கத்தானே செய்கிறது. மாநிலத்தின் மையப் பகுதியான திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் இப்படியொரு தங்கும் விடுதி இருக்கிறது. மொத்தம் 33 அறைகள். அவற்றில் 5 அறைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழடைந்துவிட்டன.

மீதமுள்ளவற்றில் 19 அறைகள் இரு படுக்கை வசதிகள் கொண்டவை. 5 அறைகள் ஒரு படுக்கை வசதி கொண்டவை. 4 அறைகளில், மாநகராட்சி ஆகி இத்தனை ஆண்டுகளாகியும்- இப்போதுதான் குளிர்சாதன வசதி செய்யப்பட்டு வருகிறது.

பேருந்து நிலையத்துக்கு வெளியே இருக்கும் தனியார் ஹோட்டல்களில் சராசரியாக நாளொன்றுக்கு, குளிர்சாதன வசதி செய்யப்பட்டதென்றால் ரூ. 1,250, குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் ரூ. 750 கட்டணம்.

இன்னும் கொஞ்சம் ஆடம்பரமான நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வேண்டுமானால், குளிர்சாதன வசதி கொண்டதானால் ரூ. 1,500, குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் ரூ. 1,000. இவற்றில் சேவை வரியும் கூடவே வரும்.

இந்தக் கட்டணங்களுக்கு மத்தியில், மாநகராட்சி தங்கும் விடுதியில் இரு படுக்கை வசதி கொண்ட அறைக்கு ரூ. 200-ம், ஒரு படுக்கை வசதி கொண்ட அறைக்கு ரூ. 125-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன அறையின் பணிகள் முடிந்தால் எவ்வளவு கட்டணம் என்பது தெரிய வரும்.

ஆனால், "காசுக்கேற்ற தோசை' என்பதைப் போலத்தான் இருக்கிறது இங்குள்ள பராமரிப்பு. விசாலமான இடவசதி இருக்கிறது. ஆனால், தரைகளும், சுவர்களும் சுகாதாரமின்றி இருப்பதால், செருப்பின்றி காலைக் கீழே வைக்க முடியாது. வண்ணம் தீட்டி- சுண்ணாம்பு அடித்து சில பத்தாண்டுகள் இருக்கலாம்.

சில திருப்பங்களில் கழிப்பறை வாடை. பழைய கால மேன்ஷன்களை நினைவூட்டும் பொதுக் கழிப்பறைகள். அறைகளில் இருக்கும் கழிப்பறைகளும், அங்குள்ள தண்ணீர்க் குழாய்களும் தெருக்களில் இருக்கும் பொதுக் கழிப்பறைகளை ஒத்திருக்கும். படுக்கைகளில் மெத்தை இருக்கும், ஆனால் மெத்தென்று இருக்காது.

இப்படியிருந்தும்கூட, இந்த அறைகளில் இருந்து வந்த வருமானம் எவ்வளவு தெரியுமா? கடந்த 2008-09-ம் ஆண்டில் ரூ. 7.84 லட்சம். 2009-10-ம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ. 8.26 லட்சம். சரியாகப் பராமரித்தால்? வருமானம் நிச்சயம் ஆண்டுக்கு அரை கோடியைத் தொட்டுவிடும் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

"மாநகராட்சியின் வருமானத்தை அதிகரித்தால்தான் புதிய திட்டங்களைத் வகுக்க முடியும், கூடுதலாகப் பணியாளர்களை நியமிக்க முடியும்' என்ற வசனங்களை பலரும் பல இடங்களில் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தங்கும் விடுதியின் சுவர்களிடம் கேளுங்கள். என்ன செய்யலாம்? என்று அவை கூறும்.

33 அறைகளைக் கொண்ட இந்த விடுதியைப் பராமரிப்பது இருவர்தான். ஒருவர் வருவாய் உதவியாளர் நிலையிலுள்ள ஓட்டுநர். மற்றொருவர் அலுவலக உதவியாளர். அவ்வப்போது சுகாதாரப் பணியாளர்கள் வந்துபோவார்கள்.

கூடுதலான பணியாளர்களை இந்த விடுதிக்கென பிரத்யேகமாக நியமித்து, கணிசமான நிதியை ஒதுக்கி மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர், தனியார் ஹோட்டல்களின் அதிக கட்டணங்களைக் கண்டு அஞ்சுவோர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com