பார்வதி அம்மாளுக்கு இலங்கையிலேயே சிகிச்சை
சென்னை, மே 12: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு இலங்கையிலேயே சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாள் சென்னையில் சிகிச்சை பெற


சென்னை, மே 12: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு இலங்கையிலேயே சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதி அம்மாள் சென்னையில் சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஏப்ரல் 16-ம் தேதி இரவு சென்னை வந்தார். எனினும், வந்த விமானத்திலேயே அவரை இந்திய குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், இது குறித்து தமிழக அரசுக்கு எதுவும் தெரியாது என்றும், பார்வதி அம்மாள் மீண்டும் சிகிச்சைக்காக தமிழகம் வர விரும்பி கடிதம் எழுதினால், மத்திய அரசிடம் அனுமதி பெற்றுத் தருவதாகவும் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இதனையடுத்து பார்வதி அம்மாளிடம் இருந்து வந்த கடிதத்தைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.
இதனால் பார்வதி அம்மாள் மீண்டும் இந்தியா வரவும், 6 மாத காலம் தங்கி சிகிச்சை பெறவும் மத்திய அரசு அனுமதி அளித்தது. எனினும், மருத்துவமனையில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்பது உள்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதற்கிடையே, பார்வதி அம்மாள் கடந்த 10-ம் தேதி இரவு மலேசியாவிலிருந்து இலங்கை சென்றடைந்தார். இப்போது அவர் இலங்கையிலேயே தங்கி சிகிச்சை பெற முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் தினமணி நிருபரிடம் புதன்கிழமை தொலைபேசி மூலம் கூறியதாவது:
பார்வதி அம்மாளைச் சந்திப்பதற்காக மே 7-ம் தேதி இலங்கையிலிருந்து மலேசியா சென்றேன். மே 10-ம் தேதி இரவு அவரை அழைத்துக் கொண்டு இலங்கை திரும்பினேன். மே 11-ம் தேதி கொழும்பில் பார்வதி அம்மாள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு, அங்குள்ள இந்திய தூதரகத்தின் அரசியல் துறை செயலாளர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் வந்தனர்.
பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற இந்திய அரசு வழங்கியுள்ள அனுமதி குறித்தும், நிபந்தனைகள் குறித்தும் அவர்கள் தெரியப்படுத்தினர். நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால், தமிழகத்துக்கு வர பார்வதி அம்மாள் விரும்பவில்லை என்பதை அவர்கள் இருவரிடமும் தெரிவித்தோம்.
மேலும், கடும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு தமிழகம் வர பார்வதி அம்மாள் விரும்பவில்லை என்பது தமிழக அரசுக்கோ, இந்திய அரசுக்கோ எதிரான நடவடிக்கை அல்ல என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தினோம்.
இதற்கிடையே இப்போது இலங்கையிலேயே பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக புதன்கிழமை (மே 12) அவரை கொழும்பிலிருந்து வல்வெட்டித்துறைக்கு கார் மூலம் அழைத்துச் சென்றுள்ளோம்.
அவரது உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்ட பின், கனடாவில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன என்றார் சிவாஜிலிங்கம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...