குறைதீர் கூட்டம் பெயருக்கு நடத்துவதால் யாருக்கு லாபம்?

  சேலம்: ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம்கள், எளியோரின் உண்மையான குறைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ÷மக்களின் குறைகளுக்கு வ
குறைதீர் கூட்டம் பெயருக்கு நடத்துவதால் யாருக்கு லாபம்?
Updated on
2 min read

  சேலம்: ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம்கள், எளியோரின் உண்மையான குறைகளைத் தீர்ப்பதில் அக்கறை காட்டுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 ÷மக்களின் குறைகளுக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக 1969-ம் ஆண்டு மக்கள் குறை தீர்க்கும் முகாம் திட்டம் கொண்டு வரப்பட்டது.

 ÷அதன்படி மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோர் ஒவ்வொரு மாதமும் பல்வேறு துறை அலுவலர்களுடன் தங்களது ஆட்சி எல்லைக்கு உள்பட்ட கிராமத்துக்குச் சென்று மக்களிடம் மனுக்கள் பெற்று அந்த இடத்திலேயே குறைகளைத் தீர்க்க வேண்டும்.

 ÷இந்தத் திட்டத்தின்கீழ் சுழற்சி முறையில் தேர்வு செய்து உரிய முன்னறிவிப்பு செய்து மாதந்தோறும் இரண்டாவது புதன்கிழமைகளில் மக்களிடம் மனுக்களைப் பெற வேண்டும்.

 ÷மேலும் 1986-ம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்படுகின்றன. மக்களின் மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் குறைகளுக்கான விளக்கத்தையும் பெற்று உடனடியாகத் தீர்வு காண்பதற்காக இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.

 ÷கிராம அளவில், காவல் நிலைய அளவில், தாசில்தார் நிலையிலான அதிகாரிகளால் நிவர்த்தி செய்யப்படாத குறைகளே ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் ஆட்சியரிடம் மனுக்களாகக் கொடுக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் சராசரியாக 300 மனுக்கள் வழங்கப்படுகின்றன.

 ÷இவற்றில் பெரும்பாலான மனுக்கள் சமூக பாதுகாப்பு சார்ந்த ஓய்வூதியம், நலத்திட்டங்கள் வேண்டியும், பல்வேறு காரணங்கள் கூறி கீழ்நிலை அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்ட கோரிக்கைகளுமே ஆட்சியரிடத்தில் வருகின்றன.

 ÷ஆனால் இந்தக் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய தீர்வு, உரிய நேரத்தில் காணப்படாததன் விளைவு, ஏற்கெனவே மனு கொடுத்தவர்களே திரும்பத் திரும்ப மனு கொடுக்கக் கூடிய நிலைக்கு அவர்களை கொண்டு சென்றுள்ளது.

 ÷மனுக்கள் அளித்ததில் சாதனை: ஆட்சியரிடத்தில் திரும்பத் திரும்ப மனு கொடுப்பதில் உலக சாதனைக்கு போட்டியிடும் அளவுக்கு உயர்ந்திருப்பவர் சேலம்- தாதம்பட்டி, காந்தி நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அய்யனார் (92). பிரிட்டிஷ் காலத்தில் ராணுவ வீரராகவும், பஞ்சாயத்து கவுன்சிலராகவும் இருந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தை அபகரித்தவர்களிடம் இருந்து மீட்டுக் கொடுக்க வலியுறுத்தி இதுவரை 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்களைக் கொடுத்துள்ளார்.

 ÷சொந்த நிலத்தை விட்டு சாலையோரத்தில் கையேந்தி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதாகக் கூறும் இவர், தான் இறக்கும் வரையிலும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வருவேன் என்கிறார்.

 ÷வாரந்தோறும் வருபவர்கள்: இதேபோல, சேலம்- குகை, ராமலிங்கசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த செல்லமுத்து (75)- கிருஷ்ணம்மாள் (69) தம்பதியை திங்கள்கிழமைதோறும் மனு கொடுப்பவர்களின் வரிசையில் பார்க்காத அரசு அலுவலர்களே இருக்க முடியாது. இந்த தம்பதியருக்கு ஆதரவாக இருந்த இவர்களது மகன் அத்தியப்பன் (33) கடந்த 2008 டிசம்பரில் மனைவி, 3 குழந்தைகளுடன் இறந்துவிட்டார்.

 ÷ஆதரவற்று விடப்பட்ட இந்த வயதான தம்பதியர், வாழ்வாதாரம் இன்றித் தவித்து வருகின்றனர். எனவே நலிந்தோர் நிவாரணத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதியுதவி தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி, வாரந்தோறும் இவர்கள் மனு அளித்து வருகின்றனர். ஆனால் இந்த மனுக்கள் துறை மாறி மாறிச் சென்றாலும் அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

 ÷முதியோருக்கு மிரட்டல்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள மேட்டுப்பட்டி நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (85). இவரது கணவர் செங்கோடன் (90). இந்த தம்பதியரின் மகன்கள் இருவரும் பெற்றோரைத் தவிக்கவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். நடக்கவே சிரமப்படும் இவர்கள் அன்றாட உணவுக்காக பிறரிடம் கையேந்தியே வாழ்கின்றனர். எனவே முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தங்களில் ஒருவருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை அணுகிய பழனியம்மாளிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர் அதிகாரிகள். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதை புகார் மனுவாக ஆட்சியரிடம் கொடுத்துள்ளார் பழனியம்மாள்.

 ÷புகார் மனுவைப் பெற்ற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமின்றி, "அதிகாரி மீது லஞ்சப் புகார் கொடுத்த நீ எப்படி முதியோர் உதவித் தொகை பெற்றுவிடுவாய் எனப் பார்க்கிறோம்' என்று அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறி கண்ணீருடன் முறையிடுகிறார்.

 ÷இவர்களின் கண்ணீருக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com