சென்னை, நவ. 17: அரசு கல்லூரிகளில் பல மாதங்களாக முதல்வர்கள் நியமிக்கப்படாததால், கல்லூரிகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 69 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 42 கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த பல மாதங்களாக முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.
இந்தக் கல்லூரிகளில் முதல்வர் "பொறுப்பில்' மூத்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்காக கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் 72 பேர் கொண்ட பட்டியலை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.
இந்தப் பட்டியலில் அரசு கல்லூரிகளில் "ட்யூட்டர் டெமான்ஸ்டேட்டராக' பணியில் சேர்ந்து, உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்ற 40 பேரின் பெயர்கள் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.
ஆனால், தாற்காலிக "10ஏ(1)' அடிப்படையில் நேரடியாக உதவி பேராசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டு, பின்னர் பணி நிரந்தரம் பெற்ற 611 பேரில் பணி மூப்பு பெற்றவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த இவர்கள், நீதிமன்றம் சென்று கல்லூரி முதல்வர் நியமனத்துக்கு தடை உத்தரவு பெற்றிருப்பதோடு, தங்கள் பெயர்களையும் முறையாக சேர்த்து புது பட்டியல் வெளியிட வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக முதல்வர்கள் இன்றி கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து அரசு கல்லூரி மூத்த பேராசிரியர் ஒருவர் கூறியது:
நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்தாலும்கூட, கல்லூரி முதல்வர்கள் நியமனத்துக்குத் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் இதில் மேலும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் அரசிடம் சமர்ப்பித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள "ட்யூட்டர் டெமான்ஸ்டேட்டராக' பணியில் சேர்ந்து உதவி பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்ற 40 பேரில், 30 பேர் 2011-12 கல்வி ஆண்டு தொடக்கத்திலேயே ஓய்வு பெறுகின்றனர். இவர்களில் பணி நீட்டிப்பு பெறுபவர்களை, முதல்வராக நியமிக்க இயலாது.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடந்த 1996-ல் வெளியிட்ட (அரசாணை 111) விதிமுறையின்படி, கல்லூரி முதல்வர் பணியிடத்துக்கு பிஎச்.டி.,யை கல்வித் தகுதியாக நிர்ணயித்திருந்தது. இதற்கு பேராசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு விலக்கு அளித்திருந்தது. இதன்படி, பட்ட மேற்படிப்புடன் எம்.ஃபில்., கல்வித் தகுதி இருந்தால் போதும்.
ஆனால், தமிழக அரசு அளித்த கல்வித் தகுதி விலக்கு, 2010-11 கல்வி ஆண்டுடன் முடிவடைகிறது. இதுமட்டும் அல்லாமல், யுஜிசி 18-9-2010 அன்று புதிய விதிமுறையை (அரசாணை 350) வெளியிட்டு, அதுவும் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, கல்லூரி முதல்வர் பணியிடத்துக்கு பிஎச்.டி., கல்வித் தகுதி கட்டாயம் என்பது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானோருக்கு பிஎச்.டி., கல்வித் தகுதி கிடையாது.
இதுபோல் நேரடியாக உதவி பேராசிரியர்களாக நியமனம் பெற்றவர்களில் பலருக்கும் பிஎச்.டி., கல்வித் தகுதி இல்லை. இவர்களில் சிலர் இப்போதுதான் பிஎச்.டி., மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேரடியாக உதவி பேராசிரியர்களாக நியமனம் பெற்ற 611 பேரிடையே, பணி மூப்பு விவகாரத்தில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. கடந்த 1979 முதல் 1985 வரை தாற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட இவர்கள் அனைவரும், 16-12-1988 அன்று பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டு இடஒதுக்கீடு அடிப்படையில் பணி மூப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால், இவர்களில் 1985-ல் தாற்காலிக அடிப்படையில் பணியில் சேர்ந்தவர், 1982-ல் சேர்ந்தவரைக் காட்டிலும் பணி மூப்பு பெறுகிறார். இதை சிலர் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
இதற்கிடையே தமிழக அரசும் முதல்வர்கள் நியமனத்தில் தீவிரம் காட்டாமல் உள்ளது. இது மாணவர் நலனுக்கும் கல்லூரி வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையாது.
இப்போது 42 கல்லூரிகளிலும் நியமிக்கப்பட்டிருக்கும் பொறுப்பு முதல்வர்கள், தீர்க்கமான முடிவுகளை எடுக்கத் தயங்குகின்றனர். "மெமோ', விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால், நிதி சம்பந்தமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கின்றனர்.
ஏராளமான தன்னாட்சி சுயநிதி கல்லூரிகள் மாறிவரும் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய படிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன.
நடப்பு ஆண்டில் கல்லூரிகளில் புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய டிசம்பர் மாதத்துக்குள் யுஜிசி-க்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த முயற்சியிலும் பொறுப்பு முதல்வர்கள் அக்கறை காட்டுவதில்லை.
எனவே, அரசு கொள்கை ரீதியிலான முடிவுகளை மேற்கொண்டு கல்லூரி முதல்வர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

பாக்கெட் நாவல் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

கடல்காற்று வீசுவதால் கவலையில்லை... பந்துவீச்சு குறித்து ஷுப்மன் கில்!

கொடைக்கானலில் முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

