பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

மேலவைத் தொகுதிகளுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல்

சென்னை, செப். 30: தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான வரைவுத் தொகுதிகளுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் அனுமதி கிடைத்ததும் முறையான அறிவிப்பு வெளியாக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:57 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, செப். 30: தமிழகத்தில் மேலவை அமைப்பதற்கான வரைவுத் தொகுதிகளுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் அனுமதி கிடைத்ததும் முறையான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

  தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலவைக்கு மொத்தம் 78 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் மூலம் 26 பேரும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மூலம் 26 பேரும், ஆசிரியர்கள்-பட்டதாரிகள் தொகுதிகள் வழியாக தலா 7 பேரும், ஆளுநர் நியமனம் மூலம் 12 பேர் என மொத்தம் 78 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

  இதில், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆசிரியர்-பட்டதாரிகளுக்கென தனியாக தொகுதிகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படும். 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தொகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

  வரைவு தொகுதிகள் குறித்து அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்கு முன், கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்த்து ஒரு தொகுதியாகவும், திருச்சி-அரியலூர் இணைக்கப்பட்டு ஒரு தொகுதியாகவும் அமைக்கப்பட்டிருந்தது.

  ஆலோசனைகளுக்குப் பிறகு, கடலூர்-அரியலூர் இணைக்கப்பட்டு ஒரு தொகுதியாகவும், திருச்சி-பெரம்பலூர் இணைக்கப்பட்டு மற்றொரு தொகுதியாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

 உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் வாக்களிக்கவுள்ள 26 வரைவுத் தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சென்னை (இரண்டு இடங்கள்), திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்-அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல்-கரூர், கோவை-நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்-தேனி, மதுரை, திருச்சி-பெரம்பலூர், நாகப்பட்டினம்-திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை-ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி.

  சென்னை, தமிழகம்-வடக்கு, தமிழகம்-வடக்கு மத்தி, தமிழகம்-மேற்கு, தமிழகம்-மேற்கு மத்திய பகுதி, தமிழகம்-தெற்கு மத்திய பகுதி, தமிழகம்-தெற்கு என ஆசிரியர்-பட்டதாரி தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

  சட்ட அமைச்சகம் ஒப்புதல்: அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, மேற்கண்ட தொகுதிகளை தேர்தல் ஆணையம் இறுதி செய்து மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தனது பரிந்துரைகளை வழங்கியது. வரைவு செய்யப்பட்ட தொகுதிகளை ஏற்றுக்கொண்டுள்ள சட்ட அமைச்சகம், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.

  குடியரசுத் தலைவரின் அனுமதிக்குப் பிறகு தொகுதிகளின் அறிவிப்பு முறையாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள்: தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் எத்தனை பேர் என்பது குறித்து 2001-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

  ஆசிரியர்கள் 3.5 லட்சம் பேரும், பட்டதாரிகள் 12 லட்சம் பேரும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரின் அனுமதிக்குப் பின், வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும். ஆசிரியர் மற்றும் பட்டதாரிகள் தாங்களாக முன்வந்து வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க அறிவிப்பு வெளியிடப்படும்.

 தாலுகா அளவில் இதற்கென அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு, இறுதி பட்டியல் வெளியான பின் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். இதன்பின் தேர்தல் நடத்துவது எளிது என்கின்றனர் அதிகாரிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.