கள்ளக்குறிச்சி: எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் பொன்பரப்பட்டு கிராம மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.
÷கள்ளக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொன்பரப்பட்டு கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய 20 ஆண்டு முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியில் இருந்துதான் குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது.
÷இந்த தொட்டியின் அடிபாகம், தூண்களின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளன. எப்போது இடிந்து விழுமோ என அப்பகுதி மக்கள் அஞ்சுகின்றனர். இந்த தொட்டியை மாற்றக்கோரி ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் கோரிக்கை வைத்து ஒரு வருடம் ஆகிவிட்டது.
÷சங்கராபுரம் எம்எல்ஏ, ஊராட்சித் தலைவர் ஆகியோர் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் ஓராண்டாகியும் இதுவரை அதிகாரிகள் யாரும் பொன்பரப்பட்டு கிராமத்து பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.
÷இந்நிலையில் நீர்தேக்கத் தொட்டியின் உறுதித் தன்மை நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது.
÷இந்த கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளின் முன்பும், சாலையிலும் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசுத் தொல்லை அதிகமாகி, பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
÷இந்நிலையில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படும் குழாய்கள் "பாசி' பிடித்துள்ளதால் காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகிறது.
÷இந்த பிரச்னைகளில் முதன்மையாக தீர்க்கப்பட வேண்டியது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிதான். அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பு.